Tuesday, April 30, 2013

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது
சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை

திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்


சென்னை, ஏப்.30- ஜாதிவெறியைத் தூண்டி கலகம் விளைவிப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்  தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தீர்மான எண் (1)
இரங்கல் தீர்மானம்

30.4.2013 செவ்வாயன்று சென்னை பெரியார் திடலில் - துரை சக்ரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தினத்தந்தி அதிபரும், தமிழ்ப் பத்திரிகை உலகில் தனி சாதனை படைத்தவருமான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் (76) அவர் களின் மறைவிற்கும் (19.4.2013).

தி.மு.க. தொழிற்சங்கத் தலை வரும், மக்களவை முன்னாள் உறுப்பினரும், சுயமரியாதை வீரருமான செ. குப்புசாமி (வயது 87) மறைவு (19.4.2013) அவர் களின் மறைவிற்கும் இச்செயற் குழு தனது  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரரும், பெரியார் உரைகளை ஒலிநாடா மூலம் பதிவு செய்து தமிழர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த வருமான திருச்சி து.மா. பெரியசாமி (வயது 80) அவர் களின் மறைவிற்கும் (12.03.2013), திருவாரூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர், சீரிய இயக்க வீரர்,  குடவாசல் வீ. கல்யாணி அவர் களின் மறைவிற்கும் (15.3.2013) இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மான எண் (2)
ஜாதி உணர்வைத் தூண்டுவதற்குக் கண்டனம்!

(அ) தாழ்த்தப்பட்ட - மக் களுக்கு எதிராக ஜாதி உணர் வைத் தூண்டும் சக்திகளுக்கு  இச்செயற்குழு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள் கிறது. ஜாதி வெறியை ஊட்டித் தவறான திசைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்போரைப் புறந் தள்ளுமாறும் இச்செயற்குழு பிற்படுத்தப்பட்ட மக்களைக் கேட்டுக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத் தப்பட்டோர் ஒற்றுமை சமூக நீதிக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமானது என்ற உணர் வைத் தமிழ் மக்கள் உள்ளத்தில் ஊட்டும் பணியில் தீவிரமாக ஈடுபடுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது. ஜாதி வெறியைத் தூண்டுவோர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண் டுமென்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

(ஆ) ஜாதி ஒழிப்புத் திசையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட் டத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதால், இதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப் பெறச் செய் வதில் நமது பணியை முடுக்கி விடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மே 4-இல் நடைபெற இருக்கும் இளை ஞரணி மாநில மாநாட்டில் அதற்கான  போராட்டத் திட்டத்தை அறிவிப்பது  என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மான எண் (3)

இராஜபாளையம் மாநில இளைஞரணி மாநில மாநாடு

இராஜபாளையத்தில் வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிப் பெறச் செய்ய முனைப்புக் காட்டுமாறு கழகத் தோழர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

பெரியார் பிஞ்சு முதல் முதியோர் வரை குடும்பம் குடும்பமாக வருமாறு இச்செயற்குழு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறது.

சேது சமுத்திரத் திட்டமும் அ.இ.அ.தி.மு.க.வும்



சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.வின் இந்த நிலைப்பாட்டுக்கு காலா காலத்திற்கும் பதில் சொல்லித் தீர வேண்டும். தமிழ் நாட்டுக்கு அதிகாரப் பூர்வமாக செய்யப்பட்ட துரோகம் என்பதில் கல்லின்மேல் செதுக்கப்பட்ட எழுத்தாகும்.

150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கனவு காணப்பட்ட திட்டம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுகவைச் சேர்ந்த திரு. டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து, அந்தக் கனவுத் திட்டத்தை நனவு திட்டமாக மாற்றப்படும் ஒரு கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. இத்தகைய முட்டுக் கட்டையைப் போட்டு வருகிறது.

இவ்வளவுக்கும் இக்கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; திராவிட இருக்கிறது; அந்த அண்ணாவின் கொள்கை நிலைப்பாட் டுக்கும் திராவிட இயக்கத்தின் நோக்கத்துக்கும் முற்றிலும் விரோதமாக செயல்படுவது மன்னிக் கவே முடியாத பெருங் குற்றமாகும்.

இவ்வளவுக்கும்  2001 சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்  வலியுறுத்தப் பட்ட திட்டமாகும்.

2001 மே மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவையின்போது அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை (பக்கம் 84 மற்றும் 85)யில் என்ன கூறப்பட்டுள்ளது?

இந்திய தீபகற்பத்தை சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு  ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டு மானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம் இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும் இலங்கை யின் தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத் திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தி, கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்..

இத்திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981இல் ஆட்சியில் இருந்த டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசுதான் கொடுத்தது; இருப்பினும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு. இத்திட்டத்திற்கான உரிய கவனத் தையோ, முக்கியத்துவத்தையோ கொடுக்க வில்லை என்று இவ்வளவுத் திட்டவட்டமாக அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு அதற்கு முற்றிலும் முரணாக அந்தத் திட்டத்தையே கை விட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லுவது ஏன்?

இப்படி முரண்பட்டதற்கு நியாயமான காரணத்தை இதுவரை செல்வி ஜெயலலிதா கூறியதுண்டா?

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதன் அரசியல் இலாபம் தி.மு.க.வுக்குப் போய் விடும். தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு அவர்கள் அத்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்தப் பட்டதால் தி.மு.க.வுக்குச் செல்வாக்கு  ஏற்பட்டு விடும் என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சியும் பொறாமையும்தான் இதற்குள் புதைந்து கிடக்கின்றன.

நாட்டு நலனைவிட அரசியல் நலன்தான் முக்கியம் என்று கருதுகிற மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது.

முதலில் ராமன் பாலம் - அதனை இடிக்கக் கூடாது என்று சொன்னவர் இப்பொழுது இந்தத் திட்டமே கூடாது என்று சொல்லுகிறார் என்றால் இதற்குக் காரணம் அரசியல்! அரசியல்!! அரசியலே!!!

தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்ட மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். அடுத்த தேர்தல்களில் தங்கள் வெறுப்பை - எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

ஜெயங்கொண்டத்தில் ஜெயபேரிகை!




ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.

மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.

வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.

மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)

இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.

ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.

ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.

நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.

அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை! 

இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.

இனமுரசு இயக்கம் இதுதான்!

சமூகநீதி இயக்கம் இதுதான்!

பகுத்தறிவு இயக்கம் இதுதான்!

பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!

ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!

சகோதரத்துவம் பேணும்,

சமத்துவ இயக்கம் இதுதான்!

நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;

வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!

அறிவை மட்டுமல்ல,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
ஓம்பும் கொள்கை
இதனிடம்தான் உள்ளது.

இது ஓர் உலக இயக்கம்;

மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!

இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!

மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!

ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!

ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!

ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!

மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;

கேட்கட்டும் ஜெயபேரிகை!

- மின்சாரம்

சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு


மே 4ஆம் தேதி ராஜபாளையத்தில் நடக்க இருக்கும் மாநில இளைஞரணி மாநில மாநாடு - ஜாதி ஒழிப்புக்குத் திட்டம் தரும் மாநாடு - சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் மாநாடு என்று குறிப்பிட்டு பெரியார் பிஞ்சுகள் முதல் அனைவரும் ராஜபாளையத்திற்கு வருகை தருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் 1944-இல் எழுதினார் தமது குடிஅரசு வார ஏட்டில்: நான் ஒருவரை வாலிபர் என்று சொல்வது அன்னாருடைய வயதைப் பொறுத்தது அல்ல; என்னைப் பொறுத்த வரை எனக்கு இயக்கப் பொறுப்பைத் தவிர, வேறு பொறுப்பு இல்லை. எனவேதான் என்னை நான் ஒரு வாலிபனாகவே (இளை ஞனாகவே) இருந்து தொண்டாற்ற எனக்கு இயற்கை வசதி அளித்திருக்கிறது என்றார்.
உற்சாகம் பொங்க வாரீர்!
நமது இயக்கத்தின் புதிய ரத்த ஓட்டமான புத்துணர்ச்சி பொங்கும் எமது ஈடு இணையற்ற லட்சியப் படை வீரர்களான இளைஞர்களே, எம் அரும் தோழர்களே, (தோழியர்களும் இதில் அடக்கம்).
உங்களை உற்சாகம் பொங்க ஓடிவர அழைக்கிறோம் - ராஜபாளையம் நோக்கி! ஆம் -தென் திசையில் நடைபெறும் நமது மாநில இளைஞரணி மாநாடு இதுவே முதல் தடவை! கழகத்தின் கறுஞ்சிறுத்தைப் பட்டாளத்தைக் கண்டு தென் திசை திகைக்க வேண்டும்! அழைப்பது கேளிக்கைக்காக அல்ல; சுற்றுலா இன்பம் சுவைக்க அல்ல, சுயமரியாதைச் சூரணம் உண்டு; சூடேற்றி சோர்விலா லட்சியப் போரில் ஈடுபட்டு பெரியார் பணி முடிக்க, அணி திரண்டு வாருங்கள்! இச்சமுதாயத்தின் பிணி - ஜாதி, மதம், மூடநம்பிக்கை, பெண்ணடிமை முதலியவை ஒழிக்க அறுவை சிகிச்சை செய்ய, அய்யா வழியில் அரும்பணி ஆற்றிட ஆற்றல் மிகு இளைஞர்களே, எம் அருந்தோழர்களே, புறப்படத் தயாராகுங்கள் - ராஜபாளையம் நோக்கி!
சங்கடமில்லை - சபலமில்லை!
நமது அறிவு ஆசான் வாலிபத்திற்குக் கூறிய வரையறையினைத்தான் யானும், பெரியார் தந்த புத்தியையே கொண்டு சொந்த புத்தியை ஒதுக்கி வைத்து விட்டு, நாளும் பணியாற்றிடும் நிலைக்கு என்னுள் நியாயம் கற்பித்துக் கொள்ளுகிறேன்.
சலிப்பில்லை; சங்கடமில்லை. சபலமில்லை; சலனமில்லை. பயணம் தொடர்கிறது; காரணம் நாம் நடைபோடுவது - அதிலும் வீர நடைபோடுவது பெரியார் பாதையில்,
இணையற்ற ஈரோட்டுப் பாதையில் இந்த லட்சியப் பயணத்தில் நம்மை நோக்கி இருட்டடிப்புகள், எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்கு முறைகள், தரமற்ற நாலாந்தர நரகல் நடைப் பேச்சுகள், ஏச்சுகள் வீசப்படுவதை அலட்சியம் செய்து, குறிக்கோள்தான் நமது குறியேதவிர, குதர்க்கப் புத்திக் குறும்பர்களுக்கு, பதிலை சொல்லி நமது காலத்தை, கருத்தை, உழைப்பை ஒருபோதும் வீணாக்க மாட்டோம்!
குக்கல்கள் குரைக்கட்டும்!
குரைக்கும் குக்கல்கள் எத்தனையோ பெரியார் காலந்தொட்டு இன்றுவரை; அவை இன்று குப்பைத் மேடுகளுக்குள் மக்கிச் சீரழிந்து கொண்டுள்ளன!
அந்தக் குப்பைகளை நமது கொள்கைப் பயிர் களுக்கு உரமாக்கி; நல்ல செழிப்பான கொள்கைக் கதிர் மணிகளை அறுவடை செய்து காட்டியவர் நம் தலைவர்.
அவர் வழியே நம் வழி!
எனவே அவர் இட்ட பணி முடிக்க, நம் இனத்தின் பழி துடைக்க,  இழிவை நீக்க, அடுத்து போராட்ட களம் ஆயத்தப் பாடிவீடுதான் - பாசறைக்கான போர்ச்சங்கு முழக்கிடத்தான் ராஜபாளையத்தில் உங்களைச் சந்திக்க விழைகிறோம் தோழர்களே!
95 வயது நிறைந்த இளைஞர்தான் நமது தலைவர்
குடும்பம் குடும்பமாகப் புறப்படுங்கள், எல்லா வயதினருமான நம் இயக்கத்தின் இளைஞர்களே!
காரணம் - 95 வயது நிறைந்த இளைஞர் தான் தலைவர்தான் இறுதி மூச்சடங்கும் வரை நம்மை வழி நடத்திட்ட தலைவர்!
வயது இடைவெளி - இவ்வியக்கம் அறியாத சமவெளி என்பதை மறவாதீர்!
இருபாலரும் - ஏன் பெரியார் பிஞ்சுகளும்கூட - குடும்பம் குடும்பமாகத் திரள வேண்டும்!
அதைப் பார்த்து அந்த ஊர் சிறுக்க (குறுக) வேண்டும்!
உலகம் வியக்க வேண்டும்!!
இயக்கத்தவர்களை சிறைக்கு அனுப்பிடத் தீர்மானிக்கும் வழியனுப்பு மாநாடு! சங்கமிப்போம் வாரீர்!
ராஜபாளையம் - நமக்கு, ராஜபாட்டையைக் காட்டி, பெரியார் பணி முடிக்க, அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் எழுந்து நடமாடிடும் வண்ணம் செய்ய, சமரசமற்ற கொள்கைச் சமரில் ஈடுபட நாம் அனைவரும் சங்கமிப்போம்! வாரீர்! வாரீர்!!
கருங்கடல் பொங்கட்டும்! தியாக தீபங்களின் சுடரொளியாக வெளிச்சம், நமது வெற்றிப் பாதைக்கு வழிகாட்டட்டும்!
வாருங்கள், தோழர்களே வாருங்கள்!
அன்போடு  அழைக்கும் உங்களின் ஓய்வு விரும்பா
தொண்டன் தோழன்

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை, 29.4.2013


.

Monday, April 29, 2013

இஸ்லாமிய நாடுகளில் பகுத்தறிவுப் புயல்


- இளையமகன்
நாத்திகர்கள், பகுத்தறிவாளர்களுக்கு கடவுளுடன் வாய்க்கால் வரப்புச் சண்டை எதுவும் இல்லை. பின் ஏன் கடவுள் மறுப்பைப் பேச வேண்டும்? இந்தக் கேள்வி எழுவது இயற்கைதான். உலக மனிதர்கள் அனைவரும் உடன்பிறப்புகள். வாழும் நிலத்தால், இயற்கைச் சூழலால் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒருவேளை, இடையிடையே கடலே இல்லாமல், ஒரே நீளமாக நிலமாகவே இருந்திருந்தால் இவ்வளவு வேற்றுமைகள் இருந்திருக்காதோ என்னவோ? இத்தனை மதங்கள் இருந்திருக்கக்கூட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். கொஞ்சம் முரண்பாடுகளுடன் மக்கள் வாழ்ந்திருப்பார்கள்.
மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதாக மதவாதிகளால் சொல்லப்படுகிறது. ஆனால், மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால் நடக்கும் தீமைகளைப் பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. மதங்கள் தொடங்கப்பட்ட காலங்களில் அந்த நாள் சமூகத்துக்கு மதத்திற்கான தேவைகூட இருந்திருக்கலாம். ஆனால், அந்தத் தேவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் அப்படியே இருக்குமா என்ன? காலம் மாறும் போது கருத்துகளும் மாறும். இது இயற்கை நியதி. உலகின் இயங்கியல். அதனால்தான் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தேவை மாறாமல் இருந்திருந்தால் புதிய மதங்கள் தோன்ற வேண்டிய அவசியம் இருக்காதே!
மதங்களும் காலத்திற்கேற்ப தங்களைச் சிறு சிறு மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்டு தம்மைத் தக்க வைத்துக் கொள்கின்றன. எந்த மதமும் இதிலிருந்து தப்ப முடியாது. இதற்குக் காரணம் பகுத்தறிவின் வளர்ச்சிதான், வேறல்ல. அய்ரோப்பாவின் நோயாளி என வர்ணிக்கப்பட்ட துருக்கியை முஸ்தபா கமால் பாட்சா மாற்றி அமைத்தார். அந்த மண்ணின் இஸ்லாமியர்கள் அதுவரை பின்பற்றிய உடை, மொழி, தோற்றம் என அனைத்திலும் மாறுதல்களைச் செய்தார். அவரைத்தான் அம்மக்கள் துருக்கியின் தந்தை என்றழைக்கின்றனர். பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவுக்கு முஸ்தபா கமால் பாட்சாதான் மானசீகம். ஆனால், ஜின்னாவின் மரணம் அந்நாட்டினை முழு மதவழிப்பட்ட நாடாக மாற்றிவிட்டது வரலாற்றின் சோகம்.
அறிவியல் வளர்ச்சியின் தொடக்க காலத்திலேயே அந்த மாற்றங்களை அந்நாடுகள் சந்தித்ததென்றால், அறிவியலுடன் தொழில்நுட்ப ஊடகவியலும் அனைத்து மக்களையும் சென்றடைந்து, உலகத்தையே இணைத்து வரும் இந்தக் காலத்தில் மாற்றம் நடைபெறாமலா இருக்கும்?
மிகுந்த கட்டுப்பாடான மதச் சட்டங்கள் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் சில ஆண்டுகளாக பகுத்தறிவுக் குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.
கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே உண்மை இதழில், பாரெங்கும் பரவும் பகுத்தறிவு பாகிஸ்தானை விடுமா? என்ற தலைப்பில் பாகிஸ்தானில் இளைஞர்கள் பகுத்தறிவுக் கொள்கையுடன் மதத்தைத் துறந்து வருவதைப் பதிவு செய்திருந்தோம். ஆண்கள் மட்டுமல்லாமல், அதீத கட்டுப்பாடுகள் காரணமாக இஸ்லாமியப் பெண்களும் இந்த அடக்குமுறைகளை எதிர்த்துத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இரானின் கடவுள் மறுப்பாளர்களும் (கிலீமீவீ) கடவுள் கவலையற்றோரும் (கிரீஸீஷீவீநீ) தங்களுக்கென திறந்துள்ள முகநூல் பக்கத்தில் சுமார் 49000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மதங்களுக்கும், மூடநம்பிக்கைக்கும், பெண்ணடிமைக்கும் எதிரான தங்கள் கருத்துகளை எழுத்து, ஓவியம், புகைப்படம், காணொளி வாயிலாக, மிகச் சரியான தர்க்க வாதங்களோடும், எளிமையாகப் புரியும் விதத்திலும் பகிர்ந்து வருகின்றனர். அறிவியலின் துணையோடு அத்தனை மதங்களையும் தகர்த்தெறிகிறார்கள்.  பதில் கொடுக்க முடியாமல், தடுமாறி வருகின்றனர் மதவாதிகள். கட்டற்ற இணையதளங்களில் பகுத்தறிவுக் கேள்விகளை எதிர்கொள்ள வக்கில்லாமல், அவற்றிற்குத் தடை கோரவும், அப்படி எழுதுபவர்களைத் தாக்கவும் தொடங்கியுள்ளனர். பகுத்தறிவுக் கருத்து பேசுவோரைத் தாக்குவது காலம் காலமாக நடப்பதுதான். இதற்கெல்லாம் பயந்து அவர்கள் ஒருபோதும் ஒடுங்கிவிடவில்லை என்பதைத்தான் வரலாறு நெடுகவும் நமக்குச் சொல்கிறது. ஈரான், பாகிஸ்தான், டுனிசியா என்று நமக்கு ஆங்காங்கே தெரியும் நாடுகள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய நாடுகளில் பரவலாக பகுத்தறிவுக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
வங்காளதேசத்தில் மதத்திற்கெதிரான கருத்துகளைத் தெரிவித்த தஸ்லீமா நஸ்ரின் நாடு கடத்தப்பட்டது நாமறிந்தது. இப்போது அங்கே குறிப்பிடத்தக்க அளவில் மதச்சார்பற்றவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் பலர் நாத்திகர்களாகவும் இருக்கின்றனர். வங்காளதேச அறிவுலகில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அங்கே வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே, இதனை மதவாதிகள் மிகுந்த வெறுப்புணர்வோடு எதிர்கொள்கின்றனர்.
இவ்வாண்டின் தொடக்கம் முதலே நாத்திகக் கருத்துகளை எழுதும் வலைப்பதிவர்கள், எழுத்தாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் போக்கு அதிகரித்துள்ளது. கருத்தைக் கருத்தால் சந்திக்கும் வன்மையற்றவர்களின் நடவடிக்கை இப்படித்தானே இருக்கும். இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஆசிஃப் என்ற வலைப் பதிவர் மீது மிகக் கடுமையான கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தையும், நபியையும் இழிவுபடுத்துவதாக அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணம் சொல்லப்பட்டது. அதற்கு முன்பும் தொடர்ந்தும் இத்தகைய நிகழ்வுகள் நடந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் வங்காளதேசப் பத்திரிகையாளர்கள். 2004-ஆம் ஆண்டு கவிஞரும் இலக்கியவாதியும், நாவலாசிரியருமான ஹுமாயுன் ஆசாத் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அவர் ஜெர்மனியில் மரணத்தைத் தழுவினார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து நாத்திக எழுத்தாளர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் எழுந்து வருகிறது மதவாதிகளிடமிருந்து! மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் ஆசிஃப் உள்ளிட்ட மூன்று வலைப்பதிவர்கள் கைது செய்யப்பட்டனர்.  மொத்தம் 84 நாத்திக எழுத்தாளர்களின் பெயர்ப்பட்டியலை இஸ்லாமிய மதவாதிகள் வங்கதேச அரசிடம் வழங்கியுள்ளனர் என்றும் அவர்களும் கைது செய்யப்படலாம் என்றும் பத்திரிகைகள் சொல்கின்றன.
தொடர்ந்து பல்லாண்டுகாலமாக வங்கதேச நாத்திகர்களுக்கும் இஸ்லாமிய மதவாதிகளுக்கும் இணையதளத்தில் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. எனினும், கடந்த பிப்ரவரி மாதத்தில் நாத்திக எழுத்தாளர் அஹ்மத் ரஜிப் ஹெய்டர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தும், 1971இ-ல் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையின் முடிவில் ஜமாத்--_எ_ இஸ்லாமி மதவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பலர் மீதும் குற்றச்சாட்டு உறுதியாகி, அவர்கள் தண்டனைக்குட்பட வேண்டியிருக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாலும் இப்போது இந்தப் போராட்டங்கள் வலுத்துள்ளன. வங்கதேச அரசு நாத்திக எழுத்தாளர்கள் சிலரின் வலைத்தளங்களைத் தடை செய்துள்ளது. இஸ்லாம் மதவாதிகளுக்கெதிராக மதச்சார்பற்ற எழுத்தாளர்களும், அவர்தம் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, மூன்று எழுத்தாளர்கள் கைதுக்கும், வலைத் தளங்கள் தடை செய்யப்படுவதற்கும் எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதற்கு எதிராக மதவாதிகளும் பெருமளவில் கூடி, இஸ்லாமுக்கு எதிராக எழுதுவோரை மரண தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென்றும், இஸ்லாமைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இப்போது உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்கள், மனிதநேய அமைப்புகள், நாத்திகர்கள் வங்கதேச நாத்திகர்களுக்கு ஆதரவாக அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தஸ்லீமா நஸ்ரின் உள்பட பலரும் தங்கள் ஆதரவை மதச்சார்பற்ற எழுத்தாளர்களுக்குத் தெரிவித்துள்ளனர். வங்கதேசம் தவிர மொராக்கோ, நைஜீரியா போன்ற நாடுகளிலும் மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. அதற்கும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கருத்தைக் கருத்தால் சந்தித்து வளர்ந்ததே இன்றைய உலக வளர்ச்சி. ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்த முழு உரிமை உண்டு; அந்தக் கருத்தை மறுக்கவும் மற்றவர்க்கு உரிமை உண்டு; ஆனால், நீ இந்தக் கருத்தைச் சொல்லாதே என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்றார் பெரியார்.
எதையும் நம்பாதே உன் அறிவால் ஆராய்ந்து பார் என்பது பகுத்தறிவு; அறிவியல். ஆனால், நான் சொல்வதை அப்படியே நம்பு; ஆய்ந்து பார்க்காதே என்கிறது மதம். மதவாதிகளோ மதங்களுக்கு எதிரான கருத்துகளையே பேசக்கூடாது என்கின்றனர். மரணதண்டனை கொடு என்று அரசிடம் வேண்டும்போதும், தாங்களே தாக்குதல் நடத்தும்போதும் ஒரு விசயத்தை மதவாதிகளே தெளிவாக ஒப்புக் கொள்கிறார்கள்.- அது கடவுள் இல்லை; அதற்குச் சக்தி இல்லை. எனவேதான் நாங்கள் அரசிடம் முறையிடுகிறோம் என்பதுதான்.
எந்தக் காலத்திலும் -அறிவு _ மதவாதத்திற்கும்- _ஆதிக்கத்திற்கும் அடங்கியிருக்காது. உலகத்தின் வளர்ச்சிக்கு மதங்கள் மடிவதும், மனிதம் வளர்வதும் இன்றியமையாதது. காலம் அதைநோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. மதவாதிகளின் பதற்றம் நமக்கு உணர்த்துவது மதம் ஆட்டம் காண்கிறது என்பதையே! நாமும் அதையே எதிர்பார்க்கிறோம்.
இன்னும் வேகமாக பகுத்தறிவுக் கருத்துகள் பரவ எதிர்ப்பு அவசியம்தானே. முடிந்தால் அறிவுத் தளத்தில் நின்று மோத மதவாதிகள் தயாராகட்டும். -பகுத்தறிவாளர்கள் தயார்! இல்லையேல், உலகம் மதவாதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு முன்னேறிக் கொண்டேயிருக்கும். மற்றபடி, இந்த மிரட்டல் வன்முறை, மரணதண்டனை எல்லாம் அறிவு வளர்ச்சியை ஒரு நாளும் தடுக்க முடியாது.

முதல் அமைச்சர் அவசரம் காட்ட வேண்டும்


தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மான்யக் கோரிக்கைமீது கடந்த வெள்ளிக்கிழமையன்று (26.4.2013) இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்லிஸ்ட்) உறுப்பினர் ஏ. லாசர், அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடர்பாக மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு முறையை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தகுதித் தேர்வில் உயர் ஜாதியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோர் வெற்றி பெறுவதற்கு தனித்தனி மதிப்பெண்களை மத்திய அரசு தீர்மானித்துள்ளது; ஆந்திரத்தில்கூட ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகபட்ச இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். முற்பட்ட மக்களுக்கு (உயர் ஜாதியினருக்கு) 60 சதவீத மதிப்பெண், பிற்படுத்தப் பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண், தாழ்த்தப் பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 40 சதவீத மதிப்பெண் என்று தனித் தனியே நிர்ணயிக்கப் பட்டுள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரே தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாசன உரிமையான இடஒதுக்கீடு முற்றிலு மாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
சி.பி.எம் உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் எழுப்பியுள்ள இந்தப் பிரச்சினை மிகவும் முக்கிய மானது.
இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கையினை விடுதலையில் (2.4.2013) வெளியிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கைக்கு 24 நாட்களுக்குப் பிறகு சட்டப் பேரவையில் இந்தப் பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. மாநில அரசு இந்த மிக முக்கியமான பிரச்சினையில் சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?
சட்டமன்ற, உறுப்பினர் எழுப்பிய பிரச்சினைக்குக் கல்வி அமைச்சர், இதுகுறித்து முதலமைச்சர் பரிசீலித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளதோடு, இன்னொரு கருத்தையும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க நடத்தப்படும் தேர்வு, ஒரு தேர்வில் பிற்படுத்தப்பட்டோர் அத்தனைப் பேரும் தேர்ச்சி பெற்றால் அத்தனைப் பேருக்கும் வேலை கொடுக்க முடியாது. வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர்கள் பணிய மர்த்தப்படுகின்றனர் என்று பதில் கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் கூறிய பதிலைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட பிரச்சினை என்ன என்பதை அறியாமல் பதில் சொல்லியிருக்கிறார் என்றே கருத வேண்டி யுள்ளது.
குற்றச்சாற்று - தகுதித் தேர்வுக்குத் தாழ்த்தப் பட்டோர் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் என்ற பிரிவுகளுக்குத் தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படாதது ஏன்?
சகட்டுமேனியாக உயர் ஜாதியினருக்கு என்ன மதிப்பெண்ணோ, அதே மதிப்பெண் 60 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நிர்ணயித்திருப்பது இடஒதுக்கீடு சட்டத்திற்கு விரோதமானதாயிற்றே என்பதுதான் குற்றச்சாற்று.
இதற்குக் கல்வி அமைச்சரின் பதில் என்ன என்பதுதான் பிரச்சினையே -  அதற்கு நேரிடையான பதில் சொல்லாமல், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்.
தனித்தனியே மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இன்னும் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருப்பார்களே, அந்த வாய்ப்பு இப்பொழுது பறிக்கப் பட்டுள்ளது என்பதுதான் முக்கிய குற்றச்சாற்று.
இன்னொரு பிரச்சினையையும் சி.பி.எம். சட்டமன்றக் குழுத் தலைவர் தோழர் சவுந்தரராசன் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.
தகுதி மதிப்பெண்களில் நிர்ணயிக்கப்பட்டதற்கும், அதிக மதிப்பெண் ஒருவர் பெற்றால் அவரைப் பொதுப் பிரிவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்; அப்படி நடைமுறையில் கொண்டு செல்லப்படுவதில்லை என்று கூறியிருக்கும் குற்றச்சாற்று மிகவும் கடுமை யானது. இதனை அலட்சியப்படுத்தவும் கூடாது. சி.பி.எம். உறுப்பினர் கூறிய குற்றச்சாற்றின் பொருள் தெளிவானது. இடஒதுக்கீடு இத்தனை சதவிகிதம் என்று சட்டப்படி பெற்றிராத உயர் ஜாதியினருக்குத் திறந்த போட்டிக்குரிய 31 சதவீதம் ஒட்டு மொத்தமாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இது எவ்வளவுப் பெரிய கொடுமை!  சமூக அநீதி! முதல் அமைச்சர் விரைந்து இதற்கு நியாயமான தீர்வு காணாவிட்டால் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.
முதற்கட்டமாக மக்கள் மத்தியில் பெரும் அளவில் எடுத்துச் செல்லப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ!


மனைவி செண்பகவள்ளியின் சிலைக்கு தீபாராதணை காட்டும் சுப்பையா
இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ!  புதுக்கோட்டை நகரப்பகுதிக்குள் இருக்கும் உசிலங்குளம் ஏழாம் வீதியில் உள்ளவர்  சுப்பையா. இவர்  தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர்  தன் மனைவிக்குக் கோயில் கட்டி அதில் மனைவியின் சிலையை நிறுவி மற்ற கோயில்களில் நடக்கும் ஆகம விதிப்படி இங்கும் பூசைமுறைகளைக் கையாண்டு மனைவியை வணங்கி வருகிறார் .
இது குறித்து சுப்பையாவிடம் கேட்டபோது என் அப்பா மன்னர்  காலத்தில் கையெழுத்துப் போடத் தெரிந்த காரணத்தால் அப்போதே காவல் துறையில் வேலையில் சேர்ந்து விட்டார் . 1958-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார் . நான் பிறந்தது 1.7.1935இ-ல். என் மனைவி செண்பக வள்ளி பிறந்தது 23.3.1943. அவர்  எனக்கு தாய்மாமன் பொண்ணு. ஏழெட்டு வயதாக இருக்கும்போதே என் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். அந்தப் பழக்கமானது வாலிபப் பருவத்திலும் தொடர்ந்ததால் எனது 21-ஆவது வயதில் இருவருக்கும் பெற்றோர்  திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது நான் தொலைபேசித்துறையில் பணி புரிந்து வந்தேன். எங்களுக்கு ஆண் குழந்தைகள் 5 பெண்குழந்தைகள் 5-என பத்துக் குழந்தைகள் பிறந்தனர் . அவர்களில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இறந்து விட, இருப்பது எட்டுப்பேர் . அனைவருக்கும் திரு மணம் ஆகி விட்டது. அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மக்கள் மருமக்கள் அனைவரும் அர சுப் பணிகளிலும் தொழில்துறை களிலும் இருக்கிறார்கள்.
எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம். ஒருநாள்கூட ஒருவர்  மீது ஒருவர கோபப்பட்டது கிடையாது. கடந்த 7.9.2006இ-ல் என் மனைவி செண்பகவள்ளி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார் . அவரது பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது. இந்நிலையில் அவருக்கு ஒரு கோயில் கட்ட நினைத்து மகன்களிடம் சொன்ன போது யாரும் ஒத்துக் கொள்ள வில்லை. மகள்கள் மட்டும் ஒத்துக் கொண்டார்கள்.
அதன்படி என்மனைவியின் போட்டோவைக் கொடுத்து சிலை செய்யச் சொன்னேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி அவருடைய உரு வத்தை ஒத்து வந்தது. ரூபாய் 2-லட்சம் செலவில் அய்ம்பொன் சிலை கும்பகோணத்தில் செய்யப் பட்டது. திறப்பு விழாவிற்கு மகன்கள் நான்கு பேருமே வர மறுத்து விட்டார்கள். மகள்களும் மருமகன்களும் மட்டும் வந்தாரகள். திறப்பு விழா செய்தேன். இன்றுவரை தினமும் வழிபட்டு வருகிறேன். எனக்கு தெய்வமாய் இருந்து வழிகாட்டி வருகிறார்.
மகன்களுக்கு மட்டும் இந்தக் கோயில் கட்டுவதிலோ வழிபாடு நடத்துவதிலோ விருப்பமே இல்லை. அதனால் எந்தச் செலவுக்கும் பணம் தர மறுத்து விட்டார்கள். ஆனாலும் மகன்கள் பெயர்கள் எல்லாம் வருகிறமாதிரி கிரில் சன்னல்களும் கல்வெட்டுக்களும் வடிவமைத்து விட்டேன். பிற்காலத்தில் அவர்களது பெயர்களும் நிலைக்க வேண்டும் என்பதற்காக. எனது சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் சிலை வடித்தேன் கோயிலும் கட்டினேன். எல்லாமுமாக மூன்று லட்ச ரூபாய் செலவானது.
இப்போதும் தினமும் என் செண்பகவள்ளியை வணங்கி விட்டுத்தான் மற்ற பணிகளுக்குச் செல்வேன். சில நேரங்களில் ஆக மத்திற்காக பூசகரை வைத்து வழி பாடு நடத்துவேன். ஆண்டுக்கொரு முறை மகள்களும், மருமகன்களும் மட்டும் வந்து வணங்கிச் செல் வார்கள் என்றார்.
இந்தச் செயல்பாடுகளில் பல உண்மைகள் தெரிய  வரும். கோயில் என்றால் அது என்னவோ பெரிய சக்தி மாதிரி வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையை நாம் உணர வேண்டும். மன்னருக்கு முடிந்ததால் மனைவிக்கு தாஜ்மகால் கட்டினார். இவருக்கு முடிந்ததால் மூன்று லட்சத்தில் கோயில் கட்டியிருக்கிறார்  என் பதைத் தவிர வேறொன்றுமில்லை. அதே போல் நான்கு புறமும் சுற்றி வருவதால் இயல்பாகவே ஆண் களுக்கு பக்தியில் நம்பிக்கை இல்லை. ஆனால் பெண்களுக்கு அதை விட்டால் வேறு வழியே இல்லை என்பதுபோலவும் அதே நேரத்தில் அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் என்கிற அளவில் பக்தியைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் சுப்பையா மட்டும் மணியடித்துக் கொண்டிருந்தால் யாரும் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் ஆகம விதிப்படி என்று சொல்லி பூசகரை வரவழைத்து பூசைகள் செய்வது. அந்தக் கோயில் இல்லை என்றால் அவர் வேறு கோயிலுக்குச் சென்று மனைவியை நினைத்து உருகிக் கொண்டிருப்பார். மனநிலை பாதிக்கப் பட்டிருப்பார் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.
அதேபோல் இன்றைக்கு உருவாக்கி வைத்திருக்கும் கிரில் கேட்டும் கல்வெட்டும்தான் நாளைய வரலாறு. இன்றைக்கு மகன்கள் வரவில்லை என்றபோதிலும் நாளை அவர்களது பிள்ளைகள் வரும் போது நம் பாட்டி என்று வணங்குவார்கள். அவர்களது பிள்ளைகள் வரும்போது முன்னோர் தெய்வமாக்கப்பட்டு விடுவார் செண்பகவள்ளி. இப்படித்தான் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வோர் இடத்திலும் கோயில்கள் உருவாகி இருக்கின்றனவே தவிர வேறொ ன்றுமில்லை. அந்தக் கோயில்களால் மட்டுமல்ல எந்தக் கோயிலாலும் ஊருக்கும் மக்களுக்கும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. ஒன்று மட்டும் நடக்கும் என்பது உண்மை.
அதாவது சிறிய கோயிலாக இருந்து பிரபலமானால் கோயில் பூசகருக்கு மட்டும் வருமானம். அதுவே பெரிய கோயிலாகி விட்டால் பார்ப்பன இனத்துக்கே வருமானம் தரும் கோயிலாக நம் துணையோடு மாற்றப்பட்டு விடும். அதில் பார்ப்பானின் பணமோ உடல் உழைப்போகூட இருக்காது. எனவே கோயில்களின் தன்மை அறிந்து ஒதுங்கிக் கொள்வது ஒன்றே நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் நல்லது.
- - புதுக்கோட்டையிலிருந்து கண்ணன்

Sunday, April 28, 2013

நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!


ஜாதியை ஒழித்து இன ஒற்றுமை காத்தார் தந்தை பெரியார், ஜாதியைக் காட்டி கலவரத்தை மூட்டி ஒற்றுமையை சிதைக்கலாமா?
இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் தயார்!
தமிழர் தலைவரின் காலங் கருதிய அறிக்கை
அய்.ஏ.எஸ். தேர்வு இந்தியிலும், இங்கிலீஷிலும்தான் எழுதப்பட வேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களே, கிளர்ந்தெழுவீர்!
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மிகவும்  தேவை, ஜாதி தீயை மூட்டி இன ஒற்றுமையைக் குலைக்க வேண்டாம். இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கக் கழகம் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சில மாதங் களுக்குமுன் தருமபுரியிலும், சில நாட்களுக்கு முன் மரக்காணம் பகுதியிலும் ஜாதியை வைத்து நடைபெற்று இருக்கிற கலவரங்கள், தீவைப்புகள், கொலைகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.
தந்தை பெரியாரின் கோட்பாடு
ஜாதிகளால் பிளவுபட்ட தமிழர்கள் மத்தியில் முக்கால் நூற்றாண்டு காலம் அயராது பாடுபட்டு, தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மனப்பான்மையை அகற்றி தமிழர் என்ற ஓரினக் கோட்பாட்டை உருவாக்கினார்கள்.
பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் ஒழிந்திருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் என்பது நாம் பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். இந்த நிலையில் அண்மைக் காலத்தில் இந்த நிலை மாற்றப்படுவதற்குக் காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள்  - ஒடுக்கப்பட்டவர்கள்!
வன்னியர், தேவர், நாடார் போன்ற மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டுக்கு உரியவர்கள் அல்லர் என்றாலும், கல்வி உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப்பட்டு வந்த உடலுழைப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் இவர்களின் முன்னேற்றம்தான் சமுதாயத்தின் முன்னேற்றமாக இருக்க முடியும்.
இந்நிலையில் இவர்கள் ஒன்றுபட்டு நின்றால் தான், போராடினால்தான் கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு சமூகத்தில் சுயமரியாதைக்கான தகுதிகள் கிடைக்க முடியும்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சித் தலைவர்கள் இந்த அடிப்படையில்தான் கருத்துக்களைக் கூறி வந்துள்ளனர். பாடுபட்டும் வந்திருக்கிறார்கள்.
இதனை தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் உணர்ந்திட, உணர்ந்து நடந்திடத் தவறக் கூடாது.
ஏணிப்படி ஜாதிமுறை
வருணாசிரம அமைப்பு முறையில் ஏணிப்படி ஜாதி முறை (Graded Inequality) என்பதன் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே அவ்வப்போது நடைபெறும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
தந்தை பெரியார் தெளிவாகவே மிக திட்டவட்டமாகவே பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது!  என்று சொன்னதை பார்ப்பனர் அல்லாதார், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக் களும், அவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்புள்ள தலைவர்களும் உணர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மாமல்லபுரத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு இளைஞர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாஸ் அவர்களும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரின் உரைகளும், எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை, இவற்றைப் பேசியவர்கள் ஒலி நாடா மூலமாகவோ, வீடியோ மூலமாகவோ போட்டு மறுபடியும் கேட்டுப் பார்க்கட்டும்.
சமூக நல்லிணக்கத்தை வளர்க்கக் கூடிய உரைகளா அல்லது தீண்டத்தகாத மக்களாக ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பகைமை, வெறுப்பு உணர்வை தூண்டக் கூடியவைகளா என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.
18 சதவிகித இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதா?
ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள்மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை என்று இடை இடையே பேசிக் கொண்டே, ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டை சுட்டிக்காட்டி, அதன்மீது எதிர் விமர்சனம் செய்தது எந்த அடிப்படையில்?
விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களும் இணைந்து இருவரும் கைகோர்த்து பண்பாட்டுக் களத்தில் வலம் வந்தபோது அக மகிழ்ந்தோம்.
இன்று அந்த நிலை, சீர்குலைவு அடைந்தது நியாயம்தானா?
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களுக் கிடையே ஜாதி மறுப்புத் திருமணம் நடைபெறுவது சமுதாயக் குற்றமா?
இன்னும் சொல்லப் போனால் தந்தை பெரியார் அவர்களின் பெயரை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருக்கும் மருத்துவர் ச. இராமதாசு அவர்களுக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?
அங்கொன்றும், இங்கொன்றுமாக காதல் திருமணத்தில் சில பிழைகள் நடந்திருந்தால்கூட அதனைச் சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அதனை ஒட்டு மொத்தமாக ஒரு சமுதாயத்திற்கு எதிரான பிரச்சாரமாகப் பெரிதுபடுத்தி, ஏதோ ஒரு தத்துவார்த்தம் போல திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்யலாமா?
இளைஞர்களைப் பெரும் திரளாகக் கூட்டி தாழ்த்தப்பட்டவர்கள்மீது வெறுப்புத் தீயை மூட்டும் பணி பொறுப்பானதுதானா?
தலைவர்கள் என்றால் யார்?
தலைவர்கள் என்றால் நெருக்கடியான ஒரு சூழலிலும் கூட பொறுமை காட்டி மக்களை ஆற்றுப்படுத்தி வழிகாட்ட வேண்டும். அதற்கு மாறாக எரியும் நெருப்பில், பெட்ரோலை ஊற்றும் வகையில் நடந்து கொள்ளலாமா?
பிரச்சினைக்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுவது அவர்கள் யாராக இருந்தாலும் நியாயம்தானா?
அவர்களின் வீடுகளும், கடைகளும் கொளுத் தப்படுவதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
அருள்கூர்ந்து சமுதாயத்துக்கு வழிகாட்டும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.
அரசு என்ன செய்ய வேண்டும்?
தந்தை பெரியார் தமிழர்களை ஒன்று படுத்தினார் - சிலர் ஒன்றுபடுத்தப்பட்ட தமிழர் களை - பார்ப்பனீயத்தின் தொங்கு சதையாக மாறி மீண்டும் ஜாதி பிளவுக்குள் தள்ளுவது மன்னிக்கப் படக் கூடியதா?  ஜாதிக் கலவரம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்போது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது - அரசியல் ஆதாயம் என்ற தூண்டிலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படக் கூடாது.
இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்; கடைசியாக ஒரு வேண்டுகோள்: தமிழ்நாட்டுத் தலைவர்கள், அமைப்புகள் கட்சிகளை மறந்து, ஜாதித் தீ எங்கு மூட்டப்பட்டாலும் அதனைக் கண்டிக்க, தடுத்து நிறுத்திட, நான் முந்தி, நீ முந்தி என்று முன்வர வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். யாரோ ஒரு பக்கத்துக்கு வக்காலத்து வாங்குவதாகக் யாரும் கருதக் கூடாது.
நல்லிணக்கத்தை உருவாக்கத் தயார்!
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு! ஜாதி ஒழிந்த சமத்துவ - ஒப்புரவுச் சமுதாயம் மலர வேண்டும் என்பதற் காகவே பாடுபடக் கூடிய இயக்கம் திராவிடர் கழகம்.
தேவைப்பட்டால் இரு தரப்பினரையும் அழைத்து நல்லிணக்கத்தை உருவாக்கிட திராவிடர் கழகம் என்றுமே தயாராக இருக்கிறது.
முன்பு தென் மாவட்டங்களில் ஜாதிக்கலவரம் மூண்டபோதுகூட இதே கருத்தைத்தான் முன் வைத்தோம் என்பதையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
ஒழியட்டும் ஜாதித் தீ!
ஓங்கட்டும் தமிழர் ஒற்றுமை உணர்வு!
இனமானம் வளரட்டும் - ஜாதி அபிமானம் மடியட்டும்! வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
28.4.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...