Wednesday, March 30, 2016

சட்டத் தடை, நீதிமன்றத் தடையில்லாத நிலையில் தீட்சை பெற்ற 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமிக்க முதலமைச்சர் தயங்குவது ஏன்?

குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்ட நாளில் (ஏப் 18) நடத்தப்படும்
மறியலில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

பிரதமர் மோடிக்கு நெருக்கடியைகொடுக்கிறார்-ஆர்.எஸ்.எஸ்தலைவர்?  வெளியுறவுக் கொள்கையில் கடும் சிக்கல் வரும் எச்சரிக்கை!
தந்தை பெரியார் அவர்களால் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற மனித உரிமைக் கருத்தினை நடைமுறைப்படுத்த, சட்டத் தடையோ, நீதிமன்றத் தடையோ இல்லாத நிலையில், அர்ச்சகர் பயிற்சி மற்றும் தீட்சை பெற்ற 206 பேரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல் அமைச்சர் தயங்குவது ஏன் என்ற வினாவை எழுப்பி, குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 18 அன்று திராவிடர் கழகம் முன்னின்று நடத்த உள்ள மறியல் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திருச்சி - சிறுகனூர் பெரியார் உலகத்தில் கடந்த 19,20 (மார்ச்) தேதிகளில் திராவிடர் கழக மாநில மாநாடு, ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு, சமூக நீதி மாநாடு களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், வரலாற் றினை வருங்காலத்தில் மாற்றப் போகும் லட்சியத் தீர்மானங்களாகும்.
அரசியல் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பல சான்றோர்கள் அதனை வெகுவாகப் பாராட்டி நம்மிடம் பேசினார்கள் - மகிழ்ந்தார்கள்!
சட்டமன்றத்தில் முதல்வர் கொடுத்த வாக்குறுதியை
முதல் அமைச்சர் நிறைவேற்றட்டும்!
நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் தமது இறுதிப் போராட்டமாக பிரகடனப்படுத்திய ஜாதி - தீண்டாமை ஒழிப்பினை மய்யமாக்கிடும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகி விட வேண்டும் என்பதற்கு சட்டபூர்வ இசைவும் - மறுப்பேதுமின்றி. கிடைத்து விட்ட நிலையில், ஏனோ, தமிழ்நாடு (அதிமுக) அரசு அதன் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியைக்கூட - சட்டத் தடைகள் இல்லை யானால் இந்த அரசு நியமனங்கள் செய்யும் என்று முன்பு தந்த உறுதிமொழியைக்கூட - செயல்படுத்தாமல் உள்ளது, வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.
முறைப்படி ஆகமக் கல்லூரிகளில் தனித்தனியே சிவன் கோயில், வைஷ்ணவக் கோயில்களில் பூசை செய்ய “தீட்சை” பெற்ற 206 பேர் பார்ப்பனர் முதல் ஆதி திராவிடர் வரை பலரும் பல ஆண்டுகளாக நியமனமின்றி காத்துக் கிடக்கும் நிலை உள்ளது!
தமிழ்நாட்டில் உள்ள 36,000 கோயில்களில் பல முக்கிய பிரபல கோயில்களில் அர்ச்சகர்கள் ஆகமப் பயிற்சியே முறைப்படி பெறாதவர்கள் என்பது ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் கமிட்டியே தெரிவித்துள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு ஆணையிட வேண்டிய முக்கிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதல் அமைச்சருக்கு உண்டு.
முதற்கட்ட பட்டியலில் 7000 பேர்
இதை வலியுறுத்தும் முதல் கட்ட அறப்போர் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி குலக்கல்வித் திட்டம் ஒழிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நாளில் - தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
மாநாட்டில் தீர்மானம் முன்மொழியப்பட்ட நிலையில், (முன்கூட்டியே போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்த காரணத்தால்) அறப் போரில் ஈடுபடும் அறப்போர் வீரர்களின் பட்டியல்கள் மேடைக்கு வந்தன!
சுமார் 7000 தோழர்கள் பல மாவட்டங்களில் கலந்து கொள்ள பெயர்களோடு இசைந்து அறிவித்தனர்.
அதன் பின்னரும் சுமார் 1000 பேருக்கு மேல் நம்மிடம் நேரில் பல ஊர்களில் தந்தனர்.
ஜாதியின் உயிர் நிலை, சட்ட பூர்வமாகவும் நடைமுறைத் தன்மையிலும் கோயில் கருவறைக்குள் ‘கர்ப்பகிரகத்தில்’ உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம். நாயர் தாம் 1916ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்த்திய உரையில் இக்கருத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய அர்ச்சகர் முறை ஒழிய வேண்டும்
என்றவர் பாபா சாகெப் அம்பேத்கர்
தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதனை உறுதிப்படுத்தும் பல்வேறு கொள்கை அணுகுமுறைகளில், பாரம்பரிய பார்ப்பன அர்ச்சகர் முறை ஒழிய வேண்டும் என்பதை 1929ஆம் ஆண்டே ஒரு பார்சி கோயில் பாரம்பரிய அர்ச்சகர் முறையை எதிர்த்து நடந்த போராட்டத்தினை ஆதரித்து ஒரு கட்டுரையே தீட்டினார் அம்பேத்கர்.
‘’Supporting the move in his article entitled “wanted an Anti-Priest-Craft Association”. Ambedkar wrote in the Bombay Chronicle that the Hindu priestly classes stood   no way superior ethically, educationally or otherwise to the average member of Parsee priesthood. “The counts in the indictment,” he proceeded, against the heriditary Hindu priests are numerous and appalling. He is a clog on the wheel of civilisation. Man is born, becomes the father of the family and then in time dies. All along the priest shadows him like an evil genius,”
Ambedkar described the officiating Brahmin as a miserable specimen of humanity and further said, “He practises the sham of being a middleman between the unseen powers and  helpless man and makes a living by it.” 
-Dr. B.R. Ambedkar: Life and Mission
by Dhananjay Keer (page 134)




தமிழாக்கம் வருமாறு:
‘பாம்பே கிரானிக்கிள்’ ஏட்டில் 1929ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் பார்சி ஒருவர் ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் முறை இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி அதற்காகவே சங்கம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.
அதை ஆதரித்து ‘அர்ச்சகர் எதிர்ப்பு சங்கத்தைக் கட்டமைக்க விரும்பினேன்’ எனும் தலைப்பில் பாம்பே கிரானிக்கிள் ஏட்டில் டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் எழுதியுள்ளார்.  இந்துக்களில் அர்ச்சகர்கள் எவரும் அறத்தின்படியும், கல்வியிலும், மற்றவகையில் சராசரியாக உள்ள பார்சி அர்ச்சகர்களைவிட மேலானவர்களாக இருக்கவில்லை.
‘குற்றச்சாற்றுகளின் எண்ணிக்கை’ என்று கூறுகையில், “இந்து மத அர்ச்சகர்களின்  பழைமைவாதங்கள் எண்ணிலடங்கா அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்து அர்ச்சகன் என்பவன் நாகரிக சக்கரத்துக்கு தடையாக இருந்திருக்கிறான். மனிதன் பிறக்கிறான், குடும்பம், குழந்தைகள் என்று வாழ்ந்து காலத்தால் மறைகிறான். அனைத்து நிலைகளிலும் அர்ச்சகன் என்பவன் தீமை தரக்கூடிய நிழலாக இருந்திருக்கிறான்”
“பார்ப்பனர்களைக் கொண்டு எதையும் செய்வது என்பது மனிதத்தன்மையில்லாத, தவறான முன்மாதிரியாகவே இருந்துவந்துள்ளது” என்று கூறும் அம்பேத்கர் மேலும் கூறுகையில்,காணமுடியா சக்தி என்று கூறிக்கொண்டு அதைக்கொண்டு ஆதரவற்ற மனிதனின் வாழ்வை மேம்படுத்துவதாகக் கூறி இடைத்தரகனாக இருக்கின்ற வெட்ககரமான செயலைச் செய்து பிழைத்து வருகிறான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
(டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்வும், பணியும் என்று தனஞ்செய கீர் எழுதியுள்ள நூலின் பக்கம் 134)
அனைத்துத் தரப்பினரும்
மறியலில் கலந்து கொள்க!
அம்பேத்கர் பற்றாளர்கள் உட்பட இந்த அறப்போரில் கலந்து கொள்ள முன் வர வேண்டும்!
ஏற்கெனவே ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா. அதியமான் அவர்களும் தோழர்களுடன் இந்த அறப்போரில் கலந்து கொள்ளுவோம் என்று அறிவித்தார்கள்.
பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் - தலைவர் பெருங் கவிக்கோ வா.மு. சேதுராமன் தனது தோழர்களுடன் கலந்து கொள்ள அறிக்கை விடுத்துள்ளார்.
இது ஒரு  கட்சியின் போராட்டமோ, இயக்கத்தின் கிளர்ச்சியோ அல்ல. மாறாக, ஒட்டு மொத்த சமுதாய அமைப்பினைப் புரட்டிப் போடும், ஜாதி தீண்டாமை ஒழிப்பையே முன்னிறுத்தும் மாபெரும் போராட்டமாகும்!
வைதீக சனாதனத்தவர் தவிர, மற்ற அத்தனைப் பக்தர்களும்கூட இதனை வரவேற்கவே செய்கிறார்கள்.
எனவே, ஏப்ரல் 18ஆம் தேதி போராட்டத்தை இனஉணர்வாளர்கள், பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் உட்பட பலரும் பல்லாயிரக்கணக்கில்  கலந்து கொண்டு அறப்போரில் ஈடுபட முன்வர வேண்டும். போராட்ட இடங்கள், முறைகள்பற்றி ஏப்ரல் முதல் நாள் அன்று திராவிடர் கழக தலைமைச் செயற்குழு முடிவு செய்து வழிகாட்டும்.
அனைவரும் வாரீர்! வாரீர்!!


கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை
29.3.2016  



.
 1

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Tuesday, March 29, 2016

ஜாதி தீண்டாமை ஒழிப்பு திராவிடர் கழகத்திற்கு மட்டும் தானா?


கரூர் அருகே உள்ள ராமா கவுண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் ஆரோக்கிய சாமி என்பவரை (வயது 28). கரூர் - ஈரோடு சாலையில், ஆத்தூர் பிரிவு என்னு மிடத்தில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த நான்கு பேர் அவரை சரமாரியாக வெட்டினர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை, பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேஷ் ஆரோக்கியசாமி இறந்தார்.

இந்த கொலை நடந்த சில மணி நேரங்களில் ஒருவர், காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சுரேஷ் ஆரோக்கியசாமியை நான் தான் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, கொலை செய்யப்பட்ட சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி சுரேஷ் ஆரோக்கியசாமி எனது தங்கையை திருமணம் செய்து கொண்டார். அவர் மீதுள்ள ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.

சுரேஷ் ஆரோக்கியசாமிக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு அந்த பெண்ணை சுரேஷ் ஆரோக்கிய சாமியிடம் இருந்து வலுக் கட்டாயமாகப் பிரித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதனால் சுரேஷ் ஆரோக்கியசாமி மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அந்த பெண்ணிடம், சுரேஷ் ஆரோக்கிய சாமி தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி கூறினார். ஆனால் அந்த பெண் சுரேஷ் ஆரோக்கியசாமியிடம் செல்ல மறுத்து தனது பெற்றோருடன் வாழ விரும்புவதாக கூறிவிட்டார். (இப்படிதான் தருமபுரி இளவரசன் விடயத்திலும் நடந்தது)

ஆனாலும் சுரேஷ் ஆரோக்கியசாமி காதல் மனைவியை வீட்டிற்கு அழைத்து செல்வதில் குறியாக இருந்தார். இந்த நிலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் ஆரோக்கிய சாமியை கொலை செய்த கொலையாளிகளின் உருவம் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரர் சிவநேசன் உள்பட 4 பேர் மீது கரூர் நகரக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் சங்கர், அவரது காதல் மனைவி கவுசல்யா கண் எதிரிலேயே கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் கரூரில் சுரேஷ் ஆரோக்கியசாமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர் கொலை என்ற பட்டியலில் இது 82 ஆவது என்று சொல்ல வேண்டும்.

இதுவரை இந்தக் கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது தமிழகக் காவல்துறை எந்த இலட்சணத்தில் செயல்படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

ஜாதி வெறிக் கண்ணோட்டத்தில் நடக்கும் இந்தக் படுகொலைக்கு ‘கவுரவக் கொலை’ என்று பெயர் சூட்டுவது வெட்கக் கேடாகும்.

இதுதான் சந்தர்ப்பம் என்று திராவிட இயக்கம் தோற்றுவிட்டது. பெரியார் கொள்கை தோற்றுவிட்டது என்பது போல பிரச்சாரம் செய்வது ஒரு வாடிக்கையாகி விட்டது.

திராவிடர் கழகம் தன் பணியை முழு வீச்சில் செயல்படுத்திக் கொண்டுதான் உள்ளது. ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளையும், பிரச்சாரத்தையும் முழு வேகத்தில் செய்து கொண்டுதானிருக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் பகுதிகள் கொளுத்தப்பட்டபோதுகூட, அந்த இடத்திற்கு உடனடியாக திராவிடர் கழகத் தலைவர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததோடு அல்லாமல் உடனடியாக தருமபுரியில் ஜாதி ஒழிப்பில் நம்பிக்கையுள்ள அனைவரையும் கூட்டி ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜாதி ஒழிப்புப் பணியில் மற்றவர்கள் எந்தளவுக்கு ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமானதாகும். வீணாக அபவாதம் பேச வேண்டாம். திராவிடர் கழகத்தின் சமூக புரட்சிப் பணிகளுக்கு ஒத்துழைப்புக்கொடுக்க முன் வரட்டும்!

ஜாதி கட்சிகளை ஒன்று சேர்த்து தலித் அல்லாதார் அமைப்பு உருவாக்கப்பட்ட போது இந்த ஊடகத்தார்களும் ‘மேதாவிகளும்‘ அதனை ஏன் கண்டிக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானதாகும். அப்பொழுதே அதனைக் கடுமையாகக் கண்டித்ததும் விமர்சனம் செய்ததும் திராவிடர் கழகமே

- தலையங்கம் 28-03-2016

பீம்சிங் இது என்ன குழப்பம்?.


ஒரு சினிமாவில் இப்படி ஒரு வசனத்தை எழுதினார்  கலைஞர், அது இன்றைய அரசியல் சூழலில் மிகவும் பொருத்தமாக உடையதாக இருக்கிறது.

நால்வர் அணி என்று பொதுவாகப் பேசப்பட்டபோது அது தவறு, எங்கள் அணியின் பெயர் மக்கள் நலக்கூட்டணி நாங்கள் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி வைத்துள்ளோம். பொதுத் திட்டத்தையும் வகுத்துக் கொண்டு இருக்கிறோம். இப்படி ஒரு தெளிவான, திட்டவட்டமான வரையறையோடு தேர்தலில் சந்திக்கக் கூடியவர்கள் எங்களைத் தவிர வேறு யார்? எந்தக் கூட்டணி? என்று சவால்விடுக்கும் வகையில் தோள் தட்டி, துடை தட்டி ஆர்ப்பரிப்போடு வலம் வந்தனர் அதன் முக்கிய தலைவர்கள். தமிழ்நாடு அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களை நடத்தி தங்களின் வீர தீர பிரதாபங்களை கொட்டி தீர்த்தனர். இதோ இரண்டாவது சுற்று, மூன்றாவது சுற்று - அடுத்த சுற்றுக்கும் தயாராகிவிட்டோம் - எங்கள் கூட்டங்களில் மக்கள் திரள்கிறார்கள். மக்கள் கடல் போல் திரள்கிறார்கள். திமுக, அதிமுகவிற்கு மாற்று அணி என்று மனதில் எங்களை தேர்வு செய்து விட்டார்கள்; மக்கள் மனங்களில் நாங்கள் நங்கூரம் பாய்ச்சி விட்டோம் என்று போர்ப்பாட்டு பாடினார்கள்.

ஏதோ இவர்களுக்கு ஒரு முகம் கிடைத்துவிட்டது என்று கூட விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

அப்படியாகப்பட்ட ஒரு கால கட்டத்திலே நடந் தது - நடந்தது - என்ன நடந்தது? நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் அய்ந்தாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதனைக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தான் ஓர் ஆண்டி என்று சொல்வார்கள் அல்லவா - அதனை அட்சரம் பிறழாமல் செய்து முடித்தவர்கள் என்ற பெருமைக்குரிய அணியாக அல்லவா ஆகிவிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருவார் வருவார் என்று காத்துக் கிடந்தனர்; ஆனால் அவர் யார் யாருடனோவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாளேடுகளில் வந்த வண்ணமாகவே இருந்தது.

காத்துக் காத்து பார்த்தார்கள் - கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக வின் அலுவலகத்தை நோக்கி படையெடுக்கவில்லையா? அதுதான் இப் பொழுதும் நடந்தது.

கடைசியில் ஒருவழியாக மக்கள் நலக்கூட்டணி யோடு விஜயகாந்தின் தேமுதிகவும் இணையும் என்று அறிவித்தனர். நாள்தோறும் நடைபயணம் சென்று கொண்டிருந்த கிசுகிசு மத்தாப்பு எரிந்து முடிந்ததற்காக மக்களுக்கும் ஒரு வகையில் நிம்மதிதான்.
சரி, மக்கள் நலக்கூட்டணி என்னவாயிற்று? விஜய காந்த் கூட்டணி என்று திரு நாமம் பெற்றது. இந்த முடிவை யார் எடுத்தார்கள்? அந்த

தலைவர்கள் கூடிக் கலந்து விவாதித்து எடுத்தார்களா? அதுதான் இல்லை. அந்த அணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தன்னிச்சையாக அறிவித்து விட்டார். ...

இன்றைய நிலவரம் என்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் விஜயகாந்து கூட்டணி என்றெல்லாம் அழைக்க கூடாது. மக்கள் நலக்கூட்டணி என்பது தான் சரி என்று சொல்லிவிட்டார்கள்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அதையே வழி மொழிந்து விட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் மட்டும் விஜயகாந்த் கூட்டணி எனச் சொல்லுவதில் கவுரவக் குறைச்சல் இல்லை என்று ஒளிவு மறைவு இல்லாமல் கூறிவிட்டார்.

ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் உணர்ச்சி வசப் பட்டு, தான் கூறிவிட்டதாக கூறி இருப்பதாக ஓர் ஏடு கூறுகிறது. விஜயகாந்த் கூட்டணி என்றால் தான் மக்களுக்குத் தெரியும் என்று தேமுதிகவின் முதுகெலும்பாக இருக்கும் திருமதி பிரேமலதா அவர்கள் மக்கள் நலக்கூட்டணி என்னும் முதுகெலும்பை முறித்து கூடையில் அள்ளிவிட்டார்.

இதுவரை தேசிய முன்னணி, அய்க்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என்பது போன்ற பெயர்களை கேள்விப்பட்டுள்ளோம். தனி நபர் ஒருவரை முன்னிறுத்தி கூட்டணி பெயர் அறிவித்ததாக கேள்வி பட்டதில்லை. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தான் இவர்களுக்குத் தலைவராகி விட்டார்.

பொது மக்களுக்கு சில சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. இந்த அணியில் உள்ள கட்சிகள், தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு இதற்குமுன் அறிமுகம் ஆகாதவர்களா, இந்த கட்சிகள், தலைவர்கள் ஆற்றியவைகளைவிட, பின்பற்றும் கொள்கைகளை தியாகங்களைவிட எந்த வகையில் விஜயகாந்த்தோ அவரின் தேமுதிகவோ மேம்பட்டது? இது வரை விஜயகாந்த் அவர்கள் தம் கொள்கை கோட்பாடுகள், இலட்சியங்கள் என்பவற்றை அறிவித்ததுண்டா? “நான் குழப்புவேன்” என்று சொன்னதை விட ஒன்றும் பெரிதாக தெரியவில்லையே!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சொந்த கட்சியின் கொடியை ஏழுமலையான் பாதார விந்தங்களில் வைத்து வணங்கி பெற்றுக்கொண்டு வந்தார் என்பது தான் மற்ற நான்கு கட்சிகளுக்கும் இல்லாத தனித்தன்மையான சிறப்போ சிறப்பு!

இன்னொரு கேள்வியும் இருக்கிறது, மக்கள் நலக் கூட்டணி வகுத்துக் கொண்ட பொதுத்திட்டம் குறித்து விஜயகாந்திடம் விவாதிக்கப்பட்டதா? அவர் அதனை ஏற்றுக்கொண்டாரா? ஏற்றுக்கொண்டார் எனில் அவர் தனியாக அறிக்கை கொடுத்திருக்கிறாரே அது எப்படி? அப்படி என்றால் ஏற்கெனவே இருந்த மக்கள் நலக் கூட்டணியின் பொதுத்திட்ட.ம் காலாவதியாகி விட்டதா?
இன்னொரு முக்கிய கேள்வி உண்டு. முதலமைச்சர் யார் என்று முன்னமேயே அறிவிக்க மாட்டோம். அது ஜனநாயகப் பண்புக்கு விரோதமானது என்று நான்கு தலைவர்களும் சொன்னார்களே! அந்த ஜனநாயகப்பண்பு இப்பொழுது எந்த காற்றில் பறந்தது? ஒரு மாத காலத்துக்குள்ளாகவே தங்களை தாங்களே அம்பலப்படுத்திக்கொண்டுவிட்டனரே! அவலம் - பரிதாபம் - கேலி அல்லவா ஏற்பட்டுவிட்டது. எதிர்கட்சித் தலைவராக இருந்தே - அவர் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமையை ஆற்றவில்லை. முதலமைச்சர் ஆனால் அவ்வளவு தான் என்பது பாமர மக்களிடையே ஒரு நமட்டுச் சிரிப்பு!

விஜயகாந்த் அணி ஒரு உதவியைச் செய்து கொடுத்துவிட்டது. மக்களை நல்லமுறையில் சிந் திக்கவும் வைத்துவிட்டது. இப்பொழுது தமிழக முத லமைச்சர் யார்? கலைஞரா, செல்வி ஜெயலலிதாவா? விஜயகாந்தா? டாக்டர் அன்புமணி ராமதாஸா? இந்த கேள்விக்கான விடையாக தேர்தல் அமையப்போகிறது - விஷயம் சுருக்கப்பட்டு சுருக்கமான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலெழுந்த வாரியாக பார்த்தாலும் சரி, ஆழமாக பார்த்தாலும் சரி - கலைஞர் அவர்கள் தான் ஆறாவது முறையாக தமிழக முதலமைச்சராக எல்லா வகையிலும் தகுதியானவர் - அவர் முதலமைச்சர் ஆனால் தான் நாட்டிற்கு நன்மை கிடைக்கும், வளர்ச்சி ஓங்கும் என்பது எளிதாக கண்டுபிடிக்க - கணிக்க இப்பொழுது எளிதான வழி கிடைத்துவிட்டது. சுலபமாக தேர்வு செய்ய வசதி ஏற்பட்டுவிட்டது.

தேவையற்றவைகளையெல்லாம் மூளையில் கொட்டி கசக்கி பிழிந்து கொண்டிருக்க வேண்டியதில்லை!
இந்த நால்வரில், யார் ?

வாக்காளர்களே சிந்தியுங்கள் நீங்கள் அளிக்கும் வாக்கு- அய்ந்து ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்வோர் யார்? என்பது பற்றியது அல்லவா! அன்பளிப்பு, இலவசங்கள் என்றாலும் ஒரு சில நாட்களோடு அவை கரைந்து விடும்; 
நிரந்தரமான நலன்களுக்கு தீர்க்கமான சிந்தனை தேவை! தேவை!
- நோக்காளன்

Monday, March 28, 2016

வைகோவுக்கு வைகோதான் பதில் சொல்ல வேண்டும்!


மறுமலர்ச்சி திமுகவின் ஆற்றல் வாய்ந்த பொதுச் செயலாளர் அருமை வைகோ அவர்களைப் பற்றிய ஒரு பொது மதிப்பீடு என்ன தெரியுமா?
தேர்தல் வரும்பொழுதெல்லாம் தவறான முடிவுகளை மிகச் சரியாக எடுப்பார் என்பதுதான் அந்தப் பொது மதிப்பீடு.
2001 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவோடு கூட்டணி பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்; இரண்டே இடங்கள் பிரச்சினைக்காக -  போயஸ் தோட்டத்தின் கதவைத் தட்டிய நிலை ஏற்பட்டதிலிருந்து அவர் மீதிருந்த  மதிப்பும் தலை  குப்புறக் கவிழ்ந்து விடவில்லையா?
வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதி என்று கட்சிக்கு அப்பாற்பட்டு கணித்தவர்கள் கூட.. முகம் சுளிக்கும் அளவிற்கு தனக்குத்தானே பல விலங்குகளை ஆபரணம் என்று கருதிப்பூட்டிக் கொண்டு விட்டாரே!
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட (2014) பிஜேபி யோடு கூட்டணி வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் மோடி அலை வீசுகிறது என்று புயல் வேகப் பிரச்சாரம் செய்ததோடு மட்டுமல்ல.
தி.மு.க. - அதிமுக வுக்கு மாற்றாக பா.ஜ.க அலை வீசுகிறது (தி.இந்து - 17.12.2014) என்ற அளவுக்குக் கூட சகோதரர் வைகோ சென்றதுண்டு.
இவ்வளவுக்கும் 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவை என்னென்ன என்பது தெரியுமா?
அயோத்தியில் ராமன் கோயில், அரசியல் நிர்ணய சட்டத்தில் 370ஆம் பிரிவு நீக்கம், யுனி ஃபார்ம் சட்டம் இயற்றப்படும், பசு பாதுகாப்பு பேணப்படும் என்ற ஹிந்துத்துவா அஜண்டா இடம் பெற்றிருந்தது.
அந்தத் தேர்தல் அறிக்கையை தயார் செய்த முரளி மனோகர் ஜோஷி என்ன சொன்னார் தெரியுமா? ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தேன் என்றாரே! (தினமலர் 1342014)
இந்தக் கொள்கையை உடைய பிஜேபி தான் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அணி என்று மார்புப்புடைத்து மனங்கனிந்து பேசினார் புரட்சிப் புயல் வைகோ அவர்கள்
1996ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலின்போது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியோடு (மார்க்சிஸ்ட்) கூட்டணி வைத்திருந்த தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்னிறுத்தக் கூடாது என்ற சி.பி.எம். வைத்த நிபந்தனைக்கு கட்டுபட்டவர்தான் நமது வைகோ அவர்கள்.
இதற்குப்பிறகும் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது எம் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் உயிர் நாடியாகத் துடிப்பது என்று பேசுவதெல்லாம் வசனமாகத்தானே கருதப்படும்.
இன்றைக்கு திமுக - அதிமுக வை எதிர்ப்போம் - படுதோல்வி அடையச் செய்வோம் என்று முழங்குபவர்கள் சொல்வது என்ன?
1967லிருந்து திராவிட இயக்க ஆட்சி நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டது - நாட்டை திராவிட இயக்க ஆட்சியிலிருந்து மீட்போம் என்று தானே சொல்லுகிறார்கள்.
தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் வில்லுக்கு அம்பா கிறோமே என்று ஒரு கணம் சிந்திக்க வைகோ கடமைப்பட வில்லையா?
திராவிட இயக்க ஆட்சி என்கிற போது  அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்ததும் அடங்கும் தானே! அதற்குப் பிறகு வைகோ திமுகவில் இருந்த காலகட்டமும் அடங்கும்தானே! அவையெல்லாம் யோசிக்கப்பட வேண் டாமா?
தான் ஒரு திராவிட இயக்கத்தை சேர்ந்தவன். தான் நடத்துவதும் திராவிட இயக்கம் தான் என்ற அழுத்தமான எண்ணம் அவர் உள்ளத்தில் உருக்கொண்டிருந்தால்,  எதிரிகளின் வியூகங்களை சல்லடைக் கண்களாக நொறுக்கித் தள்ள தோள் தூக்கி இருக்க வேண்டாமா?.
சில மாதங்களுக்கு முன் வரை வைகோ அவர்கள் தமது கட்சியின் உயர்மட்டக்கூட்டங்களிலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சொல்லி வந்த, அழுத்தமாக வலியுறுத்திய கருத்து என்ன?
வரும் தேர்தலில் திமுகவுடன் தான் கூட்டணி என்று கூறிடவில்லையா?
இதனைச் சொல்லுபவர்கள் யார்? கட்சியின் பொருளாளர் என்ற மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் அல்லவா இதற்கு சாட்சியாக இருப் பவர்கள்.
இந்த நிலையிலிருந்த வைகோ அவர்கள் திமிறிக் கொண்டு தலைகீழ் முடிவை எடுத்தது ஏன்? இதன் பின்னணி என்ன? இடையில் என்ன நடந்தது? என்ற சந்தேகம் எழத்தானே செய்யும். அந்த சந்தேகம் கட்சிக்குள்ளேயே முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்களிடத்திலேயே வெடித்து கிளம்பி விட்டதே! எதிர்கட்சிக்காரர்கள் சொன்னால் அதற்கு உள் நோக்கம் கற்பிக்கலாம், சந்தேகத்தை கிளப்பியவர்கள் சொந்த கட்சியினராக அல்லவா இருக்கிறார்கள்!
வைகோ அவர்கள் தேர்தல் நேரங்களில் திடீர் திடீர் என்று தலைகீழ் முடிவுகளை எடுத்து வருவதால் தானே கட்சியின் தொடக்கத்தில் இருந்த முக்கியமானவர்கள் எல்லாம் வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது திமுகவின் சதி என்று சொல்வதெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். இப்படி சொல்வது கூட கட்சியை நடத்திச் செல்பவர்களின் பலகீனத்தைத் தான் பறைசாற்றும்.
நால்வர் கூட்டணி என்று மற்றவர்கள் சொன்னாலும் மக்கள் நலக்கூட்டணி என்ற வசீகரமான பெயர் சூட்டப்பட்டது. ஒரு பொதுத் திட்டமும் உருவாக்கப்பட்டது. கொள்கை முகம் என்றெல்லாம் போற்றப்பட்டது. அதையாவது காப்பாற்றிக் கொள்ள முடிந்ததா?
திடீர் என்று கேப்டன் விஜயகாந்த் அணி என்று அறிவிக்கப்பட்டது எப்படி? இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு போன்றவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறி விட்டனரே! என்ன செய்யப் போகிறார்கள்?
மக்கள் நலக் கூட்டணி முன்வைத்த திட்டங்களை ஏற்றுக் கொண்டுதான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த அணியை தலைமை தாங்கி வழிநடத்த போகிறாரா இந்த  முக்கிய பிரச்சினைகள் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? தனியே விஜயகாந்த் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விட்டார் என்பதுதான் தற்போதைய செய்தி. (LATEST) இதில் எதை எடுத்துக் கொள்வது?
மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் திட்டத்தையா? விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையா? அட குழப்பமே! பெருங்குழப்பமே!
தேர்தலில் போட்டியிடுவோர்களிலேயே எங்களிடம் தான் பொதுத்திட்டம் உண்டு என்று தோள் புடைக்கச் சொன்னது கூட இப்பொழுது புஷ்வாணமாகி விட்டதே.
தேமுதிக என்ற கட்சி இதுவரை எந்த  கொள்கையைத்தான் முன் வைத்து வந்திருக்கிறது? யாருக்காவது தெரிந்து சொன்னாலும் அந்த ‘கொலம்பசுகளுக்கு’ப் பரிசுகள் கூட வழங்கலாம்.
குழப்புவது தான் என் வேலை என்று  சொல்பவர்தான் கூட்டணியின் தலைவரா?
தேசிய முன்னணி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி, மக்கள் நலக்கூட்டணி என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் ஒருவரின் தனிப்பட்ட பெயரை முன்னிறுத்தி அவர் பெயரால் கூட்டணி என்று சொல்லுவது எவ்வளவுப் பெரிய தடுமாற்றம் - தலை குப்புற விழுந்த பரிதாபம். கையறு நிலை!
அந்தப் பெயருக்குரியவர்தான் பெரிய லட்சியவாதியா? நாட்டுக்காக உழைத்தவரா? தியாகத் தீயில் குளித்து எழுந்தவரா? குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியையாவது தக்க வைத்துக் கொண்டவரா?
கொள்கை போய் தனி நபர் தலைமை என்னும் தடுமாற்றக்குழியில் இவ்வளவு சீக்கிரம் விழுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் தாம்.
வைகோ அவர்களுக்கு அப்படி என்ன திமுக மீது அளப்பரிய கோபம்? அந்தக்கட்சி தானே அவரை உருவாக்கி அடைகாத்து அடையாளம் கொடுத்தது. ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பது அவருக்குத் தெரியாதா? உணர்ச்சி வயப்படுவது, குலுங்கி அழுவது என்பதெல்லாம், லட்சியவாதி களுக்கான அணிகலன்கள் அல்லவே.
இனி என் வாழ்நாளில் கலைஞரை எதிர்க்க மாட்டேன். காலம் எனக்குக் கற்றுக் கொடுத்த பக்குவம் இது என்று ஆனந்தவிகடன் இதழுக்கு வைகோ அவர்கள் கொடுத்த பேட்டியில் சொன்னாரே, என்னவாயிற்று?
பக்குவம் அடைந்த பிறகும் ஒருவர் தடுமாறுவது நல்லதல்ல என்று பக்குவமாக எடுத்துக் கூறுவது தாய் கழகத்தின் கடமையாகும்.
விஜயகாந்தைக் கூட்டணியில் சேர்க்க திமுக, பா.ஜ.க. நடத்திய பேரம் என்ன என்று கேட்கப்போய், திமுக தலைவர் கலைஞர், வைகோ அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதில்கூட புத்திசாலித்தனம் இல்லையே. கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடியவரை ‘தர்ம சங்கடத்தில்’ ஆழ்த்தக் கூடியது என்பது கூட அறியாத குழந்தையா சகோதரர் வைகோ?
அம்மையார் பிரேமலதாவே சூடாகப் பதில் கொடுத்து விட்டாரே - பேரம் நடந்ததாக வைகோ கூறுகிறாரே என்ற கேள்வியை அம்மையார் பிரேமலதா அவர்கள் இந்த கேள்விக்கு அவரிடமே (வைகோவிடமே) போய்க் கேளுங்கள் என்று சீறியிருக்கிறாரே - மத்தளத்துக்கு இருபக்கமும் அடி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாரே-என்ன செய்யப்போகிறார் சகோதரர் வைகோ?
மக்கள் மறந்து விடுவார்கள், மக்களின் மறதி தானே அரசியல்வாதிகளின் மூலதனம் என்று ஒரு காலத்தில் நினைத்திருக்கலாம். இப்பொழுது மக்களுக்கும் விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதே - மாஜி மக்கள் நலக்கூட்டணி கொஞ்சம் சிந்திக்கட்டும்!
------------------
அன்று சொன்னதும் அந்த வைகோதான்
பல்லடம், செப்.16- மதிமுக மாநில மாநாடு, அண்ணாவின் 107-வது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 15, செப்டம்பர் 2015  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய வைகோ, மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தித் திணிப்பு செயலில் ஈடுபடுகிறது. அய்.நா. சபையில் இந்தியை அலுவல் மொழியாக்க முயற்சிக்கிறது. அய்.நா. சபையில் அலுவல் மொழியாக்க தகுதியுடைய ஒரே மொழி தமிழ் மட்டுமே. இதுதவிர, கல்வித்துறையில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது. இன்றைய சூழலில் இந்தி யாவில் கல்வித்துறை காவித்துறையாக மாறிக் கொண்டி ருக்கிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு சுதந்திர தமிழ் ஈழம் மட்டுமே. அங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் மதிமுக கூட்டணி வைக்காது. இரண்டு கட்சிகளுமே ஊழலில் திளைத்துப் போயுள்ளன. இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ள மக்கள் நலக் கூட்டியக்கத்துடன் எங்களது கூட்டணி இருக்கும். மக்கள் நலக் கூட்டியக்கத்தில் மனித நேய மக்கள் கட்சி சேர வேண்டும். எங்களது கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தல் வெற்றிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்றார்.
- நக்கீரன் இணையம், 16.9. 2015
கிருஷ்ணகிரி, சனவரி08, 2016, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக வைகோ மறைமுகமாக விருப்பம் தெரிவித் துள்ளதால் அக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது என்று செய்தி வெளியானது. இதனிடையே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண் டல ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் கிருஷ்ணகிரியில் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, மக்கள் நலக் கூட்டணியில் யாரும் முதல்அமைச்சர் வேட்பாளர் கிடையாது. தேர்தல் முடிந்த பிறகு முதல்அமைச்சர் யார்? என்பதை எம்.எல்.ஏக்கள் கூடி தேர்வு செய்வோம். எனக்கு முதல் அமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் நிற்க எனக்கு விருப்பம் கிடையாது. இந்த முறை சட்டமன்ற தேர்தலில் நான் நிற்கவேண்டும் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.”என்று தெரிவித்தார்.
-ஜன்னல் மீடியா, இணையம், 8.1.2016
----------------
இன்று சொல்வதும் அதே வைகோதான்!
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக அணி இனி விஜயகாந்த் அணி என அழைக்கப்படும். இக்கணம் முதல் நாங்கள் தேர்தல் களம் கண்டுள்ளோம். இக்கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜயகாந்த் கிங்காவார். முதல்வராவது உறுதி. தேர்தலில் வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சியே அமையும். மக்கள் எதிர்பார்த்த கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் வெற்றிக் கூட்டணி கேப்டன் விஜயகாந்த் அணி. இந்தக் கூட்டணி உருவாக வித்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என வைகோ தெரிவித்தார்.
----------------
ஆறுவது சினமே - வைகோ அவர்களே!
பாலிமர் தொலைக்காட்சியினர் வைகோ அவர்களுடன் நேர்காணல் நடத்தி கொண்டிருந்தனர். அ.இ.அ.தி.மு.கவின் ‘பி’ டீமாக இருப்பதற்காக விஜய்காந்த் தலைமையில் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அதிமுகவிடமிருந்து 1500 கோடிரூபாய் தங்களுக்கு அளிக்கப்பட்டதாக.... என்று நெறியாளர் திரு.கண்ணன் அவர்கள் கூறி வாக்கியத்தை முடிக்கும் முன்னரே வைகோ அவர்கள் திடீர் என்று எழுந்து, தன் சட்டைப் பொத்தானில் மாட்டியிருந்த ஒலி வாங்கியைக் கழற்றி எறிந்து விட்டு வேக வேகமாக இடத்தைக் காலி செய்த காட்சியைப் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துப் பரிதாபப்பட்டுள்ளனர்;
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இருக்க வேண்டிய சகிப்புத் தன்மை பொறுமை என்ற அணிகலன்களையல்லவா கழற்றி எறிந்து வெளியேறி இருக்கிறார்! பொது வாழ்க்கையில் தந்தை பெரியார் எதிர்நோக்காத கேள்வியா?
பொதுவுடைமைபற்றிப் பேசிய தந்தை பெரியாரிடம் உங்கள் மனைவி நாகம்மையாரைப் பொதுவுடைமை ஆக்குவீர்களா என்று பார்ப்பனர் ஒருவர் கேட்டபொழுது கூட, சற்றும் சங்கடப்படாமல் அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்?
நாகம்மையாரிடமே கேளுங்கள் என்று சொன்ன தலைவரைப் பெருமையாகப் போற்றும் வைகோ அவர்கள், என்ன சொல்லியிருக்க வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அபவாதத்தை மறுத்துச்  சொல்லுவதற்குக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பமாகவே கருதுகிறேன். - என்று கூறி மட்டையை இரண்டு கீற்றாக கிழித்து எறிந்திருந்தால், இவரல்லாவோ தலைவர் என்ற உச்சாணிக் கொம்பில் , வைகோ அவர்களை மக்கள் போற்றும் ஓர் அரிய வாய்ப்பை - அவருக்கே உரித்தான முன் கோபத்தால் காலில் போட்டு மிதித்து விட்டாரே!
தன்னைப் பற்றிய ஒரு கேள்விக்காக இவ்வளவு ஆத்திரப்படும் வைகோ அவர்கள் விஜயகாந்திடம் 500 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது தி.முக.. என்று பேசி இருக்கிறாரே - அதற்கு என்ன பதில்?
கேள்வி கேட்பதெல்லாம் தமக்கே உரித்தான பிதிரார்ஜித உரிமை - சொத்து என்று ஒருக்கால் தமக்குத்தாமே வரித்துக் கொண்டு விட்டாரோ - என்னவோ!

மாற்றம் சீரழிவுகளிலிருந்து பேரழிவுக்கு

- சமஸ்
தமிழகத்தில் இடதுசாரிகள் அமைத்த மக்கள் நலக் கூட்டணி தேமுதிகவிடம் சரணாகதி அடைந்த நாளன்று அக்கூட்டணிக் கட்சிகளைச் சாராதவர்களிடமிருந்தும் வலி மிகுந்த வார்த்தைகள் வெளிப்பட்டதைப் பார்க்க முடிந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 124 தொகுதிகளையும் முதல்வர் வேட்பாளர் என்கிற அந்தஸ்தையும் தேமுதிகவிடம் கொடுத்ததோடு கூட்டணியின் பெயரையும் பறிகொடுத்து, விஜயகாந்த் கூட்டணி ஆக மாறியிருக்கிறது இடதுசாரிகள் அமைத்த நால்வர் அணி, தேமுதிக வாங்கியிருக்கும் 124 இடங்கள் தனிப்பெரும்பான்மைக்குரிய 118 இடங்களைக் கடந்தவை (52.9%) என்பதோடு, குறைந்தபட்சம் கூட்டணி அரசு எனும் வார்த்தையைக்கூட தேர்தல் உடன்பாட்டு அறிக்கையில் நால்வர் அணியால் சேர்க்க முடியவில்லை. பெரிதினும் பெரிது கேள் என்று பேரம் முடித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த், மிச்சமுள்ள 110 இடங்களை நான்காகப் பிரித்தால், இக்கூட்டணியின் மூலம் அடைந்த பலன் என்ன என்பதை நால்வர் அணிக்குத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி விடும்.

கவனம் ஈர்த்த முழக்கம்
ஓராண்டுக்கும் மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்‘திராவிட அரசியலுக்கு மாற்று என்ற முழக்கத்துடன் தமிழகத்தைச் சுற்றிவந்தது, பொதுத்தளத்தில் ஒருஈர்ப்பையும் புதிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருந்தது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் இன்றைய இழிவான சூழ்நிலையின் வெளிப்பாடு அது. இதே முழக்கத்துடன் பாஜக, பாமக உள்ளிட்ட ஏனைய கட்சிகளும் களத்தில் நின்றாலும், இடதுசாரிகள் கவனம் ஈர்க்கக் காரணம் சாதி, மதச்சார்பற்ற அவர்களுடைய நிலைப்பாடும், அவர்கள் பேசும் விளிம்பு நிலை அரசியலும், அவர்கள் தம் முன்னுதாரணங்களாக முன்னிறுத்தும் சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற எளிமையும் நேர்மையும் மிக்க ஆளுமைகளும்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத சூழலாக, இந்தத் தேர்தலில் சுமார் 1.08 கோடி இளைஞர்கள் - 22.92% பேர் - புதிதாக வாக்களிக்கிறார்கள். திமுக, அதிமுக இரண்டுக்கும் எதிரான மனநிலையை இந்தப் புதிய தலைமுறை வாக் காளர்களிடம் பெரிய அளவில் கவனிக்க முடிந்தது. அவர்களைக் குறிவைத்து இறங்குவதற்கான களம் இடது சாரிகளுக்கு இயல்பாக அமைந்திருந்தது. நிச்சயமாக இடதுசாரிகள் இந்த முறை ஆட்சியைப் பிடிக்கப்போகிறவர்கள் அல்ல என்றாலும்கூட இப்படியான ஒரு தரப்பை ஆதரிப்பது, தமிழகத்தின் சமகால அரசியல் போக்குக்கு எதிராக நிற்பதற் கான தார்மீக ஆதரவாகப் பார்க்கப்பட்டது. இப்போது இடது சாரிகள் உருவாக்கியிருக்கும் கூட்டணியோ எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது. வாக்காளர்கள் முன்பு கடைசியாக அவர்கள் முன்வைத்திருக்கும் தேர்வு என்ன? கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக விஜயகாந்த்!
மாற்றம் என்னும் அபாய வாள்
இந்திய அரசியலையும், இந்தியாவின் இன்றைய சமூகச் சூழலையும் உற்றுநோக்கும் எவருக்கும் இப்படியொரு கேள்வி அடிக்கடி எழக்கூடும். இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் நாளுக்கு நாள் வறுமையை நோக்கித் தள்ளப்படுகின்றனர். அதிகாரம் பெருமுதலாளிகள் காலில் குவிகிறது. சாதி, மத, இனப் பாகுபாடுகள் அதிகரிக்கின்றன. எல்லாமும் சேர்ந்து சாமானிய மக்களை உக்கிரமாகத் தாக்குகின்றன. இத்தகைய சூழலில் இவை எல்லாவற்றுக்கும் எதிராகப் பேசும், ஒரு இயக்கம் மக்களிடம் இயல்பாகப் பரவ வேண்டும். மக்கள் தன்னெழுச்சியாக அதை வாரி அணைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் நடப்பதென்ன? நேர் எதிராக நாளுக்கு நாள், மிக மோசமாக அடிவாங்குகிறார்கள் இடதுசாரிகள். காரணம் என்ன?
மாற்றம் எனும் சொல் கேட்பதற்கு எவ்வளவு வசீகரிக்கக் கூடியதோ அவ்வளவுக்குக் கையாளும்போது அபாயகர மானது. கைப்பிடியற்ற வாள் அது. எதிரியைத் தாக்குகிறதோ இல்லையோ சரியாகக் கையாளவில்லையெனில், கையாள்ப வரின் கைகளை அது பதம்பார்ப்பது நிச்சயம். அடிப்படையில் தூய்மைவாதத்தை முன்னிறுத்தும் சொல் மாற்றம். இடது சாரிகள் இந்தியாவில் இவ்வளவு தூரம் கீழே வந்ததற்கும், நாளுக்கு நாள் அடிவாங்குவதற்கும் தூய்மைவாதத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு ஒரு முக்கியமான காரணம். இடதுசாரிகளிடம் தூய்மைவாதப்பேச்சு அதிகம் தூய்மை வாதப் பேச்சுக்கான செயல்பாடு குறைவு. ஊரையெல்லாம் விமர்சிப்பவர்கள் கடைசியில் தாம் செல்ல அதே பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நீங்கள் எதிரியின் சுத்தத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்றால், உங்கள் கைகள் மட்டுமல்ல; உங்களுடன் கைகோத்து நிற்பவர்களின் கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். சரியாகச் சொல்வதெனில், இடதுசாரிகள் தங்களது எதிரிகளை மிகச் சரியாக நிர்ணயிக்கிறார்கள். நண்பர்களை அடையாளம் காணும்போது மோசமாக சொதப்புகிறார்கள். வரலாற்று வாய்ப்புகளைத் தாமாக முனைந்து நாசப்படுத்திக் கொள்வதில், அலாதியான வேட்கையை வெளிப்படுத்துகிறார்கள்.
தமிழகத்தின் 2016 தேர்தல் சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் இடதுசாரிகள் தங்கள் தளமெனப் பார்க்கும் இன்றைய வெற்றிடம் எப்படி உருவானது? அரை நூற்றாண்டு திராவிட அரசியல் உருவாக்கிய வெற்றிடம் இது. இங்கே திராவிட அரசியல் என்று நாம் எல்லோருமே குறிப்பிடுவது பெரியாரிய அரசியலின் தொடர்ச்சி அல்ல; கருணாநிதிய, எம்.ஜி.ஆரிய, ஜெயலலிதாவிய அரசியலின் எச்சம். தனிமனித வழிபாட்டுக்கும் சந்தர்ப்பவாதத்துக்கும் படாடோபத்துக்கும் பேர் போன அரசியலின் எச்சம். இதைத்தான் இடதுசாரிகளும் திராவிட அரசியல் என்று குறிப்பிடுகிறார்கள் என்றால், விஜய காந்த், பிரேமலதாவிடம் வெளிப்படுவது எந்த அரசியல்? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இன்றைக்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன் கையிலும், ஜி.ராமகிருஷ்ணன் கையிலும் வைகோ திணிக்கும் போர் வாள் எந்த அரசியலின் அப்பட்டமான குறியீடு?
எது உண்மையான மாற்றம்: சமூக வலைதளங்களில் இந்தக் கூட்டணி உண்டாக்கியிருக்கும் விமர்சனங்களுக்கு சில இடதுசாரி எழுத்தாளர்கள் இப்படி ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். “நல்லகண்ணுவை முன்னிறுத்துங்கள், சங்கரய்யாவை முன்னிறுத்துங்கள், தனித்து நில்லுங்கள் என்று இப்போது சொல்கிறீர்கள். 2014 மக்களவைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து நின்றோம். அப்போது யார் எங்களை ஆதரித்தீர்கள்?”
அபத்தனமான கேள்வி இது. 2014 மக்களவைத் தேர்தல் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பான அரசியல் சூழலைக் கொண்டிருந்தது. மன்மோகன் சிங் அரசு மீதான ஊழல் எதிர்ப்பு அலையை முன்கூட்டிக் கணித்த மோடியும் பாஜகவும் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் திட்டமிட்டு வேலை செய்தார்கள். புதிய உத்திகளைக் கையாண்டார்கள். முக்கிய மாக, தங்கள் வழமையான மதவாத அரசியலுக்கு வளர்ச்சிப் பூச்சு பூசி சூழலைத் தம்வசம் ஆக்கியிருந்தார்கள். இடது சாரிகள் செய்தது என்ன? ஒரு பெரும் போர்க்களத்தில் கையில் எந்த ஆயுதமும் வியூகமுமின்றி குழப்பமான மனநிலையில், வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததுபோல் இருந்தது அவர்களின் செயல்பாடு “ஊழல் காங்கிரஸ், மதவாத பாஜக வேண்டாம்“ என்று சொன்னவர்களால், மாற்று பிரதிநிதியை முன்வைக்க முடியவில்லை. மூன்றாவது அணி என்று அவர்கள் உருவாக்க முயன்று அணுகிய கட்சிகள் யாவும் மாநில அளவில் ஊழல், சாதிய அரசியலில் கரை கண்டவை. ஏனைய மாநில மக்களிடம் மதிப்பிழந்தவை.
தமிழகத்தில் இரு பெரிய கட்சிகளையும் தவிர்த்து இடது சாரிகள் தனித்து நின்றது.உண்மை. இந்த முடிவை அறிவிக்கும் முன்பு வரை அவர்கள் எங்கிருந்தார்கள்? அதிமுக கூட்டணியில். கடைசி தருணம் வரை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் காத்துக் கிடந்தார்கள். மக்கள் எல்லாவற்றையும் ஒரே நாளில் மறந்துவிடுவார்களா? நீங்கள் மாறிய ஒரேநாளில் கழுத்தில் மாலை சூடிவிடுவார்களா? சரி, ஒரு பெரும் தேர்தலைத் தனித்து எதிர்கொண்டவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தனித்து நின்று காட்ட வேண்டாமா? தங்கள் மீது தங்களுக்கே நம்பிக்கையில் லாதவர்கள் மீது மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?
இடதுசாரிகளுடனான உரையாடலின் போதெல்லாம், பலர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. தோழர், இந்த வெற்றிடச் சூழலை நிரப்ப வேண்டும் என்றால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களைப் போன்ற பொதுத்தளத்தில் இருப்பவர்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர்களிடம் சொல்வது. “ஒரு பெரும் அரசியல் இயக்கத்தின் மாற்று முழக்கம் என்பது பளிச்சென்று பட்டவர்த்தனமாகத் தெரிய வேண்டும். அதனுடைய செயல்திட்டங்களில் மட்டு மல்ல; அதன் ஒவ்வொரு அசைவிலும் தெரிய வேண்டும். தேர்தல் களம் என்றால், அது முன்வைக்கும் முழக்கங்கள், அது முன்னிறுத்தும் பிரதிநிதிகள், அதன் பிரச்சார பாணிகள் ஒவ்வொன்றிலும் புதுமை தெரிய வேண்டும். சூழலின் வேறுபாடு தெரிய வேண்டும். பழைய உதாரணம் காந்தியின் காங்கிரஸ். சமீபத்திய உதாரணம் ஆம் ஆத்மி கட்சி”
இடதுசாரிகள் இந்தியாவுக்குப் புதிய கட்சியல்ல. பழைய கட்சி என்பதே ஒரு பெரிய சுமை. இந்தச் சுமையைத் தூக்கிக்கொண்டுதான் ஓட வேண்டும் என்றால், கூடுமான வரைக்கும் தூக்குமூட்டைகளைக் குறைக்க வேண்டும். அமெரிக்காவில் பால்ட் கழுகுகள் தொடர்பாக சுவாரஸ்யமான ஒரு கதை உண்டு. இந்தக் கழுகுகள் முதுமையை அடைந்ததும் ஓரிடத்தில் போய் உட்கார்ந்துவிடுமாம். தன்னுடைய மூக்கின் நுனியை உடைத்துக்கொள்ளுமாம். தன்னுடைய இறகுகள் எல்லாவற்றையும் பிய்த்தெறிந்துவிடுமாம். மீண்டும் புத்தம் புதிதாக எல்லாம் முளைக்க வாழ்க்கையைத் தொடங்குமாம். இன்னொரு ஆயுளை வாழுமாம். பழமையைக் களைதல் என்பது ஒரு மறுபிறப்பு மாற்றம் வெளியில் மட்டும் அல்ல; உள்ளுக்குள்ளும் நடக்க வேண்டும். அப்படி ஒரு மாற்றத்துக்கு இடதுசாரிகள் இங்கே தயாராக வேண்டும் என்றால், முதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்.
இந்திய இடதுசாரிகளே, திரும்பத்திரும்ப தங்களுடைய பழம்பானைகளில் யோசனைகளைத் தேடுபவர்கள். தமிழகத் தில் இந்தத் தேர்தலை அவர்கள் எதிர்கொள்ளும் வியூகம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக்குமுன்வங்கத்தில் தங்கள் கணக்கைத் தொடங்க கையாண்ட வியூகம். வங்கத்து இடது சாரிகளாவது அன்றைக்குத் தங்களைக் காட்டிலும் பலவீன மான கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, முடிவெடுக்கும் மய்யமாக தங்களை முன்னிறுத்திக்கொண்டு காய் நகர்த்தினர். தமிழகத்தில் உருக்குலைவு நடந்திருக்கிறது.
இடது கூட்டணியை விஜயகாந்த் கூட்டணியாக மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளவில்லை. இத்தனை நாட்களும் எதை மய்யப்பொருளாகப் பேசினார்களோ அதையும் அவர்களே கேலிப்பொருளாக்கிவிட்டார்கள். கூடவே இந்த அரை நூற்றாண்டில் இல்லாத சூழலாக உருவாகியிருந்த மூன்றாவது அணிக்கான ஒரு காத்திரமான சாத்தியத்தையும் நாசமாக்கி விட்டார்கள்.
என்ன சாதித்தார் விஜயகாந்த்?
தமிழக வரலாற்றிலேயே மிக மோசமாக செயல்பட்ட அல்லது செயல்படாத ஒரு சட்டப்பேரவை மற்றும் ஆட்சிக்காலம் என்கிற குற்றச்சாட்டு இந்த அதிமுக ஆட்சி மீது உண்டு ஜெயலலிதா மட்டுமா இதற்குக் காரணம்? சட்டப்பேரவைப் பக்கம் எட்டியே பார்க்காத எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த்தும் ஒரு காரணம் இல்லையா? மேடைக்கு மேடை மக்களைப் பார்க்காத முதல்வர், பத்திரிகை யாளர்களைச் சந்திக்காத முதல்வர், கேள்வி கேட்க முடியாத முதல்வர்” என்றெல்லாம் இடதுசாரிகள் பேசினார்களே, இவை அத்தனையும் விஜயகாந்த்துக்கும் பொருந்தும் இல்லையா? ஒருஎதிர்க்கட்சித்தலைவர் எப்படிப்போர்க்குணத் துடன் செயல்பட முடியும் என்பதற்கும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை எதிரிலிருந்து எப்படித் தீர்மானிக்க முடியும் என்பதற்கு இன்றைக்கும் தமிழகத்தில் அண்ணாவின் காலகட்டம் நம் நினைவிலிருக்கும் உதாரணம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு எதிரான கருணாநிதியின் செயல்பாடுகளும் அசாத்தியமானவை. விஜயகாந்துடன் ஒப்பிடுகையில் கடந்த காலங்களில், கருணாநிதிக்கு எதிராகப் பல மடங்கு சிறப்பாகச் செயல்பட்டவராகிறார் ஜெயலலிதா. இன்றைக்குத் தமிழகம் பெருமிதமாகப் பேசும் 69 இடஒதுக்கீடு வந்த வரலாற்றில் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு இணையாக அன்றைய எதிர்க்கட்சியான திமுகவுக்கும் பங்கிருக்கிறது இல்லையா? சட்டசபையில் பேச முடியவில்லை என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லும் விஜயகாந்த் மக்கள் சபையில் சாதித்தது என்ன?
தனிநபர் வழிபாட்டு அரசியல், குடும்ப அரசியல், வாரிசு அரசியல் எது ஒன்றிலும் விஜயகாந்த்தின் தேமுதிக விதி விலக்கல்ல. திமுக, அதிமுகவாவது ஆட்சிக்கு வந்த பின் ஊழல் குற்றச்சாட்டுக்களில் அடிபட ஆரம்பித்தவை. விஜய காந்த் மீது இப்போதே தேர்தல் பணப் பேரம் குற்றச்சாட்டுகள் அடிபடுகின்றன. சொந்தக் கட்சியினரே பல கதைகளைப் பேசுகிறார்கள்.
மீண்டும் சினிமா கலாச்சாரமா?
தற்கொலை முடிவுகளையும் உள்ளடக்கியது. கட்சியின் எதிர்காலம், தேர்தல் வெற்றி, தோல்விகளைத் தாண்டி ஒரு கட்சியின் தேர்தல் முடிவுகளும் பிரச்சாரங்களும் உருவாக்கும் தாக்கங்களும் விளைவுகளும் பொதுச் சமூகத்துக்கு முக்கிய மானவை. கருணாநிதி, ஜெயலலிதா பாணி அரசியலுக்கு மாற்று என்று சொல்லி அவர்களை மிஞ்சும் விஜயகாந்தை முன்னிறுத்துவதைத் தாண்டி, இந்தத் தேர்தல் மூலம் இடதுசாரிகள் தமிழகத்திற்கு இழைக்கும் மிகப் பெரிய கேடு, சினிமா கவர்ச்சி அரசியலை மீண்டும் அடித்தட்டுமக்களிடம் தர்க்கரீதியாக கொண்டுசெல்வது ஒரு சங்கரய்யாவும் நல்ல கண்ணுவும் விஜயகாந்த் தலைமையை வலியுறுத்திப் பேசும் தாக்கம் என்னவாக இருக்கும்? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் சேரிகளில் எதிர்த்துப் பேசிவந்த சினிமா கவர்ச்சி அரசியலை மீண்டும் அவர்கள் கையாலேயே கொண்டுசேர்க்கும் திருப்பணியை இடதுசாரிகள் கூட்டணி சாதிக்கவிருக்கிறது.
ஒருவிதத்தில் வரலாறு திரும்புகிறது. எந்த திராவிடக் கட்சிகளுக்கு இன்றைக்கு முடிவு கட்டுவோம் என்று பேசு கிறார்களோ அந்த இரு கட்சிகளையும் இந்த அரை நூற் றாண்டும் மாறிமாறிச் சுமந்தவர்கள் இடதுசாரிகள்.
தமிழகத்தின் சினிமா அரசியல் கலாச்சார பிதாமகனான எம்.ஜி.ஆருக்கும் சினிமா கவர்ச்சி அரசியலின் பீடமான அதிமுகவுக்கும் ஊர் ஊராக தர்க்க நியாயம் கற்பித்தவர்கள் இடதுசாரிகள். இந்த அய்ம்பதாண்டு திராவிட அரசியல் அவலங்களில் இடதுசாரிகளுக்கும் பங்கிருக்கிறது. அன் றைக்கு திமுகவுக்கு மாற்றாக எம்.ஜி.ஆரை முன்வைத்தது போலவே இன்றைக்கு விஜயகாந்த்தையும் தர்க்கரீதியாக மாற்றாக முன்வைக்கிறார்கள் என்றால், இருகோடுகள் தத்துவப்படி இது சரியான மாற்றுதான்!

நன்றி : தமிழ் இந்து நாளிதழ்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...