Saturday, September 24, 2011

பெரியார் - மணியம்மை திருமணம்


துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (11)

பெரியார் - மணியம்மை திருமணம்
- கலி.பூங்குன்றன்


எதை எதையோ கிறுக்கிப் பார்த்து அலுத்துப் போன ஸ்ரீமான் கே.சி.லட் சுமிநாராயணன் பெரியார் - மணியம்மை திருமணத்தை சிக்கெனப் பிடித்துக் கொண்டார்.

இதற்கான விளக்கங்கள் எல்லாம் எப்பொழுதோ கொடுக்கப்பட்டு முடிந்து போன சங்கதி; யார் குற்றம் சொன்னார்களோ அவர்களே பின் னாட்களில் உண்மையை உணர்ந்து விட்ட நிலைதான்.

தொடக்கத்தில் அதனை அதிர்ச் சியாகப் பார்த்தவர்கள், விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் கூட ஒரு செவிலியராக அன்னை மணியம்மையார் இருந்து தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழ வைத்த தகை மையைக் கண்டு வாயார, நெஞ்சாரப் பாராட்டத்தான் செய்தார்களே தவிர யாரும் குற்றப் பத்திரிகை படிக்க வில்லை.

உலகியலில் கூறப்படும் சாதாரண காரணங்களை தந்தை பெரியார் மீது யாரும் திணிக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் துணைவியார் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் அவர்களுக்கு வயது 54. திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அந்த 54 வயதில் தந்தை பெரியார் நினைத்திருந்தால் அந்தக் குற்றச் சாற்றுக்கே கூட இடம் இல்லாமல் போயிருக்குமே. அவர்களின் வீட்டார் கூட எவ்வளவோ வலியுறுத் தியும் கூட திருமண எண்ணத்தை அய்யா கொண்டார் இல்லை.

நாகம்மையார் மறைவு கூட ஒருவகையில் நல்லது என்றுதான் கருதினார்.
எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும், துயரமாகவும் காணக் கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக் கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிகம் சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத் தொல்லை ஒழிந்தது என்கிற உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.  (குடிஅரசு 14-5-1933) என்று எழுதினார் என்றால் இதனுள் அடங்கியிருக்கும் தத் துவத்தைத் தன்னலம் துறந்த பொது மனத்தினரால்தான் உணர முடியும்.

ஒரு கட்டத்தில் துணைவியர் மறைந்தது நல்லது என்ற நிலை; இன்னொரு கட்டத்தில் தனக்கு ஒரு துணைவி தேவை என்ற நிலை . . . அந்தத் துணையும் தனிப்பட்ட- தன் சுக வாழ்வுக்காக அல்ல. தான் வரித்துக் கொண்டு இருக்கிற புரட்சிகரப் பொது வாழ்வுக்கு, தனது தள்ளாமை, உடல் நோய் இடையூறாக இருக்கும் நிலையில்,  அதிலிருந்து விடுபடவும், தொண்டறம் புரிய சட்ட ரீதியாக அவர் மேற் கொண்டமுடிவும், துணிவும், எதிர்ப் புகளை சட்டை செய்யாத ஆளுமையும் அய்யாவை ஒரு தனித் தன்மைமே லோங்கும் வைரம் பாய்ந்த மாமனித ராகத்தான் ஜொலிக்கச் செய்கிறது.

நான் திருமணம் இல்லாமல் 16 ஆண்டுகள் இருந்துவிட்டு 17 ஆம் ஆண்டில் துணை தேடக் காரணம் என்ன வென்று ஏன் திருமணம்? என்று கேட்டவர்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டாமா என்ற அய்யாவின் கேள் விக்குள் எல்லாமே அடங்கி விட்டதே!

ரமணரிஷி போல தன் சொத் துக்களை ரத்த சொந்தத்துக்கா எழுதி வைத்தார்? ஒரு கழகத் தொண்டரின் மகளாகவும் கழகக் கொள்கையில் ஆழமான பற்றுக் கொண்டவராகவும் இருந்த ஒரு தொண்டரைத்தான் பெண் மணியைத்தான் தனது வாரிசாக வரித்துக் கொண்டார்.

இன்னும் சொல்லப்போனால் தந்தை பெரியார் அவர்களின் இந்த விசால மனப்போக்கில், உயர்ந்த சீலத்தில், பொது ஒழுக்கக் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குக் கூட ஒரு தகுதி தேவைப்படவே செய்யும்.

ராஜாஜியைச் சந்தித்து அவர் ஆலோசனையின் படியே பெரியார் அந்தத் திருமணத்தை செய்து கொண்டார் என்பது பாமரத்தனமான பிரச்சாரமே! உண்மை என்னவென் றால் பெரியார் எதிர்பார்க்கிறபடி 30 வயது பெண் பரிபாலனம் செய்வார் என்று நம்புவதில் பயன் இல்லை என்றுதான்  ராஜாஜி கடிதமே எழுதி னார். ஆனால் அதற்கு மாறாக தந்தை பெரியார் வாரிசாக அன்னை மணி யம்மையாரைக் கொண்டார். ராஜாஜியின் கணிப்பு பொய்த்தது; தந்தை பெரியார் அவர்களின் எதிர் பார்ப்பும், நம்பிக்கையும், தொலை நோக்குமே வென்றன.

ராஜாஜியின் ஆலோசனையின் பெயரில்தான் பெரியார் மணியம்மை திருமணம் நடந்தது என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. உண்மையோ வேறு விதமானது. ராஜாஜி எழுதிய அந்தக் கடிதத்தை அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியார் வெளியிட்டு இருந் தால், அந்தப் பொய்ப் பிரச்சாரம் மண் மூடிப் போயிருக்கும். ஏன் பெரியார் வெளியிடவில்லை? பர்சனல் என்று தனக்கு எழுதப்பட்ட கடிதத்தை வெளியிடுவது பண்பாடல்ல என்ற உயர்ந்த பண்பாட்டை பெரியார் கடைப்பிடித்ததுதான் அதற்குக் காரணம்! இப்படி ஒரு தலைவரை வரலாறு கண்டதுண்டா? கேள்விப் பட்டதுதான் உண்டா?  தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகுதான் வரலாற்றுத் தேவையின் அடிப்படையில் கழகத்தின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார் என்பதுதான் உண்மை.

திருமண ஏற்பாட்டுக்குப் பின் 24 ஆண்டுகள் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அந்த மாபெரும் தலைவரை வாழ வைத்து, அதன் மூலம் தமிழர் வாழ்வுக்குப் பெருந்தொண்டு செய்தவர் அன்னையார் என்பதிலும் அய்யமுண்டோ?

நாகம்மையார் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதியதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமானது.

எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப் போகும் அத்தியாயங்கள் சில விசேஷ சம்பவங்களாக இருக்க லாம். அவை நாகம்மையாருக்கு துக்கமாகவும், துயரமாகவும் இருக்கும் என்றாரே!

உண்மைதானே - இந்தி எதிர்ப்புப் போராட்டம், - பெல்லாரி சிறைச்சாலை - சட்ட எரிப்புப் போராட்டம், தேசிய கொடி எரிக்கும் போராட்டம்  - தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்புப் போராட்டம், - பிள்ளையார்  உடைப் புப் போராட்டம் - ராமன் பட எரிப்புப் போராட்டம் - கோவில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் என்று அலை அலையான போராட்டங்களை அல் லவா தந்தை பெரியார் நடத்தினார்!
இந்த இடர்ப்பாடான கால கட்டத் தில் தோன்றாத் துணையாக இருந்தவர் அந்த ஈரோட்டுச் சிங்கம் எடுத்த சரியான முடிவின்படி, கணிப்பின்படி அமைந்தவர் அன்னை மணியம்மை யார் அல்லவா!

தந்தை பெரியார் மனம் விட்டு எழுதினாரே!

மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ என் தொண்டுக்குத் தடையில்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல் பாதுகாப்பு, வீட்டு நிர்வாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன் (விடுதலை  15-10-1962) என்று கூறினாரே அய்யா!
என் காயலா சற்றுக் கடினமானது தான். எளிதில் குணமாகாது. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்பட வில்லை. எதற்கும் தயாராக இருக் கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது. - தந்தை பெரியார் 89 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் - 17-9-1967)

தந்தை பெரியார் மறைந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இந்தப் பார்ப்பனர்கள் அந்தத் திருமணத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? அந்த அம்மா இருந்துதானே இந்தக் கிழவரை நீண்ட காலம் வாழ வைத்தார்! நம்மவா ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு உறு துணையாக இருந்தாரே என்கிற ஆத்திரம்தான் - இத்தனை ஆண்டுகள் ஓடிய பிறகும் கூட அவாளின் ஆத்திர நெருப்பு அணைந்து போய்விடா மைக்குக் காரணம்! இன்னும் குமுறிக் கொண்டும் திமிறிக் கொண்டும் பார்ப்பனர்கள் கிடக்கிறார்கள்  என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

பெரியார் மட்டுமல்ல, பெரியார் மணியம்மையார் திருமணத்தைக் காரணம் காட்டி கழகத்தை விட்டுப் பிரிந்து தனிக் கழகம் கண்ட அண்ணா அவர்களே கூட உண்மையை உணர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டாரே!

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது,  இப்போது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டுகளாக கட்டிக் காத்து, அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சாரும்  என்று அண்ணாவே சான்றளிப்புச் செய்து விட்ட பிறகு இந்த லட்சுமி நாராயணன்கள்  யார்?
சோ. ராமசாமிகள் யார் குற்றங்கண்டுபிடிக்க?

அய்யா சிறையிலிருந்து 6 மாதங் களுக்குப் பிறகு விடுதலையாகிறார். ஒவ்வொரு ஊருக்கும் தோழர்கள் தந்தை பெரியார் அவர்களை அழைக் கின்றார்கள். அந்த நேரத்தில் அன்னை மணியம்மையார் வெளியிட்ட அறிக் கையை நோக்குங்கள். (விடுதலை 8.6.1958)
கூப்பிட்டால் வந்துவிடுவார்; கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்! பெரியார் அவர்கள் விடுதலை ஆனவுடன் தங்கள் தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்பதாக ஒரு மாதமாகவே பலர் கடிதங்கள் எழுதி வழிச் செல வுக்குப் பணமும் பல பேர் அனுப்பி யிருக்கிறார்கள். இந்த இரண்டு, மூன்று நாள்களாக பல தந்திகளும், செக்குகளும், டிராப்டுகளும் வந்த வண்ணமாய் இருக்கின்றன.

பெரியார் உடல் நிலையைப் பற்றி, பெரிய நோய் ஒன்றும் இல்லாவிட்டா லும் அவரது 80 வயதே அதாவது மூப்பு என்பதே ஒரு பெரிய நோய் அல்லவா? அதிலும் பெரிய டாக்டர்கள் பலர் அவர் உடல்நிலை பற்றிப் பயப்படும் படியாகக் கூறி, பெரியாரைப் பத்திர மாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இனி அவரைப் பயணம் செய்யும்படியோ, பேசும்படியோ விடாதீர்கள்! கண்டிப் பாய் விடாதீர்கள்! என்பதாக ஒரே கருத்தாய்க் கூறி வருகிறார்கள்.

பெரியார் அவர்கள் தனது மூப் பினால் வேறு எந்தக் காரியமும் செய்ய முடியாவிட்டாலும், தனது மூப்பு, பிரயாணத்திலோ - பேச்சிலோ தனக்கு முடிவு தரவாவது உதவட்டுமே என்கிறார்.

இதற்காக அவரைத் தற்கொலை செய்து கொள்ளும்படி விடலாமா? அல்லது நாமாவது அவரது முடிவை அவசரப்படுத்தலாமா?

ஆகையால் அவர் இனி அதிகப் பிர யாணம் செய்யாமலும், அதிகம் பேசா மலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

பெரியார் தமிழர்களின் பொதுச் சொத்து. பொதுச் சொத்து நாதியற்ற தாகும் என்கின்ற அறிவு மொழிப்படி அவரை விட்டுவிடாமல் எல்லோரும் தங்கள் சொந்தச் சொத்தைக் காப் பாற்றுவது போல் கவலையுடன் காப்பாற்றியாக வேண்டும்.

அரசாங்கத்தாரால் நமது மக்களுக்கு இப்போது ஏற்பட்ட அக்கிரமமான கொடுமைக்கும் கொலைக்கும் பெரியார் அவர்கள் சென்னை முதல் கன்னியா குமரி வரை எல்லா மாவட்டங் களுக்கும் சென்று மக்களைப் பாராட்டி ஆறுதல் கூறவேண்டி இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் எய்தவனை விட்டுவிட்டு அம்பை (வாளியை) நொந்துகொண்டிருக்கிறார்கள்! இதற்குப் பரிகாரமாகத் தவறான வழியில் செல்லத் தூண்டப்படு கிறார்கள். இத் தவறான நிலைக்கு ஆளாகாமல் மக்களை நடத்த வேண்டி இருக்கிறது. இது பெரியாரால்தான் ஆகும். மற்றவர்களுக்குப் பெரிதும் விஷயமே புரியவில்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.

ஆகையால் ஒரு மாவட்டத்திற்கு ஒரு வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் அழைப்பது என்கின்ற தன்மையில் அந்தந்த மாவட்டத்தார் முடிவு செய்து கொண்டு அந்தப்படி அழைத்தால், தேதி குறிப்பிடுவதை நான் கவனித்துத் தேதி கொடுக்கிறேன்.

அழைப்பைக் குறைத்தால் பெரியார் அவர்களை பத்திரிகைக்கும், நூல் களுக்கும் ஏதாவது எழுதிக் கொண் டிருக்கும்படி செய்யலாம். மாநாடுகளை மாதத்திற்கு ஒன்று நடத்தினாலே போதுமானது ஆகும். அதுவும் அனுமதி பெற்று நடத்துவது பயன்படத் தக்க தாகும்.
இதை மாவட்டத் தோழர்கள் உணர வேண்டுகிறேன்.

பெரியாருக்கு ஒரே வேளை உணவு தான், இரண்டு வேளை பால். இப்படித் தான் சிறையில் (ஆஸ்பத்திரியில்) பழக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பாய் யாரும் தவறாமல் பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

கூப்பிட்டால் வந்துவிடுவார், கொடுத்தால் சாப்பிட்டு விடுவார்.

இது இரண்டிலும் அவர் குழந் தையே ஆவார்.

ஆகையால் தோழர்கள் அருள் கூர்ந்து இதைக் கருத்தில் கொள்ளப் பணிவாய் வேண்டுகிறேன். - விடுதலை 8-6-1958

தந்தை பெரியார் எதிர்பார்த்ததற்கு மேலாக அல்லவா, ஒரு தாயாக இருந்து அந்தத் தந்தையை, தலைவரை தமிழ் நாட்டின் பொது வாழ்வுக்குக் காப் பாற்றிக் கொடுத்திருக்கிறார்.

இதனைக் கொச்சைப்படுத்துபவர்கள் குணக் கேடர்களாகத்தான் இருக்க முடியும்.

தன்னைக் காண வந்த எழுத்தாள ராகிய ஒரு பெண்மணியை (அனுராதா ரமணன் - பார்ப்பனப் பெண்மணிதான்) கையைப் பிடித்து இழுத்தவர்கள்தான் அவாளுக்கு ஜெகத் குரு - காமகோடி!- பார்ப்பனர்களின் யோக்கியதைக்கு ஜெகத்குருக்கள் போதாதா?

வாலிப வயதை ஒரு சமூகத்தின் புரட்சிப் பணிக்காகத் தியாகம் செய்து, தலைவரையும் காத்து, தலைவரின் மறைவுக்குப் பிறகு - அந்தத் தலைவர் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் இயக்கத்தைக் கட்டிக் காத்த அந்த கண்ணியமிக்க கடமை உணர்வை, தியாக உணர்வை மதிப்ப தற்கு மரியாதையான பண்பாடும் சீலமும் தேவைப்படும்.

பார்ப்பனர்களிடத்தில் அதனை எதிர்பார்க்க முடியுமா?

முடியாது என்பதற்கு அடையாளம் தான் துக்ளக்கில் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண அய்யர் வாளின் எழுத்துக்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு அவரது நினைவு நாளை யொட்டி (25-12-1974) ராமன், லட்சுமணன், சீதை உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை நடத்திக் காட்டி, இந்தியாவே குலுங்கு மாறு இன எழுச்சிக் காவியத்தை எழுதி வரலாற்றில் கல்வெட்டாகப் பதிந்து போன அன்னையைப் பார்ப் பனர்கள் மதிப்பார்கள் என்று எதிர்பாக்க முடியாதே!

உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத் துக்குத் தலைமை தாங்கிய பெருமை இந்த அன்னையை மட்டும்தான் சாரும். நெருக்கடிக் காலம் என்னும் திராவகப் புயலையும் தீர மிக்க பெரியார் உணர் வால் சர்வ சாதாரணமாகச் சந்தித்த சாதனை சாதாரணமானது தானா?

தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகும் கூட பார்ப்பனர்களால் அத் தலைவர்கள் ஏற்படுத்திச் சென்றுள்ள பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் விட்டில் பூச்சிகளாகத் துடிக்கிறார்கள் என்பதிலிருந்தே அந்தத் தலைவர்கள் காலம் கடந்தும் வெற்றிப் பேரிகை கொட்டி வீறு நடை போட்டு வருகி றார்கள் கொள்கையாய் வாழ்கிறார்கள் என்பது விளங்கவில்லையா?
(சந்திப்போம்)


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நிலைப்பாடு என்ன?


புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், பெரியாரை திராவிடர் கழகத்திலிருந்து நீக்கி வைத்து திராவிடர் கழகத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார் என்று துக்ளக் கட்டுரை கூறுகிறது!

அப்படியெல்லாம் ஏதோ உணர்ச்சி வயப்பட்டுச் சொன்ன வர்கள் எல்லாம், கடைசியில் தந்தை பெரியார் பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்து பெரியார் பக்கமே நின்றனர் என்பது துக்ளக் எழுத்தாளருக்குத் தெரியுமா?

அதே புரட்சிக் கவிஞர் அன்னை மணியம்மையார்பற்றி என்ன எழுதினார்?

தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் - தமிழரைக் காப்பேன்  ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல மலைமேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.

அது மட்டுமல்ல.

குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்போம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம்.

யாரைப் புகழ்ந்து எழுதினோம், புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ் பாட இன்னும் மேலான பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.

பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். 

ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள்மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.

ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறி யினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந் தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை.

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இயக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கால் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்ன தில்லை. எம் அன்னை யாவது முன்னே குவிந் துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி - அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலை யில் வைத்தார் என்பதுமில்லை.  - 10.4.1960 குயில் இதழ்

கோவை அய்யாமுத்து, ப. ஜீவானந்தம் அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று ஒரு பட்டியலைக் காட்டி இவர்கள் எல்லாம் பெரியாரைக் குறை கூறினார்கள் என்று துக்ளக்கில் திருவாளர் இலட்சுமி நாராயண அய்யர் எழுதியிருந்தாலும் இவர்கள் அத்தனைப் பேர்களுமே பிற்காலத்தில் தந்தை பெரியார் அவர்களைச் சரியாகப் புரிந்து கொண்டு, கருத்துத் தெளிந்து தந்தை பெரியார் அவர்கள்பால் அன்பும் மதிப்பும் கொண்டு, அய்யாவின் ஆதரவையும் பெற்றார்கள் என்கிறபோது, துக்ளக் தூக்கிய துப்பாக்கிக்கு துக்ளக் கூட்டமே இரையானது என்பதுதான் கண்ட பலன்!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...