Sunday, August 28, 2011

பொன்னீலன் எழுதிய மறுபக்கம் நாவல் கலைநயம் மிளிறும் ஆவணப் பெட்டகம்


- கி.வீரமணி

தோழர் பொன்னீலன் என் பாசத்திற்குரிய இனிய நண்பர். 1985 எனது நினைவு. உலக சமாதான  காங் கிரசு டென்மார்க் தலைநகரில் கோபன்ஹேகனில் நடந்தபோது நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் எழுதிய மறுபக்கம் நாவலை என்னிடம் அன்போடு அளித்து படிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பொன்னீலன் அவர்கள் பொதுவுடைமைச் சிந்தனையாளர்; இனிய பண்பாளர்; நாகர்கோவிலுக்கு அருகில் மணிக்கட்டிப் பொட்டல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பொன்னீலன், நாடறிந்த நல்ல எழுத்தாளர். மார்க்சியக் கலை இலக்கியக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்.
ஊற்றில் மலர்ந்தது, கரிசல், கொள்ளைக்காரர்கள், தேடல், புதிய மொட்டுகள், புதிய தரிசனங்கள் முதலிய நாவல்களையும், காமம் செப்பாது என்ற சிறுகதைத் தொகுப்பினையும், ஜீவா என்றொரு மானுடன் உள்ளிட்ட பல வாழ்க்கை வரலாற்று நூல்களையும், தமிழ் இலக்கியமும் திராவிட இயக்க  சித்தாந்தமும் உள்ளிட்ட பல ஆய்வு நூல்களையும், பல மொழி பெயர்ப்பு நூல்களையும் படைத்துள்ளார். சாகித்திய அகாடமி விருது, தமிழ்நாடு அரசு விருது உள்பட பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றார் நண்பர் பொன்னீலன். இவரது நூல்கள் பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன. நாஞ்சில் நாட்டுத் தமிழில் மணிக்குரலில் சரளமாய் பேசும் பொன்னீலன் சொற்பொழிவில் கருத்துகள் அருவியாய் கொட்டும்.
மறுபக்கம் நாவல் நாஞ்சில் நாட்டின் இருநூறு ஆண்டுகால வரலாற்றையும், அதன் மரபுத் தொடர்ச்சி யாக இன்றைய கால சமூக பண்பாட்டுச் சூழலையும் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றது.
மறுபக்கம் நாவலை படிக்கின்றபோது தோழர் பொன்னீலன் உழைத்த உழைப்பு தெரிகின்றது. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நூலகம், சென்னை கன்னிமாரா நூலகம், எழும்பூர் ஆவணக் காப்பகம் முதலிய இடங்களிலிருந்து வரலாற்றுச் செய்திகளைக் கவனமாகச் சேகரித்திருக்கின்றார்.
பொன்னீலன் அவர்கள் குமரி மாவட்ட சமூக வரலாற்றை அறிந்துகொள்வதற்குக் களப்பணியும் நிகழ்த்தி இருக்கின்றார். செய்திகளைத் தொகுப்பதற்காக ஒரு விரிவான வினா நிரல் தயாரித்து மாவட்டத்தில் நூறு பேருக்கு அனுப்பி இருக்கின்றார். அதில் தகவலாளர் களின் குடும்பம், சாதி, தொழில், தெய்வம், ஊர்த் தலைமை, வட்டாரத்தில் நடந்த அரசியல் போராட்டங் கள், சாதிமதக் கலவரங்கள், கலவரத்தில் அவரின் நிலை, வட்டாரப் பெருமைகள், அந்த ஊரோடு தொடர்புடைய அரசியல் நிகழ்வுகள், இப்படிப் பல அம்சங்களைக் குறித்த வினாக்களை இணைத்து ஆதாரங்களை அறிவியல் முறைப்படி திரட்டி இருப்பது பாராட்டிற்குரிய முயற்சியாகும். மண்டைக்காடு  கலவரத்துடன் தொடர்புடைய வட்டாரங்களைச் சேர்ந்த இரு பக்க மக்களையும் நேர்கண்டு அவர்களின் தகவல்களைப் பெற்றிருக்கின்றார்.
நாவலின் முதுகெலும்புத் தொடராக அமைந்தது நீதிபதி பி. வேணுகோபால் விசாரணைக்குழு அறிக்கை என்று நன்றிப் பெருக்கோடு பொன்னீலன் எடுத்துரைக்கின்றார். 15.3.1982 அன்று மண்டைக்காடு கலவரம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கியிருக்கின்றேன். 18.3.1982 அன்று குமரி மாவட்ட கலவரங்களும் ஆர்.எஸ்.எஸ் பங்கும்என்று ஓர் அறிக்கையில் நான் தெரிவித்த கருத்துகளை மறுபக்கம் நாவலில் பரவலாகக் காணமுடிகிறது.
மறுபக்கம் நாவலில் திருவிதாங்கூர் வரலாறு, மண்டைக்காட்டுக் கலவரம், அடிமைமுறை ஒழிப் பிற்கான போராட்டம், தோள்ச்சீலைக் கலகம், அக்கினிக் காவடி போராட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டம், மணியங்கர எதிர்ப்புப் போராட்டம், உலக்கைப் போராட்டம், வைகுண்ட சாமி என்ற சமூகப் போராளி என்று பல்வேறு தகவல்கள் வரலாறாகப் பதிவு பெறுகின்றன.
மறுபக்கம் நாவல் குடும்ப வரலாறாகவும், குமரி மாவட்ட வரலாறாகவும், சாதிக் கலவரத்தைச் சித்தரிக்கும் ஓவியமாகவும், படிப்பினை நல்கும் பாடமாகவும், நாவல் இலக்கியமாகவும் திகழ்கின்றது. நாவல் சொல்லும் செய்தி என்ன? என்பதை, மண்டைக் காட்டுக் கலவரம் என்ற புள்ளியில் தொடங்கி, கலவரத்தின் உளவியல், நடுநிலையாளர்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் பயங்கரம், அரசு எந்திரத்தின் தந்திரமான செயல்பாடுகள், இத்தனை கொடூரங்களுக் கிடையிலும் செயல்படும் மனித நேயம் என நாவலின் ஒரு பயணத்தை அடையாளப்படுத்தலாம். மண்டைக் காட்டுக் கலவரம் மீனவர்கள், நாடார்களிடையே நடத்த மோதல். இது இந்து - கிறிஸ்தவ மோதலாக விளக்கப்பட்டு, இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு வகுப்புவாத அரசியலுக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டது. மோதும் மதப் பிரிவினர்களிடையே செயல்படும் சாதித்தளம், சாதிமனம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. மத மோதலாகக் கட்டமைக்கப்பட்ட சாதிகளின் முரண், சாதிக்குள்ளே செயல்படும் முரண், மீனவர்கள், நாடார் களிடையே புழுக்கையர்கள் என்ற பிரிவினரைப் பற்றிய மதிப்பீடு, இக்கலவரத்தின் போது மூன்று இஸ்லாமியர்கள் மூன்று விதமாக செயல்படும் காரணம் என நாவல் கலவரத்தில் செயல்பட்ட சாதி அரசியலை முன் வைக்கிறது.
ஒவ்வொரு சாதியும் தம் சமூக இடத்தை இழந்து, தீண்டத் தகாதவர்களாக, கீழானவர்களாக ஒடுக்கப்பட்ட வரலாறே இந்திய  யதார்த்தம், இந்திய யதார்த்தம் என்பதே சாதிய யதார்த்தம்தான் என, குமரி மாவட்ட சமூக அசைவியக்கம் வழி வெளிப்படுத்துவது இந்நாவலின் மிக முக்கியமான விவாத மய்யமாகிறது. மோதல்கள் மூலம் மேல்சாதிகள் தம் இருப்பை எப்போதுமே உறுதிப்படுத்து வார்கள். தம் பீடங்களை இழந்த ஆதிக்கச் சாதிகள் மீண்டும் தம் வல்லாண்மையை நிலை நிறுத்த இந்துமதம் வலுவான கருவியாக மாறிக் கொள்கிறது.
மறுபக்கம், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையே உள்ள காலாகால உறவை வெளிப்படுத்தும் தொன்மங்களை மய்யக்கதையாடலோடு வலுவாக இணைத்து, வகுப்பு வாதத்தின், வைதீகத்தின் அரசியல் தந்திரத்தைக் கட்டுடைக் கிறது. இது நாவலின் மிகக் காத்திரமான பயணமாக இருக்கிறது.
இந்தியா உருவாக்கம் நாவலின் இன்னொரு விவாத மய்யம். சாதிப்படிநிலையைக் காப்பாற்றி இந்துக் கட்ட மைப்பை முன்னிலைப்படுத்தும் இந்து ராஷ்ட்ர உருவாக் கம், சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து இந்துப் பண்பாடு என்ற ஒன்றில் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் இணைத்துக் கொள்ளும் பண்பாட்டு தேசியத்தின் பெயரால் நடைபெறும் உருவாக்கம், இதுவும் இந்து ராஷ்ட்ரத்தின், இந்துத்துவத்தின் இன்னொரு முகம்தான்.
இதற்கு மாற்று என்ன? தேசிய இனங்களின் மொழி சார்ந்த அடையாளங்களை முன் வைத்து சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒற்றுமை என நாவல் தன் விவாதத்தை இன்னொரு புள்ளியிலும் குவிக்கிறது என்று சி. சொக்கலிங்கம் நாவலின் உள்ளடக்கத்தைத் துல்லியமாய்ப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
மறுபக்கம் நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்பு வாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்  வைக்கும் நாவலாக - எனப் பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும் என்ற எஸ். பாலச்சந்திரனின் கூற்று முற்றிலும் பொருத்தமானது.
அடித்தள  மக்களே இந்நாவலில் பாத்திரங்களாக உலா வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையையும், போராட் டங்களையும் பொன்னீலன் அவர்கள் மிக அருமையாகச் சித்திரித்திருக்கின்றார்.
நாவலில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் தத்தம்  கொள்கையில் நின்று பேசுவதை பொன்னீலன் அவர்கள் சிறப்பாக வடித்திருக்கிறார். பனைவிளை கிராமத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் பிள்ளையார் சிலையை வைக்க முயற்சி நடக்கின்றது. அதனை எதிர்க்கின்ற செல்வராசு பாத்திரம், இந்தியா ஒரு நாடல்ல, நாடுகளோட ஒன்றியம். இங்கே பலமதம், பலமொழி, பலதெய்வம், பல பண்பாடு என்னுடையது எனக்கு முக்கியம். உன்னுடையது உனக்கு முக்கியம். நமக்குச் சம்பந்தமில்லாத, நம்ம அம்மனுக்குச் சம்பந்தமில்லாத பிள்ளையாரைக் கொண்டு நம்ம அம்மை தலைமேல ஏன் நிப்பாட்டுறிய?  என்று முழங்குவதும், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு அவ்வூர் இந்து  இளைஞர் இயக்கத்தின் பொதுச்செயலாள ராக இருக்கும் சதாசிவம், பிள்ளையார் தானப்பா நம் முடைய பண்பாட்டு அடையாளம் என்று பேசுவதும், தங்கமுத்து என்ற பாத்திரம், அது பண்பாட்டு அடையாள மில்லை, நம்ம அடிமைத்தனத்தின் அடையாளம். பிள்ளையார் வந்தா, அதோட கும்பாபிசேகம் வரும், மெல்ல ஒரு அய்யர் நுழைவாரு. அவரோட சமஸ்கிருதம் நுழை யும். சர்க்கரைப் பொங்கல் நுழையும். காலங்காலமாக நம்மளக் காத்து ரச்சிக்கின்ற முத்தாரம்மனும் மற்ற தெய்வங்களும் கூண்டோட அடிமைப்பட்டு போயிருவாங்க! பிள்ளையார் வந்தா ஊர்வலம் வரும். ஊர்வலம் வந்தா கலவரம் வரும் என்று விளக்குவதும் அருமையான உரையாடலாகும். எதிரும் புதிருமான கருத்துகளால் இந்நாவல் கட்டமைக்கப்பட்டு வாசக சுதந்திரத்திற்கான இடத்தையும் தருகின்றது.
பொன்னீலன் எழுத்தில் நையாண்டியும், கேலியும் நளினமாய்த் தவழ்கின்றது. இந்து இளைஞர் இயக்கம் வளர்கின்றது. முத்தாரம்மன் கோயிலுக்கு 108 திருவிளக்கு பூசை வருகிறது.  கீதா ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் சொல்ல மற்றவர்கள் ஒலித்தடுமாற்றங்களுடன் அதையும் ஒப்புவிக் கிறார்கள். அம்மனை உற்றுப் பார்க்கிறார் வெங்கடேசன். தமிழ் தவிர எதுவும் அறியாத முத்தாரம்மன் தன் செல்லக் குழந்தைகள் என்ன பிதற்றுகிறார்கள் என்று புரியாமல் திருதிருன்னு விழிக்கிறார்! என்று, எழுதும் பொன்னீலன், மக்கா உன் முப்பாட்டன் என்னைய வேதக்காரன் கிட்ட இருந்து மீட்டான். பாட்டன் வைகுண்டசாமி கிட்ட இருந்தும்  மீட்டான். உன் அப்பன் சமஸ்கிருதத்துக்கிட்டே இருந்து மீட்டான். நீ என்னைய இப்படிக் கைவிட்டுட்டு வேடிக்கை பார்க்கிறியே என் கதை இவ்வளவுதானா? அவர் கண்களிலிருந்து கண்ணீர் முத்துமுத்தாக உதிர்கிறது என்று காலந்தோறும் நடைபெற்ற  போராட்டத்தை பொன்னீலன் எடுத்துரைக்கின்றார்.
மண்டைக்காட்டுக் கலவரத்திற்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து, அக்கலவரம் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் சேதுமாதவன் என்ற ஆராய்ச்சியாளனிடம் அலெக்ஸ், ஆராய்ச்சி பண்ணணுமா மொதல்ல மதம் - சாதிக்குள்ள இருந்து ஆய்வாளன் வெளியே வந்திரணும்... என்று கூறுவது அடிப்படை உண்மையாகும். இங்கு  நிகழ்த்தப்படுகின்ற ஆய்வுகளெல்லாம் சாதி, மத  வட்டத்திற்குள்ளேதான் நிகழ்த்தப்படுகின்றன. கொற்கை மீனவர்களின் ஆதித்தலைநகரமாக இருந்தது. கடற்கரையில் ஏராளமான பொருள்கள் குவிந்து கிடந்தன. பல நாட்டு வணிகர்கள் கொற்கைத் துறைமுகத்தில் குவிந்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன. வளமான வாழ்வுக்குச் சொந்தக்காரர்களாகத் திகழ்ந்த மீனவர்கள் சமூகத்தில் கீழ்நிலைக்குச் சென்றதன் காரணத்தை பொன்னீலன் அவர்கள் அலெக்சு பாத்திரம் வழியாக விவரிக்கின்றார்.  எல்லாம் வைதீகத்தோட திருவிளை யாடல்! சனாதனம் இங்க நுழைஞ்சிது. நுழைஞ்சி கடற்பயணம் தீட்டு என்குது. எங்க கடலாதிக்கமும் விழுகுது. பாருங்க, திரைகடலோடியும் திரவியம் தேடினது ஒரு காலம், கடலே தீட்டாகி, நாங்க கீழானது இன்னொரு காலம். அப்றம் மீன்பிடிச் சதினால நாங்க இன்னும் கீழே போனோம். முத்து வணிக உரிமையும் எங்க கிட்ட இருந்து போச்சு. சிறுத்துப் போய் நெத்திலி பிடிச்சுக்கிட்டு கிடக்கோம் என்று வீழ்ந்த வரலாற்றை படம் பிடிக்கின்றார்.
மண்டைக்காட்டு கலவரத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சில்வஸ்தர், பத்ரோஸ், எலியாஸ், அமிர்தய்யா, அந்தோணி அடிமை, அம்புரோஸ் ஆகியோர் இறந்தார்கள். கலவரம் எப்படி வந்தது? என்று ஆய்வாளன் சேது கேட்க, அலெக்ஸ் பாத்திரம் இந்து - கிறிஸ்தவ செயல்பாட்டைப்பற்றிக் கூறுவதைப் பொன்னீலன் பேச்சு மொழியில் அமைக்கிறார்.
கலவரம் வரப் போகுதுன்னு ரெண்டு மாசத்துக்கு முன்பே பேச்சு அடிபடத் தொடங்கியாச்சி. அதிலயும், பிப்ரவரி மாசம் நாகராஜா கோயில்ல இந்து எழுச்சி மாநாடு நடந்த உடனேயே, எங்க பார்த்தாலும் ஒரே பேரு, இந்த ஆண்டு மண்டைக்காட்ல கலவரம் நிச்சியம்!விவேகானந்தா கேந்திரம் கால் ஊனி வலுத்ததுமே, ஆர்.எஸ்.எஸ். காரனுவ கள்ளப் பிராந்து களைப் போல மாவட்டம் பூரா வட்டமிடத் தொடங்கி யாச்சி, தொடர்ந்து மாவட்டங் களல்ல  பல இந்துக் கோவில்களிலும், ஆர். எஸ். எஸ். சாகா நடக்கத் தொடங்கியாச்சி. காக்கினால் சட்டை வெள்ளை முண்டா பனியன் போட்டு, கம்புகள வீசிக்கிட்டு, அவனுவ கபாத்து பழகுறதப் பாக்க எங்களுக்குப் பயமா இருக்கு. யார அடிக்கறதுக்கு இதெல்லாம்? அந்த சாகாக்கள்லதான் எங்களைப்பற்றி அவனுவ இல்லாததும் பொல்லாததும் சொல்லி இளைஞர்களைத் தூண்டி விட்டானுவ. குறிப்பா மேரி மாதாவைப் பற்றி மைக்கில ரொம்பத்தரக்குறைவாகப் பேசுவாங்க என்று அப்போதைய நிலவரத்தை எடுத்துரைத்த அலெக்ஸ், சமீபகாலங்கள்ல கடக்கரைகள்லயும் பெந்தைய கோஸ்துக் கிறிஸ்தவம் பரவி வருது. பெந்தைய கோஸ்த் கூட்டங்கள்ல அவனுவ என்ன செய்யிறானுவ? இந்துச் சாமிகளப் பேய் பிசாசுன்னு கேலி செய்யிறானுவ. மைக்கு வச்சி அவன் பேசுறது ஊரெல்லாம் கேக்கும். கேட்டுக்கிட்டிருக்கக் கூடிய இந்து என்ன நினைப்பான்? பாத்தியா, பாத்தியா, நம்ம சாமிகளப் பேயிங்கான் கிறிஸ்துவன். பேசினவன மட்டுமா அவன் வெறுப்பான், எல்லாக் கிறிஸ்து வனையும் தான் வெறுப்பான். இதுதான் இந்தப்பக்கம் நடந்தது என்று மதக்கலவரத்திற்கான அடிப்படையைத் தெளிவுபடுத்துகின்றார். இந்த ஸ்பீக்கர் இருக்கே, கிராமப் புறங்கள்ல பெரும்பான்மையான சண்டை உண்டாக் குறது இந்த இழவு தான் என்று அலெக்ஸ் சாடுவது பொருத்தமானது.
மதம் மாறியவர்களை ஆர். எஸ். எஸ். காரர்கள் கேவலமாக விமர்சித்ததை இந்நாவலில் பொன்னீலன் சித்திரிக்கின்றார். வைகுண்டப் பெருமாள் சொல்கின்றார்: இந்து அமைப்புகள் பேச்சாளர்களைக் கட்டுப்பாடு இல்லாமப் பேசவிடுவாவ. அவிய கிறிஸ்தவிய புண்படும்படி நிறையப் பேசியிருக்காவ. நம்ம உறவினர்கள் பலர் மதம் மாறியிருக்காவ. அவயளப் பற்றி மட்டமாப் பேசும்போது, நமக்கும் வருத்தமா இருக்கும். பிஸ்கோத்துக்கு மதம் மாறினான், பால்ப் பொடிக்கு மதம் மாறினான், இப்படியெல்லாம் பேசுவாவ. ஆழமாப் பார்க்கும்போது, இது ஒரு சமுதாயத்தையே கொச்சைப்படுத்துற விசயம். மீனவர்களையும் இது புண்படுத்திச்சி......ஏதோ கிறிஸ்துவர்கள் எல்லோரும் அன்னிய நாட்டுக்கார என்கிற மாதிரிப் பேசுவாவ. அவியளுக்கும் இந்த நாடு உரிமைப்பட்டதுதானே! அவன் ஏன் மதம் மாறியிருப்பான்? சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள்.....நாம பார்க்காததா! அவியகிட்ட அனுதாபம் காட்ட வேண்டியிதிருக்கே தவிர, வெப்ராளப்பட எதுவும் இல்ல. உண்டியல்ல வசூல் இருபது லட்சம், முப்பது லட்சம் என்கிறா, பள்ளிக்கூடத்தைக்கட்டு, எளியவனுக்கு சோறுபோடு, அவன உன்னோட சேத்துக்க , யாராவது  தடுக்கப் போறாவளா? அதச் செய்யாம, செய்றவன ஏசுறியே? என்று வைகுண்டப் பெருமாள் கண்டிக்கின்றார்.
நாடார்களும், மீனவர்களும் அடிக்கடி சண்டை போடுவாவ. அப்பறம் ஒண்ணு சேர்ந்திருவாவ. கலவரமாப் பரவாது. ஆனா இந்தக் கலவரத்துக்கு மதச்சாயம் பூசினதினால மண்டக்காட்டில இருந்து கன்னியாகுமரி வரை பரவிச்சி. வடநாட்ல இருந்து ஆர். எஸ். எஸ் காரன் ஆயுதங்களோட வந்திருக்கான்னு கடக்கரை பூரா வதந்தி. கப்பல்ல ஆயுதம் வந்து இறங்கிச்சி.
நான் கண்ணால பாத்தேன்னு உள்நாடு பூரா வதந்தி. இதுக தான் காரணமே ஒழிய மற்றபடி காரணமா சொல்ல எனக்கு எதுவுமே தோணல்ல என்று மதச்சாயம் பூசப்பட்டதால் ஏற்பட்ட சோகத்தை பொன்னீலன் வெளிப் படுத்துகின்றார். மறுபக்கம் கதைப்போக்கில் பொன்னீலன் அவர்கள் 15.2.1982 தேதியிட்ட ஆர். எஸ். எஸ். வெளியிட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்துக்காட்டுகின்றார். அதில் குமரி மாவட்டமே கிறிஸ்தவ அலைக்குள் மூழ்கிவிடும் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் கொஞ்ச நாட்கள் போனால், நாகர்கோவில் சவேரியார் கோவிலாகலாம். தக்கலை தாமஸ் நகராக லாம். ஏன், கன்னியாகுமரி மாவட்டமே கன்னிமேரி மாவட்ட மானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற துண்டுப் பிரசுரத்தை ராசாமணி காட்ட அலெக்ஸ் பாத்திரம் மூலம் அருமையான வாதத்தை முன்வைக் கின்றார் பொன்னீலன் அவர்கள், பெருவுடையார் கோவில பிரகதீஸ்வரர் ஆலயமா மாத்தினானே! கள்ளழகர சோம சுந்தரரா மாத்தினானே! திருமறைக்காட்டை வேதாரண் யமா மாத்தினானே. ஏன், ஆற்றையெல்லாம் நதியாக்கி, மலையையெல்லாம் கிரியாக்கி, அம்மனையெல்லாம் அம்பாளாக்கினானே. அதப்பற்றியெல்லாம் ஒண்ணும் பேச மாட்டேங்கிறிய? என்று பண்பாட்டுப் படையெடுப்பை படமாக்குகின்றார்.
ஆர். எஸ். எஸ் குரலில் ராசாமணி என்ற  பாத்திரம் 105 ஆம் பக்கத்தில் பேசுகின்றது. பத்துக் கோடிய வச்சிக் கிட்டே, அவன் படுத்துற பாடு தாங்க முடியல. கோயமுத்தூர் குண்டுவெடிப்பு, மேலப்பாளையம் கொலை, அது இதுன்னு நிம்மதியா ஒறங்க முடியல்ல. இதுக்கு மேலேயும் ஏழை எளியதுகள ஏமாத்தி பணங்குடுத்து மதம் மாற்றினா..... அட கடவுளே, நாட்டையே முஸ்லீம் நாடுன்னு அறிவிச்சிரு வானே!எல்லாரையும் தாடி வையி. முகமுடிபோடு என்பானே! மனுசன் மூச்சு விட முடியுமா? ஒரு கோவிலை விட்டு வைப்பானா? உலகத்தில எங்க பாருங்க, தீவிரவாதி யாரு? இஸ்லாம் காரன்தான். இறக்கமில்லாதவனுவ. அரக்கனுவ, கொலைகாரனுவ. அருளாளன் அன்புடை யோன் என்கிறான் அல்லாவ. பண்ணுற கொலை எல்லாமே அல்லா பேரால! என்று குற்றம் சுமத்த, அலெக்ஸ் பாத்திரம் பதிலடி தருகின்றது. அப்படின்னா, பாபர் மசூதியை இடிச் சவன் யாரு? இந்திரா காந்தி கொலையோட, ஆயிரக்கணக் கான சீக்கியர்களைக் கொன்னவன் யாரு? குஜராத்தில கர்ப்பிணி வயித்தக் கீறி, பிள்ளைய உருவி, ஆகாயத்தில வீசி, வாளால ஏந்தினானே அவன் யாரு? இவனவளும் இஸ்லாம் தானா? என்று மறுமொழியில் நியாயம் தெறிக்கின்றது.
223ஆம் பக்கத்தில் முத்துவும், சேதுவும் நிகழ்த்துகின்ற உரையாடல் சிந்திக்கத்தக்கது.
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை நேரே பார்த்து அனுபவசிச்சவன் நான். அத நினைச்சா இப்பவும் என் மனசு நடுங்குது.
பாபர் மசூதியை இடிச்சத நினைச்சா எனக்குச் சோறு இறங்க மாட்டேங்குனு அவனைத் திருப்பியடிக்கிறார் முத்து.
உங்களுக்குத் தெரியாது. முஸ்லீம் என்கிறவன் இறக்கமில்லாதவன். சிங்காசனத்தப் பிடிக்கிறதுக்காகச் சொந்தத் தகப்பனையும் கொல்லக் கூடியவன். வேற எங்கே யும் போகவேண்டாம். பக்கத்து பாகிஸ்தான்ல பதவிக்காக வரிசை வரிசையாக எத்தனக் கொலை நடந்திருக்கு.
ஏன் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்னவன், இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்னவன், ராஜீவ் காந் தியைச் சுட்டுக் கொன்னவன் எல்லாவனும் முஸ்லீமா? காட்டமாய்ப் பதிலடி அடிக்கிறான் முத்து.
சார்லஸ் மீட் என்பவர் இங்கிலாந்து நாட்டவர். 1850 வாக்கில் தென் திருவாங்கூரில் வேதக்காரப் பள்ளிக் கூடங்களில் தலைமைக் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தபோது அவர் ஆற்றிய பணி மகத்தானது.
இன்று முதல் புலையர் ஆண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு குழந்தைக்கு மாதம் ஒரு பணம் வீதம் சம்பள உயர்வும், பெண் குழந் தைகளைச் சேர்க்கும் ஆசிரியர்களுக்கு ஒரு குழந்தைக்கு மாதம் ஒன்றரைப் பணம் வீதம் சம்பள உயர்வும், பணி செய்யுங்காலம் முழுவதும் தரப்படும் என்று சார்லஸ் மீட் பிறப்பித்த உத்தரவு மறுபக்கம் நாவலில் பதிவு செய்யப்பட்டி ருக்கின்றது. அவரது மனைவி ஜோஹன்னாவின் தொண் டுள்ளத்தை பொன்னீலன் அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.
மருத்துவமனைகளைக் கட்டி மக்களுக்கு சேவை செய்த மீட், பேறுக்கு வருகின்ற பெண்களை அடுத்தடுத்து படுக்க வைக்கின்றார். பார்ப்பனப் பெண், சூத்திரப் பெண், சாணார் பெண் என வரிசை தொடர்கின்றது. இந்த நாட்டிற்கு நாம் செய்த திருப்பணிகளிலெல்லாம் உயர்ந்தது இந்த நல்லிணக்கப் பணிதான் என்று பெருமை கொள்கின்றார்.
வெள்ளையர்கள் செய்த தொண்டில் விதவைத் துயர் ஒழிப்புப் பணி மிகவும் முக்கியமானது. என்ன ஜனங்கள்! இத்தனை விதவைகளைக் கொண்ட சமூகம் என்றாவது உருப்படுமா? இருபதில் விதவை. எழுபதில் கிழவி. இடையில் வாழ்வு? யாருக்கும் மனச்சாட்சி இல்லையே! என்று சார்லஸ் மீட் உருகுவதை பொன்னீலன் நாவலில் எடுத்துரைக்கின்றார்.
கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கியவுடன் ஜாதிக்கட்டு மெல்ல மெல்ல உடையத் தொடங்குகின்றது. அடிமைப் பட்டுக் கிடந்த ஜாதிகளுக்கு சமத்துவமாக நடத்தும் மதங் களின் மீது நம்பிக்கை பிறக்கிறது. இந்து மதத் தீவிரவாதிகள் பொறாமையுடன் புழுங்குவதை தோழர் பொன்னீலன் அவர்கள் மறுபக்கம் நாவலில் பாறை இடுக்குகள்ல ஓந்தி போல் ஒடுங்கிக் கிடந்திய, எங்க நிழலப் பார்த்தே நடுங்கினிய, எத்துக்குத்தா எதிரே வந்தா, பெட்டைக் கோழி போல பணிஞ்சி குனிஞ்சிய, சொன்ன ஊழியத்தைத் தப்பாமச் செய்திய, இந்த அன்னிய தேசத்து வேதக்காரப் பயலுக கொடுத்த தைரியத்திலதான இப்ப இப்படியெல்லாம் திமிரேறிப் போனிய...
முலையை மூட ரவிக்கை, உடம்பு மூட சீலை, தலை மேல முக்காடு... இடுப்புல புத்தகம்... பிரியனையும் புள்ளையையுங் கூட்டிக்கிட்டு நீங்க நடக்கிற நடை, எங்க மகாராணியே தோத்துப் போவாகளே! இவ்வளவு திமிர் எங்கிருந்துளா வந்தது?
பனைமட்டை சுமந்துக்கிட்டுத் திரிஞ்ச கருக்கு மட்டை நாயிகளெல்லாம் இப்ப புத்தகங்களைச் சுமந்துகிட்டு பள்ளிக் கூடம் போகுது... அங்க அஞ்சி வருசம் படிச்சா, அகில உலகத்திலயும் அதுகளுக்கு வேலை... நாயிக இந்துக் கடவுளுகளக் கேவலப்படுத்துது... ஆனா அதுக வீடுகள்ல தான் நம்ம லட்சுமிதேவியும், சரஸ்வதி தேவியும் கூசாமக் குடியேறுறாக.
இந்தப் போக்குப் போனா தர்மம் எப்படி நிலைக்கும்? என்று சித்திரிக்கின்றார். வர்ணாஸ்ரம தர்மம் தகர்ந்து போகிறதே என்ற கவலை தொனிப்பதை உணர முடிகின் றது. மேற்கே போகப் போக வேறு சில சாதிகள் படும் துயரம் நினைத்தாலே நடுங்க வைக்கிறது என்று பதினோராம் அத்தியாயத்தைத் தொடங்கும் பொன்னீலன், சாதிக் கொடுமையை தம் எழுத்தில் வடிக்கின்றார்.
திடீரென தூரத்தில் ஒரு கூவல்.
ஓஹோ... ஓஹோ... ஓஹோ...
குரல் வந்த திசையைத் துருவித்துருவிப் பார்த்தான் சிறுவன்.
அப்பா, எந்தப் பறவை இப்படிப் பாடுகிறது?
மகனே இது மனிதக் குரல்
மனிதக் குரலா? சிறுவனின் கண்களில் ஆச்சரியம். எதற்காக இப்படிக் கூவுகிறார்?
இது நம் நாட்டுச் சட்டம் மகனே,
வேகமாக நடந்தபடி பதில் சொன்னார் தந்தை.
நம் கண்களில் படக் கூடாத வனச்சாதியைச் சேர்ந்தவர் அவர்.
அப்பிடியுஞ் சாதிகள் இருக்கின்றனவா?
ஆம் மகனே...
அப்பா, இப்படிச் சத்தம் போடுவதில் அவனுக்கு என்ன லாபம்?
நான் இங்கே இருக்கிறேன் என்கிறான், மகனே!
எதற்காக
யாருக்காவது இந்தச் சத்தம் கேட்டால், தயவு செய்து கைதட்டுங்கள், நான் உங்கள் பார்வையில் படாமல், ஓடி ஒளிந்து கொள்ளுவேன் என்று நமக்கு அறிவிக்கிறான் மகனே...
ஏன் அவன் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும்? அந்த அறியாப் பிஞ்சு முகத்தில் வியப்பு.
அவன் ரொம்ப ரொம்பக் கீழான சாதிப் பிறவி, மகனே. நம்மைப் போன்ற உயர்சாதியினர் அவனைக் கண்ணாலப் பார்த்தாலே தீட்டு. நாம் அருகே வருகிறோம் என்பதைக் கைதட்டி அவனுக்கு அறிவித்தால், மரத்தின் பின்னோ, அல்லது ஆற்றிலோ, குளத்திலோ ஒளிந்து கொள்வான். அப்படித் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவன் இப்படிக் கத்துகிறான்.
நாம் கை தட்டா விட்டால்
அவன் ஒளிந்து கொள்ள முடியாது. மகனே, உயர் சாதியினரின் கண்ணில் பட்டால், அவர்கள் தம் இடுப்பில் இருக்கும் வாளால் அவனை வெட்டிக் கொன்று விடுவார்கள்.
ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
நம் தர்மம் அப்படித்தான் சொல்கிறது மகனே...
இது அதர்மம் அப்பா
என்று சாதிக் கொடுமையை விளக்கும் தோழர் பொன்னீலன் நாவலில் அடிமைச் சந்தையை ஓவியமாய்த் தீட்டிக் காட்டுகின்றார்.
அடிமை முறையை ஒழிப்பதற்கு சட்டம் உருவான வரலாற்றையும் எடுத்துரைக்கின்றார்.
அச்சு இயந்திரம் வந்தபோது மக்கள் வியந்த வியப்பை பொன்னீலன், இனி பனையோலையும் வேண்டாம். எழுத்தாணியும் வேண்டாம். இதுக்காகவும் வெள்ளைக் காரன் ஒரு பெரிய பூதத்தக் கண்டு பிடிச்சிருக்கான். காயிதத்த அந்த புதுப் பூதத்துக்க வாயில செருகினாப் போதும். நாம என்ன நினைக்கிறமோ அது மாதிரி அந்தப் பூதம் கண்மூடித் திறக்குறதுக்குள்ள எழுதித் தரும் என்று வரைகிறார்.
பண்பாட்டுப் படையெடுப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற குரல் எங்கும் ஒலிக்கின்றது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுத் திணிப்பைத் தொடர்ந்து செய்து வருகின்றது. மறுபக்கம் நாவலில் சதாசிவன் என்ற பாத்திரம் பேசுகிறது, சார், இந்த நாட்டுக் கிராமக் கோயில்கள்ல பழைய பூசாரிமார் பாமரத்தனமா என்னென்னவோ பண்ணிக் கிட்டுக் கிடக்காணுக. ரப்பிஷ். எல்லாத்தையும் மாற்றணும். அங்கே குடியிருக்கிற பேய்களத் துரத்தணும். அந்த இடங்கள்ல ராமனையும் கண்ணனையும் பிரதிஷ்டை பண்ணி, பூசையையும் பிராமணன் கையில கொடுக் கணும். பத்து வருஷத்தில இந்த நாடு நம்ம காலடியில விழும் இது எவ்வளவு ஆபத்தான போக்கு. 178ஆம் பக்கத்தில் சதாசிவன் இப்படிப் பேசுவதற்கு 722ஆம் பக்கத்தில் வெங்கடேசன் பதில் அளிக்கிறார்.
நம்பிக்கையுள்ளவங்க நம்பிக்கையுள்ள கடவுளத் தங்கள் நம்பிக்கைப்படிக் கும்பிட சுதந்திரமிருக்கணும். நம்பிக்கை இல்லாதவங்க நம்பிக்கையில்லாம வாழவும் சுதந்திரம் இருக்கணும். வைதீகம் ஒரு பெரு வெள்ளமாக எல்லாத்தையும் மூழ்கடிச்சி, எங்கள அடிமைப்படுத் துறதைத்தான் என்னால சகிச்சிக்க முடியல்ல. அம்மனுக்குத் தெரியாத மொழியில, அம்மனுக்குத் தெரியாத சடங்குகள, அம்மனுக்குத் தெரியாதவங்க இப்படிக் காசுக்காகச் செய்யிறது எந்த வகையில் நியாயம்? அவரவர் மொழியில அவரவரும் செய்யி. எல்லாச் சாதியும் செய்யி. பெண்ணும் ஆணும் செய்யி. இப்பிடி ஜனநாயகப்படணும் பண்பாடு. நான் இந்து மதத்த ஏத்துக்கணும்னா, முதல்ல அது என்னைய ஏத்துக்கணும். உங்களப் பார்த்ததும் கூச்சப் பட்டு, எங்க மீன் குழம்புச் சட்டியையும், பாளையரிவாளை யும் மறச்சி வச்ச காலம் மலையேறிப் போச்சு. இனியாவது எங்கள சமத்துவமா நடத்த முன் வாருங்க.
தோழர் பொன்னீலன் அவர்களின் வளமான சிந்தனை கள், சமத்துவப் பார்வைகள் நாவலில் பல பாத்திரங்களின் உரையாடல்கள் வழியே வெளிப்படுகின்றன. 197ஆம் பக்கத்தில், ஒற்றைத் தன்மையின் யுகம் முடிஞ்சி போச்சி. பிறரை மதிக்கவும், நேசிக்கவும் தெரியாதவனுடைய கதை இனி எடுபடாது... எந்த மதமாக இருந்தாலுஞ் சரி, சாதியாக இருந்தாலுஞ் சரி என்று கென்னடி பாத்திரத்தின் மூலமாக பொன்னீலன் தெளிவுபட எடுத்துரைக்கின்றார். பண்பாட்டுத் தேசியம் - பன்முகத் தன்மை குறித்து வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றார் பொன்னீலன்.
நில உச்சவரம்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் பாட்டாளி மக்களுக்கு சொந்த நிலம் வருகின்றது. உழைக்கின்றார்கள். முன்னேறுகின்றார்கள். கிறிஸ்துவம் மூலமாக கல்வி அறிவு பெற்று உத்தியோகத்திற்குச் செல்கின்றார்கள். ஆதிக்கம் செய்துகொண்டிருந்த உயர் ஜாதி வர்க்கம் ஆதிக்கத்தை இழக்கின்றார்கள். இதுதான் இந்து - கிறிஸ்தவப் பகைமைக்கு அடிப்படைக் காரணம் என்று  கூறும் ஜோயல் பாத்திரம், பழைய வெறியுள்ள சிலர், ஏதாவது பண்ணி ஆதிக்கத்த மீட்க முடியுமா என்று பாக்குறாங்க? அவங்களால ஆயுதங்கள எடுத்துப் போராட முடியாது. அதுக்கு அடியாள் வேணும். அதுக்காகத்தான் அப் பாவியான நாடார்கள், சாம்பவர்கள், ரசக்காலர்கள் இவர் களயெல்லாம் உணர்ச்சி வசப்படுத்துறாங்க என்கின்றார்.
குமரி மாவட்டத்தில கலவரம் நடந்த பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டி இருக்கின்றார் தோழர் பொன்னீலன் அவர்கள். செம்பருத்திவிளை ஊரில், நான் ஒரு கத்தோலிக்கன். சாதியில் நாடார். என் பேரு கிறிஸ்துதாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்ற பாத்திரம், சார், இஞ்ச உள்ள இந்துக்கோயில் மைதானங்கள்ல பாத்தீயன்னா, சாயங்கால நேரம் கம்பு வச்சி ஆர்.எஸ்.எஸ்.கார கவாத்து நடத்திட்டிருப்பாவ. சாஸ்தாங் கோயில்ல வச்சித்தான் அவிய சாகா நடக்கும். அப்பதான் அவிய பிரச்சாரம் பண்ணுயது. கிறிஸ்தவன்தான் நம்ம எதிரி. அவந்தான் நம் சொத்துக்கள மோட்டிச்சான், அதிகாரத்தப் பிடுங்கினான். அவன ஒழிக்கணும். இப்படியெல்லாம் தப்பான செய்திகளக் கொடுப் பாவ. இந்த கசப்புணர்வு தான் ஆங்காங்கே மோதல்களா உருவாச்சி என்று பேசுகின்றது.
மாடத்தட்டுவிளை என்ற ஊருக்கும், வில்லுக்குறி என்ற ஊருக்கும் ஏன் சண்டை வந்தது? என்ற ஆராய்ச்சியாளன் சேதுவின் வினாவுக்கு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கூறும் பதிலின் மூலம் மலையாளத் தொடர்பு புலனா கின்றது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோட சேர்ந் ததும், மலையாள உணர்வு உள்ளவியளுக்குப் பாதுகாப்பு இல்லாதது மாதிரி ஆகுவு. பக்க பலமா, அவியளுக்கு ஏதோ ஒண்ணு தேவைப்படுவு. தங்களைப் பெரும்பான்மையாக் கிடணும் என்கிற நிர்ப்பந்தம். இதுக்கு வசதியா ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வந்து சேருவு என்கின்றார்.
உதவி, சேவை, தொண்டு என்பதெல்லாம் இந்தச் சுயநல வாழ்க்கையில் படிப்படியாய் தேய்ந்து கொண்டு போகின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. மறுபக்கம் நாவலில் முத்து என்ற கதாபாத்திரம் வழியாக, இருபத்து நாலுமணி நேரமும் மனுசர் விலைப் பொருளா யிட்டா, அப்றம் சொந்த வாழ்க்கையாக என்னதான் மிஞ்சும்? என்று பொன்னீலன் அவர்கள் மனிதத் தன்மையோட வாழ வழிகாட்டுகின்றார்.
மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை இழிவாகக் கருதத் தொடங்கிய காலம் எது என்று இந்த நாவலில் பொன்னீலன் ஆய்வு செய்கின்றார். புராணக் கதைகளை எடுத்துக்காட்டி முத்து என்ற பெண் பாத்திரம் வழியாக பொன்னீலன் பேசுகின்றார். இப்படித்தான் அண்ணே, கதைகளைக் கட்டி மக்களை நம்ப வச்சி அமுக்கிப் போட்டானுவ, திருட்டுப் பயலுவ. கள் இறக்கினவன், உழுது பயிர் செய்தவன், மீம்பிடிச்சவன், வேட்டையாடினவன் இப்படி இப்படியே கீழ்ச்சாதிகளைப் பற்றின கதைகளையெல்லாம் நுழைஞ்சி பாத்தா, உள்ளே வைதீகம் உட்காந்திருக்கது தெரியும். நிஷா அக்கா சொல்லுவாவ, நம்மள ஒடுக்கி அந்த ஒடுக்கு முறைய நியாயப்படுத்துறதுக்காக உண்டாக்கப்பட்டதுதான் இந்தக் கதைகளாம். இப்ப நாம என்ன செய்யணும். இந்தக் கதைகள உடைச்சி, அதுகளுக்குள்ளே பதுங்கி இருக்கிற மனுவ மக்கள்கிட்ட காட்டணும் என்கின்றார்.
நம்ம சனங்களுக்கிருக்கிற சாதி வெறியச் சகிக்க முடியல்ல என்று குமுறுகிறார் கக்கூஸ் கழுவும் குருசாமி. அவர்தம் குரலை எங்கள இவ்வளவு இழிவா நினைக்கிறாகளே, திருமலை நாயக்கர் தளபதி மதுரை வீரன் யாரு? பூலுத்தேவன் தளபதி ஒண்டி வீரன் யாரு? கட்டபொம்மன் தளபதி சின்னத்தம்பி - சப்பாணி மாடன் யாரு? வரலாறு தெரியாம எங்களக் கேவலமா நினைக்காக! ஏன் தெரியுமா? நாங்க மாட்டுக்கறி சாப்பிடுறமாம். வெள்ளக் காரன் சாப்பிட்டா அது தீட்டில்லையாம். நாம சாப்பிட்டாத் தீட்டாம்... என்று பதிவு செய்கின்றார் பொன்னீலன்.
தோழர் பொன்னீலன் அவர்கள் ஜீவானந்தத்தின் சீடர். இந்த நாவலில் ஜீவானந்தத்தின் பெருமைகளைப் பற்றி எழுதும்போது அவர் எழுத்து மின்னுகின்றது. தோலைத் தொட்டவன் செருப்பாய்ப் போனான் என்று வருந்தும் குருசாமி, ஜீவானந்தம் என்னு ஒரு தலைவரக் கேள்விப்பட்டிருக்கியா? ரொம்பப் பெரிய ஆளம்மா என்று கூறி ஒரு சம்பவத்தை விளக்குகின்றார். தொழிலாளி வர்க் கத் தலைவர், ருஷ்ய நாட்டு அதிபர் ஸ்டாலின் செருப்புத் தைக்கும் சக்கிலியத் தம்பதிக்குப் பிறந்தவர் என்று கூறி திட்டத்தை உணர்ச்சிமயமாக்கியதை எடுத்துரைக் கின்றார்.
அண்ணல் அம்பேத்கர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா? எங்கள் இனத்தில பிறந்து எங்களத் தூக்கிவிடத் தோள் கொடுத்த கடவுள்மா அவரு. அவர் வாழ்க்கை ரொம்ப சோகமானது... படிச்சா அழுகை வரும் என்று கூறி சில சம்பவங்களைப் பட்டியலிடுகிறார்:
1923இல், தான் பரோடா சமஸ்தான ராணுவச் செயலாளராக இருந்தபோது, தன் சாதி தீண்டத்தகாதது என்கிற ஒரே காரணத்தால், தான் கையெழுத்துப் போட்ட கோப்புகளைத் தொட மறுத்து, வீசி எறிந்த தன் உயர்சாதிச் சேவகன்மார்...
தான் தங்கியிருந்த விடுதிக்கே குண்டாந்தடிகளோடு திரண்டு வந்து, தன்னைச் சூழ்ந்து யார்டா நீ என்று கேட்ட சாதி வெறியர்கள். நான் ஒரு இந்து என்று சொன்னதும், திருட்டு அயோக்கியா, நீ ஒரு பறையன். பார்சிகளுக்கென்றே கட்டிய விடுதியை அசுத்தப்படுத்திய பறையன். உடனே வெளியேறு, என்று தன்னைத் தடிகளால் தாக்கி... தன்னை வெளியே தள்ளிய அந்த மிருக முகங்கள்...
போக்கிடமில்லாமல், தான் பெட்டி படுக்கையோடு ரோட்டோரம் மரத்தடியில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதது...
1924இல், சவுக்கார் குளத்தில் தன் மக்களோடு தண்ணீர் குடிக்கப் போராடியது...
1929 சில்பன் நகர் மாநாட்டில் 6000 ஒடுக்கப்பட்டோ ருக்குப் பூணூல் அணிவிக்க ஏற்பாடு செய்து, அப்படியாவது போகுமா இந்தத் தீட்டு என்று முயற்சி பண்ணித் தோற்றது...
1930இல், 8000 பேரைத் திரட்டி, நாசிக் ராமர் கோவிலில் கும்பிடப் போய் உதைபட்டது...
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல், தன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுச் சண்டை போட்டுப் பெற்ற வெற்றியைக் காந்தி அநியாயமாகத் தட்டிப் பிடுங்கித் தன் மக்களை அனாதைகளாக்கியது...
அவர் மனதுக்குள்ளே நீண்ட காலமாக நடந்து கொண் டிருந்த போராட்டம் இன்று உச்சக் கட்டத்தை அடைந் திருக்கிறது. சிறுவனாக வண்டியில் போய்க் கொண்டிருந்த போது, தான் ஒரு தலித் என்று தெரிந்ததும் வண்டியைக் குடைசாய்த்துத் தன்னை நடுரோட்டில் உருட்டி விட்டானே ஒரு உயர்சாதி வண்டிக்காரன், அப்போது பட்ட அடியின் வலி அது. இப்போதும் வலித்தது. படித்து வளர்ந்து உலகப் புகழ்பெற்று, விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி... யார் சொன்னது நான் எழுதினேன் என்று? அதிலுள்ள வரிகளில் எத்தனை வரிகளை என் வரிகளாகச் சொல்ல முடியும்? பெரும்பான்மையான வரிகள் அன்றைய ஆதிக்க சக்திகள் என் கைகளைப் பிடித்துத் தாங்களே எழுதிக் கொண் டவைதானே! எப்படியோ போகட்டும், இந்த அரசியல் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் சாசனங்களாக்கி, வருடங்கள் 5 உருண்டோடி விட்டன. என் மனமோ திகு திகுவெனத் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறதே! தேசமே, இந்து சமூ கமே, என் மக்களின் இழிவு நீக்க நீ என்ன செய் திருக்கிறாய்?
நான் முதிர்ந்து விட்டேன். உதிரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் நான் முடிவு செய்தாக வேண்டும். நான் ஒரு இந்துவாகவே இறப்பதா? இந்து சமூகம் என்றாவது எங்களைத் தங்கள் சொந்தங்களாக முழு மனதோடு ஏற்று, சமத்துவமாகக் கொண்டாடுமா?
அம்பேத்கர் அவர்களை பொன்னீலன் வாசகர்களின் நெஞ்சத்தில் பதித்து விடுகின்றார்.
பெண்ணுரிமை முழக்கத்தையும் பொன்னீலனின் மறுபக்கம் நாவலில் காணமுடிகின்றது.
முத்துலெட்சுமி ரெட்டியின் சாதனைகளைப் புகழ்ந்து தொடங்கிய அவளுடைய நீண்ட கவிதை இப்படி முடிகிறது.
பிரம்மனே
ஒரு பெண்ணாக நீ இருந்திருந்தால்
தாய்மை பொங்க,
ஓருலகம் படைத்திருப்பாய்
தாய்மையுறத் தகுதியற்ற ஆண்
படைத்த பூமியும்
தகுதியற்றதாயிற்று.
அன்னை முத்துலட்சுமியே,
அறுவைக் கத்தியோடு வா...!
பொன்னீலன் கவிதையில் சமூகக் கோபம் தெறிக் கின்றது. பெண் கீழான பிறவி என்று கீதை சொல்லும் சுலோகமும் முத்து பாத்திரத்தின் நினைவுக்கு வருகிறது.
காதலனா இருக்குற வர, எங்க உள்ளங்காலக் கூட நக்குவான். தாலி கட்டிட்டாலோ... அப்புறம் நெஞ்சில ஏறி நின்னு, அடி வயித்தில மிதிப்பான்... த்தூ... மொதல்ல இந்தத் தாலிய ஒழிக்கணும் என்கின்ற முத்து பாத்திரம் கசப்பான உண்மையை உணர்த்துகின்றது.
திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்களால் தோள்ச் சீலைப் போராட்டம், மேலாடைக் கலகம், சான்றோர் ரகளை சாணார்களை என்று குறிக்கப்படும் கலவரம் குமரி மாவட்டத்தில் 1822-1859ஆம் ஆண்டுகளுக்கிடையே நடந்தது. சில குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மார்பின்மேல் மேலாடை அணியக் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டில் அடங்கும் சாதிகளான நாடார், ஈழவர், காவேரி நாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.
ரிங்கிள் கதபே மயிலாடியில் முதலில் சந்தித்த பெண்களைப் பார்த்ததும் கூச்சமடைந்திருக்கிறார். அது இங்கே உள்ள நடைமுறை என்று தெரிந்த பின்பும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அவரை அடுத்து வந்த மதப்பணியாளர்கள் இதற்குத் தீர்வு காண யோசித்தனர்.
மேலாடைப் போராட்டம் குறித்து ஆராய்ந்த கே.ஏ.ஜார்ஜ் இதை மூன்று காலகட்டங்களில் பிரித்துக் காட்டுகிறார். முதல் கால கட்டம் 1822-23ஆம் ஆண்டிலும், இரண்டாம் கால கட்டம் 1928-39ஆம் அளவிலும், மூன்றாம் காலகட்டம் 1855-59லும் என்று அவர் வரையறை செய்கிறார். 1859 ஜூன் 26இல் உத்திரம் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற சாதியினரைப் போல் மேலாடை அணியலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.
இந்திய அரசுரிமை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து 1858இல் இங்கிலாந்து ராணிக்கு மாறுகின்றது. சமத்துவ மான சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. சில பெண்கள் மேலாடை அணிய துணிவு கொள்கின்றனர்.
தோழர் பொன்னீலன் அவர்கள் மறுபக்கம் நாவலில் வட திருவாங்கூர்ல நடந்த கொடுமையை எழுதுகிறார். ரொம்ப ரொம்ப ஒடுக்கப்பட்ட சாதிப்பொண்ணு. பெயரு நாங்கோலி. உயர் ஜாதிப் பெண்களைப் போல நெஞ்சை மூடுகின்றாள்.
ஈட்டி பிடிச்ச காவலாளிக புடை சூழ, வரி அதிகாரி அவன் வீட்டு முன்ன ஆடியசைஞ்சு வாரான், மீசையைத் தடவிக்கிட்டே ஒரு ஓலையை நீட்டுகிறான்.
இது என்ன எசமான்? அச்சன்கண்ணு பிதுங்குது.
உன் மகளுக்குரிய முலைவரி, கட்டுடா
வெளியே வந்த அச்சன், புழுதியில் விழுந்து அதிகாரிகாலுக்கு நேரே கும்பிட்டான்.
மாப்புத் தரணும் பொன்னு ஏமானே, அவ சிறுபிள்ளை. அறியாமச் செய்தது. மாப்புத் தரணும்.
அவளப் பிடிச்சி என்கிட்ட கொடுடா, ஏலம் போட்டுச் சக்கரமாக்குவேன்.
நாங்கோலி நடுங்குதா... வெளியே வந்து ஏமான் காலடியில் நெடுஞ்சாண்கிடையா விழுந்தா.
இரக்கங்காட்டணும், எசமான்! மாப்புத்தரணும்! நான் அறியாது செய்தது எந்திரிச்சி நின்னா நாங் கேலி. முகம் சட்டுன்னு இறுகிச்சு. சரிதானே ஏமான, கொஞ்சம் பொறுக்கணும்! சொல்லிக்கிட்டு உள்ளே போனாடியம்மா.
வாசல்ல குனிஞ்சி, வெளியே வாறா நாங்கேலி. அவகையில ஒரு வாழை இலை. அதுமேல அவளோட ஒற்றை முலை. வாழை இலை விளம்பில இருந்து ரத்தம் சொட்டுச் சொட்டா வடியிது. அவளோட இடது நெஞ்சு இருந்த இடம் ரத்தக்காடு. கட்டியிருந்த
துணியெங்கும் ரத்தம்
சமூக அவலத்தைப் படம்பிடிக்கும் பொன்னீலன் அவர்களின் எழுத்துகள் விழிகளைக் குளமாக்குகின்றன.
இந்து - கிறிஸ்தவ மதச் சண்டைக்கு துண்டுப் பிரசுரத்தின் பங்களிப்பை இந்நாவல் வெளிப்படுத்துகின்றது. பிள்ளையார் வந்த வரலாற்றையும் சொல்கின்றது.
பார்ப்பனப் பண்பாட்டை எதிர்க்கும் குரல் மறுபக்கம் நாவலில் ஓங்கியே ஒலிக்கின்றது. நூறு வரியத்துக்குப் பிறவு, ரொம்பப் பணம் செலவழிச்சி இதக் கல்க்கோவிலா மாத்தி கும்பாபிசேகம் பண்ணினானுவ... நான் சொன்னேன். லேய் நமக்கு அய்யனும் வேண்டாம், பொய்யனும் வேண்டாம். முதல் கும்பாபிசேகம் நம்ம ஆள் ஒருத்தன் தான் செய்தான். நாம எல்லா வகையிலயும் வளர்ந்திருக்கோம். இப்பவும் நம்ம ஆள்ல ஒருத்தனையோ, ஒரு வெள்ளாளனையோ, பறையனையோ வச்சிச் செய்வோம்னேன். என் பேச்சு எவன் செவியிலயும் ஏறல்ல. அய்யர்மாருக்குக் கூலி மட்டும் நாப்பதாயிரம். அது கூட பெரிசில்ல. எவனோ வந்து, வாஸ்துப்படி இந்தப் பனைய வெட்டி மாத்தணும் என்னான். மக்கா, இந்த நாசமாப் போன போலிப் பயலுவளும் அத நம்பிக்கிட்டு, அந்தக் காராம்பசுவை வெட்டிக் கொன்னானுவ... இன்னா பாரு, முன்னாலயெல்லாம் தமிழ்ப்பாட்டு போடுவானுவ. செவி நெறஞ்சி மனமும் நனையும். இப்ப இதே தவளச் சத்தந்தான். என்னது, ஏது? எவனுக்குந் தெரியாது. கேட்டா, இது தேவபாசை என்கான். பேசுற பாசையிலயே மேலுங்கீழும் பார்க்கிற ஈளச்சாதி... தூ.
இதுபோன்று உணர்வு படைத்த பாத்திரங்கள் நாவலில் அருமையான உரையாடல்களை நிகழ்த்துகின்றன.
பெரியார் தலைமையில் திருமணம் செய்த பண்டரிநாதன் அய்தராபாத்தில் நடைபெற்ற இந்து ஆசிரியர் மாநாட்டுக்குச் சென்றதைக் குறிப்பிடும் நூலாசிரியர், திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து, அந்த இயக்கத்தோட லட்சியங்கள், கொள்கைகளெல்லாம் மெல்ல மெல்ல உதிரத் தொடங்குது. லஞ்சமும், ஊழலும் பெருகுது. பண்டரிநாதன் சாரால இத சகிச்சிக்க முடியல்ல. திராவிட நாட்டை விட்டுட்டு அகண்ட பாரதம் பற்றி யோசிக்கத் தொடங்குறாரு. அவர் மட்டுமல்ல, லட்சிய உணர்வுள்ள இன்னும் பலர் யோசிக்கத் தொடங்குகிறாங்க என்று எழுதுகின்றார். மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும் என்று வள்ளலார் வேண்டினார். தந்தை பெரியாரின் கொள்கையில் உறுதியாக நிற்பவர்களுக்கு தடுமாற்றம் என்பது வராது. இந்து மத வெறி ஒருவருக்கு ஏற்படுகிறதென் றால் ஒன்று அவர் பெரியார் கொள்கைகளுக்கு உண்மையாக இருந்திருக்க மாட்டார் அல்லது இந்துமத அமைப்புகளுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார் என்பது தெளிவு. நாடார்களுக்கு ஏற்பட்ட அவமானம், வைக்கம் போராட்டம், சுசீந்திரம் கோர்ட் சம்பவம், அயோத்திதாசப் பண்டிதரின் முழக்கம், வ.உ.சி.யின் தியாகம், காந்தியாரின் அரிசன சேவை நோக்கம், இந்தி படிக்கச் சொன்னதன் ரகசியம், அக்னிக்காவடிப் போராட்டம், நேசமணி நீதிமன்றத்தில் வாதாடிய திறம் என்று மறுபக்கம் நாவல் விறுவிறுப்பாய் செல்கிறது.
வெங்கடேசன் என்ற பாத்திரம், 461ஆம் பக்கத்தில் இந்தியா ஒண்ணா ஒற்றுமையாத்தான் இருக்கணும். ஆனா அந்த ஒற்றுமை தேசிய இனங்களின் சமாதி மேலே கட்டப்படுறதில்லை. அது நிலைக்கவும் நிலைக்காது. தேசிய இனங்களின் வளர்முகமான சமத்துவக் கூட்டுறவின் மேலே எழுப்பப்படுகிற ஒற்றுமையே நிலைக்கும். ஒற்றுமை யும், சமத்துவமும் பிரிக்க முடியாதது என்று பேசுவதும், 473ஆம் பக்கத்தில், இந்தியா ஒரு நாடல்ல, பல நாடுகளோட ஒன்றியம். தமிழ்நாடு, கேரளா நாடு, ஆந்திரா நாடு, வங்க நாடு, இப்படிப்பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். ஒவ்வொரு நாட்டுக்கும் மொழி தனி,  உடை தனி, உணவு தனி, பண்பாடு தனி, நம்முடைய தேசிய இன அடை யாளங்களை இழந்தா நம் வாழ்வும் வளர்ச்சியும் போச்சி. இந்திய ஒன்றியத்துக்கு அர்த்தமே போச்சி
- என்று பேசுவதும் நாவல் வலியுறுத்தும் கருத்து களாகக் கொள்ளலாம்.
மண்டைக் காட்டுக் கலவரம் 1983 மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் கலவரம் பரவுகிறது. தோழர் பொன்னீலன் கலவரக் காட்சிகளை தம் எழுதுகோலால் படம் பிடித்து வாசகர்களுக்குக் காட்டியிருக்கிறார்.நண்பர் பொன்னீலன் எழுதியுள்ள மறுபக்கம் நாவல் சிறந்த வரலாற்று ஆவணமாகும். ஆவணத்தைக் கலைப்படைப்பாக்கி தமிழுக்கு நல்கியிருக்கின்றார்.
அவர் பணி தொடர வாழ்த்துகள்!

1 comment:

enjoyalways said...

THIRUMIGU PONNEELAN IYAA AVARGALAIP PATRIYA PAYANULLA ARUMAIYAANA PATHIVUKKU MIKKA NANTRI

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...