Sunday, July 5, 2015

அறிவோம் சட்டம் (1) : தகவல் அறியும் உரிமைச் சட்டம்


விடுதலை வாசகர்களே! திராவிடர் இயக்கமும், விடுதலையும், சமுதாய விழிப்புணர்வுக்கும், மறு மலர்ச்சிக்கும், ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், இயற்றப் பட்ட சட்டங்கள் பெரும்பாலும், திராவிட இயக்கத்தின் அயராத பணியின் காரணமாகவே ஏற்படுத்தப் பட்டவை என்பதை திராவிட இயக்க வரலாற்றை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.

அத்தகைய சட்டங்களையும், சமூகத்திற்குத் தேவையான சட்டங்களையும் வாசகர்கள் எளிய முறையில் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அறிவுரையை தமிழர் தலைவர் அவர்கள் வழங்கியதன் தொடர்பாக அறிவோம் சட்டம்'' என்ற தொடர் துவக்கப்படுகிறது.

கழகத் தோழர்கள் உள்ளிட்ட  அனைத்து விடுதலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொடர் அமைய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள், சமுதாய சீர்திருத்தச் சட்டங்கள் போன்றவைகளை தொகுத்து வழங்க முனைந்துள்ளோம். வாசகர்கள் படித்துப் பயன் பெறுவர்கள்.

1. தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இந்தச் சட்டம் 15.06.2005 இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா மக்களாட்சிக் குடியரசு நாடாக இருப்பதாலும் ஆட்சி அதிகாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழலை கட்டுப்படுத்தி அரசும், அரசு எந்திரங்களும் குடிமக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் என்பதாலும், நடைமுறையில் உள்ள சில விவரங்கள் மற்ற பொது நலன்கள் திறமையான ஆட்சி,

போதுமான நிதி ஆதாரங்கள் மற்றும் உணர்வு பூர்வ தகவல்களின் ரகசியக் காப்பு ஆகியவைகளோடு முரண்படக் கூடியது என்பதாலும், முரண்பட்ட நலன் களை கட்டுப்படுத்துவதோடு, மக்களாட்சிக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனும் தகவல் அறியும் உரிமையைப் பெறுகிறார். அதனால், ஒவ்வொரு பொது அதிகாரியும் தகவல் அளிக்கவேண்டும். தகவல் பெற விரும்பும் ஒவ்வொருவரும் எழுத்துமூலமாக அல்லது மின்னணு மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம்.

அந்தந்த வட்டார மொழியிலோ, ஆங்கிலத்திலோ இந்தியிலோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.10/- மற்றும் பக்கத்திற்கு 2 ரூபாயும் ஆய்வுக்கட்டணம் செலுத்தப்பட வேண்டும். 

என்ன காரணத்திற்காக தகவல் தேவைப்படுகிறது என்பதை தெரியப்படுத்த வேண்டிய தில்லை. எழுத்துமூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் மத்திய அல்லது மாநில பொது தகவல் அலுவலரிடம் வாய்மொழியாக விண்ணப்பிக்கலாம். அவர் அதை எழுத்து வடிவில் உருவாக்க உதவி செய்வார்.

தகவல் கோரி விண்ணப்பம் அளித்த நாளிலிருந்து 30 நாள்களுக்குள் பொது தகவல் அலுவலர் தகவல் தர வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, இராணுவ ரகசியம் அரசின் அறிவியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த வெளிநாட்டு உறவு, ஆகியவைகளைப் பாதிக்கிற அல்லது குற்றத்தை  தூண்டுகிற விபரத்தை பொது தகவல் அலு வலர் தெரிவிக்க கடமைப்பட்டவரல்ல, நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட அல்லது நீதிமன்ற அவமதிப்புக் குள்ளாகின்ற விவரங்களை தெரிவிக்கவும் அவர் கடமைப்பட்டவரல்ல.

நாடாளுமன்ற சட்டமன்ற உரிமைகளை பாதிக்கின்ற விவரங்களையும் தர வேண்டியதில்லை. பொது நலன் பெரிதும் உள்ளது என்ற காரணம் இருந்தாலொழிய மற்ற சூழ்நிலைகளில் வியாபார நம்பிக்கை, தொழில் ரகசியம் அல்லது அறிவுசார் சொத்து பற்றிய தகவலை அளிக்கவேண்டியதில்லை.

வெளி நாட்டிலிருந்து நம்பிக்கையில் கிடைக்கப் பெற்ற தகவல் மற்றவருடைய உடலுக்கான பாதுகாப்பை பாதிக்கக்கூடிய தகவல், புலன் விசாரணையை பாதிக்கின்ற தகவல், அமைச்சரவை ஆவணங்கள் மற்றும் பொது நடவடிக்கை உரிமை ஆகியவற்றிற்கு தொடர்பு இல்லாத தகவல்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை.

அதோடு தகவல்களைத் தான் கேட்டுப் பெறமுடியுமே தவிர ''விளக்கங்களை'' கேட்டு பெற முடியாது. தகவல் கோரி விண்ணப்பம் அனுப்பி 30 நாள்களுக்குள் பதில் வரவில்லையென் றாலோ, அல்லது தகவல் தர மறுத்து உத்தரவு பிறப்பிக் கப்பட்டாலோ அந்த நாளிலிருந்து 30 நாள்களுக்குள் பொது தகவல் அலுவலருக்கு மூத்த அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அந்த முறையீட்டிலும் தகவல் கிடைக்காவிட்டால் 90 நாள்களுக்குள் மத்திய தகவல் ஆணையம் அல்லது மாநில தலைமை ஆணையத்திற்கு இரண்டாவது மேல்முறையீடு செய்யலாம். இந்த ஆணையங்களின் முடிவே இறுதியானது. பொது தகவல் அலுவலர். போதிய காரணமன்றி தகவல் தர மறுத்தால் அல்லது தவறான தகவல் தந்தால் தகவல் ஆணையம் அந்த அலுவலருக்கு ஒரு நாளுக்கு ரூ.250/- வீதம் ரூ.25000/-க்கு மிகாமல் அபராதம் விதிக்கலாம்.

இந்தச் சட்டத்தின் பிரிவுகள் கீழ்க்கண்ட அமைப்பு களுக்குப் பொருந்தாது.

1. Intelligence Bureau
2. Research and Analysis Wing of the Cabinet Secretariat.
3. Directorate of Revenue Intelligence Bureau.
4. Central Economic Intelligence Bureau.
5. Directorate of Enforcement.
6. Narcotics Control Bureau.
7. Aviation Research Centre of the Cabinet Secretariat.
8. Special Frontier Force of the Cabinet Secretariat.
9. Border Security Force.
10. Central Reserve Police Force.
11. Indo-Tibetan Border Police.
12. Central Industrial Security Force
13. National Security Guards
14. Assam Rifles
15. Sashtra Seema Bal.
16. Directorate General of Income-tax (Investigation)
17. National Technical Research Organisation
18. Financial Intelligence Unit, India.
19. Special Protection Group.
20. Defence Research and Development Organisation
21. Border Road Development Board.
22. National Security Council Secretariat.
23. Central Bureau of Investigation
24. National Investigation Agency.
25. National Intelligence Grid.

- தொடரும்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...