Sunday, July 5, 2015

தமிழ்நாட்டிலும் விநாயகர் ஊர்வலங்களுக்குத் தடை வருமா?

- மின்சாரம்
மும்பை நகரில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி போன்ற விழாக்களில் பொதுமக்கள் நடக்கும் நடைமேடை மற்றும் சாலைகளின் ஓரங்களில் பந்தல்கள் அமைக்கவும் ஒலிபெருக்கி பயன்படுத்தவும் மும்பை உயர்நீதிமன்றம் தடைவிதித் துள்ளது.     மும்பையில் கடந்த 70 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரிவிழா நடந்து வருகிறது.
தனிப்பட்ட நபர்கள் மற்றும் நகரின் சில அமைப்புகள் நடத்தி வந்த கணபதிவிழா கடந்த 30 ஆண்டு களாக பிரபலப்படுத்தப்பட்டு 10 நபர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை ஆரம்பித்து அந்த அமைப்பின் பெயரில் கணபதி விழா கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. 1980களில் 17அமைப்புகள் மாத்திரமே கணபதிவிழா கொண்டாடி வந்தன.
தற்போது மும்பை மாநகராட்சி பதிவு பெற்ற கணபதி மண்டல்கள் மாத்திரமே 600 உள்ளன. இதில் பதிவு செய்யாமல் இருப்பது தானே மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் எனச் சேர்த்தால் மொத்தம் 5000 மண்டல்கள் ஆகிவிடும்.
இந்த கணபதி மண்டல்கள் அனைத்தும் 10 நாள்களாக சாலை ஓரத்தில் பந்தல்கள் அமைத்து அதில் பெரிய விநாயகர் சிலை வைத்து இரவு பகல்பாராமல் ஒலிபெருக்கி வைத்திருப்பார்கள். இதனால் பொதுமக் களுக்குப் பெரும் பாதிப்பு ஒலி மாசும்கூட!   கடந்த 2011-ஆம் ஆண்டே இது குறித்து மும்பையைச் சேர்ந்த வினோத் தாவ்டே என்ற வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அப்போதே மும்பை உயர்நீதிமன்றம் பொதுஇடங்களில் பந்தல்கள் அமைப் பதைத் தடை செய்தது, இந்த நிலையில் மும்பை மாநகராட்சியை ஆளும் சிவ சேனா நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடையாணை வாங்கியது. இந்த நிலையில் நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொது இடங்களில் பந்தல்கள் அமைப்பதை தடைசெய்து தனது பழைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்தது.   மும்பை நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து சிவசேனா தன்னுடைய பத்திரிகை யான சாம்னாவில் எழுதியுள்ளதாவது: நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.
காரணம் இந்துமத வழிபாட்டை தடைசெய்வது பாகிஸ்தானில் தான் நடைமுறையில் இருக்கும், ஆனால் இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது சரியில்லை.  நீதிபதிகளை அரசாங்கம் தான் நியமிக்கிறது, மக்கள் அல்ல, மக்கள் அரசாங்கத்தை உருவாக் குகிறார்கள் ஆகவே நீதிமன்றங்களை விட அரசாங்கமே அதிக அதிகாரம் கொண்ட தாகும்.
மத ரீதியான விவகாரங்களில் நீதிமன்றம் தன்னுடைய சட்டப்புத்தகத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது தேவையில்லை. கணபதி விழாபோன்றவை காலங்காலமாக மக்களால் நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் விழாவாகும், சில நாள்கள் நடக்கும் இந்த விழா மக்களை உற்சாகப்படுத்தும் ஒரு விழாவாகும்,
ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் வேதனைகொண்டுள்ள மக்களுக்கு இது போன்ற விழாக்கள் மூலம் தற்காலிக மகிழ்ச்சியை வழங்கிவருகிறது. மக்கள் அனைவரும் இந்த விழாக்களில் உற்சாக மாக பங்கெடுத்துகொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலை யிடுவது சரியில்லை.
சாலை ஓர பந்தல்கள் மற்றும் ஓசை மாசு என்று கேட்கும் நீதிமன்றத்திற்கு வெள்ளிக் கிழமையானால் சாலையை மறித்துக் கொண்டு தொழுகை நடத்தும் முஸ்லீம் களுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை? அதே நேரத்தில் தினசரி காலை, மாலை பாங்கு ஓதுவது ஓசைமாசாகத் தெரியவில்லையா? கணபதிவிழாக்களில் இசைக்கும் இசையால் ஓசைமாசு ஏற்படுகிறது என்றால் மசூதிகளில் ஒலிக்கும் பாங்குச்சத்தமும் ஓசை மாசுதான் அதை நீதிமன்றம் தடைசெய்யுமா? என்று எழுதியுள்ளது.
எதற்கெடுத்தாலும் ஏட்டிக்குப் போட்டி யான அணுகுமுறைதான் இந்த இந்துத்துவா கும்பலுக்கு; மசூதிகளில் பாங்கு சத்தம் மதக் கலவரத்தைத் தூண்ட அல்ல; தேவைப் பட்டால் ஒலியின் அளவைக் குறைக்கச் செய்யலாம்.
விநாயகர் ஊர்வலத்தை ஓர் இந்துமதப் பிரச்சார யுக்தியாக மாற்றியவர் பாலகங் காதர திலகர்தான். பொது மக்களுக்குப் பொழுது போக்காகவும், கல்வி புகட்டுவ தாகவும் பிள்ளையார் ஊர்வலம் பயன் படும் என்று கேசரி இதழில் (8.9.1896) எழுதினார் திலகர். இதுபற்றி பிள்ளையார் அரசியல் மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள் எனும் நூலில் பேராசிரியர் ஆ. சிவ சுப்பிர மணியம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
1893இல் திலகரால் உருவாக்கப்பட்ட கணேசர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் 1899ஆம் ஆண்டில் மித்ர மேளா (நண்பர்கள் சங்கமம்) என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதனை உருவாக்கியவர்களுள் ஒருவரான சவார்க்கார், பின்னர் இந்து மகாசபை என்ற மத அடிப்படைவாத அமைப்பை ஏற்படுத் தினார்.
அதன் தொடர்ச்சிதான் ஆர்.எஸ். எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், என்ற பெயரில் உள்ள சங்பரிவாரங்கள் (நூல் பக்கம் 55) என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையார் ஊர்வலம் என்பது இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல - சம்பிரதாயமும் அல்ல., அந்தப் பெயரால் அடிப்படைவாதத்தை ஏற்படுத்த விரும்பி யவர்களின் விஷம விளையாட்டுதான் இது.
மும்பையில் நடத்தப்பட்ட அந்த ஊர்வலத்தில் பாடப்பட்ட பாடல்கள் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இப்பாடல்களில் பக்தி மட்டுமின்றி இந்துக்களையும், இசுலாமியர்களையும் பிளவுபடுத்தும் மதவாதக் கருத்துக்களும் இடம் பெற்றன. இதற்குச் சான்றாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.
இம்மதம் நம் மதம் இந்து மதம்
ஏன் இன்று மறுதலிக்கிறாய்? கணங்களின் நாயகன் கணபதியையும் சிவனையும் வாயு புத்திரனையும் எங்ஙனம் மறந்தாய்?
வெற்றுச் சின்னங்களை வணங்கி
எப்பேறு பெற்றாய்?
என்ன வரம் அளித்தார் அல்லா உனக்கு?
இன்று நீ முகமதியன் ஆகிவிட்டாய்
அந்நிய மதம் தனை அந்நியப்படுத்து
உன் மதத்தையும் மறந்திடில்
நின் வீழ்ச்சி நிச்சயம்
சின்னங்களை மதியாதே!
நம் அன்னை கோமாதாவை மறந்திடாதே!
அழைத்திடுவீர் அனைவரையும்!
அருமையாகக் காத்திடுவீர் நம் மதத்தை!
தூக்கி எறிவீர் பஞ்சாசையும் நூல்களையும்
(பஞ்சாஸ் - அய்ந்து விரல்களுடன் கூடிய உலோகக் கை)
பிள்ளையார் ஊர்வலத்தின் நோக்கும் போக்கும் எதன் அடிப்படையில் என்பதை இதன் மூலம் எளிதாகவே புரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாகத் தான் தமிழ்நாட்டில் இந்தப் பிள்ளையார் ஊர்வலக் கூத்தெல்லாம்!
ஒவ்வொரு ஆண்டும் எங்குப் பார்த்தாலும் அதனையொட்டி மதச் சண்டைகள்தான். 1998ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் முத்துப் பேட்டைப் பகுதிகளில் காவிகள் கல வரத்தை விதைத்தனர். 2009இல் முத்துப் பேட்டையில் கலவரம் நடத்தப்பட்டது - அதன்மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குக் கூடத் தொடுக்கப்பட்டதுண்டு.
சென்னையில் முசுலிம்கள் அதிகம் வாழும் அய்ஸ்அவுஸ் பகுதியில் ஆண்டு தோறும் பிள்ளையார் ஊர்வலத்தின்போது கலவரம்தான். 2010இல் மதுக்கூர், தூத்துக்குடி, நாகர்கோயில், கிள்ளியூர் பகுதிகளில் பெரும் அளவு கலவரங்கள் 2011இல் கோவையிலும், திண்டுக்கல்லிலும் வண்ணப் பொடி என்ற பெயரில் அமிலங்கள் வீசப்பட்டனவே!
தமிழ்நாடு 300, கர்நாடகம் 420, ஆந்திரா 300, கேரளா 100, கோவா - 70 இவை யெல்லாம் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை.
இந்தச் சூழ்நிலையில் டிராபிக் ராமசாமி பிள்ளயார் ஊர்வலத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள்கூடத் தொடுத்ததுண்டு. சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தனர். ஆனாலும் அறிவு நாணய மற்ற கூட்டம் வாக்குறுதிப்படி நடந்து கொள்ளுமா, என்ன?
இதே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சந்துரு அவர்கள் ஒரு தீர்ப்பை வழங்கினார். விநாயக சதுர்த்தியை ஒட்டி சாயல் குடியில் ஒன்பது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு, ஊர்வலமாகக் கடலில் கரைப்ப தற்கு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, காவல்துறை அனுமதி வழங்க மறுத்து விட்டது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீதுதான் நீதிபதி சந்துரு அந்தத் தீர்ப்பை வழங்கினார்.
பொது இடத்தில் மத நிகழ்ச்சியை நடத்திட சட்டத்தில் இடமில்லை; அதற் கான உரிமையை நிலை நாட்ட ஒருவ ருக்கும் உரிமையும் கிடையாது. சூழ் நிலையைக் கருத்தில் கொண்ட ஓர் அதிகாரி அனுமதியை மறுக்கும்போது அதில் நீதிமன்றம் தலையிடவும் முடியாது;
அவ்வாறு தலையிடுவது சூழ்நிலையை மோசமாக்கும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு அவர்கள் (2007 அக்டோபர்). நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருந்தும் விநாயகர் உருவ பிரதிஷ்டைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஊர்வலங்களும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
அதனையொட்டிக் கலவரங்களும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. விநாயகர் பிரதிஷ்டை அது தொடங்கப்பட்ட மும்பை யிலேயே அதற்கான தடையை மும்பை நீதிமன்றம் கறாராகத் தெரிவித்து விட்டது.
தமிழ்நாடு அரசும் இதனைக் கவனத்தில் கொள்ளுமா?
கோயில்களில் ஒலிபெருக்கி அலறுவதற் குக்கூட எர்ணாகுளம் நீதிமன்றம் 1976இல் வழங்கியதையும் இந்த நேரத்தில் நினை வூட்டுகிறோம்.
மத ஊர்வலமா? மதம் பிடித்த யானை களின் ஊர்வலமா? சிந்திக்க வேண்டியது பொது மக்களும்தான்!


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...