Thursday, May 25, 2017

சுதந்திர நாட்டில் ஜாதி ஒழிப்புக்கான அரசின் திட்டம் என்ன? - கி.வீரமணி அறிக்கை..

‘‘இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது ஜாதியே!''
உலக புத்த மார்க்கத்தின் தலைவர் தலாய்லாமா கூறும் நிலைதான் இன்றும்!
சுதந்திர நாட்டில் ஜாதி ஒழிப்புக்கான அரசின் திட்டம் என்ன?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சிந்தனைக்குரிய அறிக்கை
பெண்களைப்
இந்திய நாட்டின் வளர்ச்சிக்குத் தடை ஜாதியே என்று உலகப் புத்த மார்க்கத்தின் தலைவர் தலாய் லாமா கூறும் நிலைதான் இன்றும்! சுதந்திர இந்தியாவில் ஜாதியை ஒழிக்க அரசு வைத்திருக்கும் திட்டம் என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள ஜாதி ஒழிப்புச் சிந்தனையைத் தூண்டும்  அறிக்கை வருமாறு:
டாக்டர் அம்பேத்கரின் 125 ஆம் ஆண்டுபிறந்த நாளை கருநாடக அரசு சார்பாக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மிகச் சிறப்பாக நேற்று (23.4.2017) பெங்களூருவில் நடத்தியுள்ளனர்.
அதற்குத் தலைமை விருந்தினராக திபெத் - தலாய்லாமா அவர்களை அழைத்துள்ளனர். தலாய் லாமா நோபல் பரிசு பெற்ற ஒரு தத்துவஞானியான புத்த நெறி பரப்பும் தலைவர்.
அண்ணல் அம்பேத்கர் எடுத்த
22 உறுதிமொழிகள்
பவுத்தம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - மூன்றும் நிறைந்த வாழ்க்கை நெறி, ஜாதிக்கே இடம்தராத, கடவுள் - ஆத்மா நம்பிக்கையற்ற, பெண்ணடிமையை ஏற்காத ஒரு நெறி என்பதால்தான், ‘நான் சாகும்போது ஒரு ஹிந்துவாக சாகமாட்டேன்?’ என்று அய்ந்து லட்சம் தாழ்த்தப்பட்ட சகோதர, சகோதரிகளுடன் நாக்பூரில் அவர் 22 உறுதிமொழிகள் கூறி பவுத்தத்தைத் தழுவினார்!
பி.ஜே.பி. ஆளும் உ.பி.யில்
தாழ்த்தப்பட்டோர் எரிப்பு!
ஜாதிதான் இந்திய சமூகத்தின் மிகப்பெரிய கேடுகளின் உற்பத்தி மய்யம். இன்றும் ஹிந்து சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சகோதரர்களின் வீடுகள் மற்ற ஹிந்து உயர்ஜாதியாரால் தீக்கிரையாக்கப்பட்டு, கொல்லப்படும் நிலையும் தொடரும் சூழ்நிலையும் அன்றாடக் காட்சிகளாகின்றன.
70 ஆண்டு ‘‘சுதந்திரம்‘’ அவர்களை மனிதர்களாக்க முயற்சிக்கவே  இல்லை. தந்தை பெரியார் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும் நாம் வாழும் காலத்து ஒப்பற்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியாளர்கள்!
அவர்கள் அரும்பெரும் போராட்டங்களை நடத்தினார்கள்.
95 ஆம் வயதிலும் ஜாதி ஒழிப்புக்
களத்தில் நின்ற தந்தை பெரியார்
தந்தை பெரியார் அவர்கள் தனது 95 வயதில்கூட ஜாதி - தீண்டாமை ஒழிப்புக்கான திட்டமான அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர் ஆகவேண்டும் - அதன்மூலம் கோவில் ‘கர்ப்பகிருகம்‘ என்ற கருவறையினுள் ஒளிந்து இன்னமும் ஜாதி காப்பாற்றப்படும் வர்ணதர்மம் அழிக்கப்படவேண்டும் என்பதற்காகவே போராட்டக் களத்தில் நின்றார்.
அவரது குருகுல மாணவரான, இன்று 94 வயதில் அடியெடுத்து வைக்கும் ஒப்பற்ற முதல்வராகத் திகழ்ந்த மானமிகு சுயமரியாதை வீரரான கலைஞர்மூலம் சட்டக் களத்தில் வென்றார்; இரண்டு தனிச் சட்டங்கள்; அவை செல்லும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு - என்றாலும் செயற்பாட்டிற்கு வராமலேயே - ஆட்சியாளர் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாது உள்ள வேதனையான வெட்கப்படும் நிலை உள்ளது!
இதனைக் கூர்மைப்படுத்த அடுத்த கட்ட நடவடிக்கையை - கிளர்ச்சிகளை - சட்டப் போராட்டக் களம் உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், உலகம் முழுவதும் சுற்றும் பவுத்தக் கொள்கை பரப்பு நெறித் தலைவரான தலாய் லாமா இந்தியாவின் மிகப்பெரிய கறை ஜாதி முறை - அதை அறவே ஒழித்தால் ஒழிய முன்னேறாது இந்தியா என்று நேற்று (23.5.2017) கூறியுள்ளார்!
நவீன சிங்கப்பூரின் சிற்பியும் கூறியது என்ன?
உலகின் தலைசிறந்த நிர்வாகியாகக் கருதப்பட்ட ‘நவீன சிங்கப்பூர் நாட்டின் தந்தை’யென அழைக்கப்படும் மேனாள் பிரதமர், மதிஉரைஞர்  ‘லீ குவான்  யூ’ (Lee Kuan Yew) அவர்கள் உலக நாடுகள் பலவற்றைப் பற்றிய கருத்துகளைத் தொகுப்பாக தனது இறுதி நாள்களில் எழுதிய ஒரு நூலில் ‘இந்தியா’ என்ற தலைப்பில், ‘‘இந்தியாவின் வளர்ச்சிக்கு இரண்டு பெரும் தடைகள் - முட்டுக்கட்டைகள் உண்டு. 1. அதன் ஜாதி முறைக் கொடுமை 2. அடிக்கட்டுமான குறைபாடு’’ என்று கூறியுள்ளார்.
‘‘சுதந்திரம்‘’ பெற்று 70 ஆண்டுகளில் இன்னமும் இங்கு மாட்டுக்குத் தரப்படும் வசதிகளும், மதிப்பும் - உழைக்கும் மனிதனுக்குத் தரப்படாததோடு, அவர்களை வாழவிடாமல் கொலை, தீக்கிரை, கலவரம் என்ற நிலைக்கு ஆட்படுத்துவது பெருமையானதா? இழிவானதா?
ஜாதி முறையை, பெண்ணடிமையை ஒழித்து பகுத்தறிவை வளர்ப்பதுதான் - சித்தார்த்தனாக இருந்து ‘புத்தராக’ மாறிய புத்தி மார்க்கத் தலைவரின் புத்தநெறி!
தலாய் லாமா கூறுவதைக்
கவனியுங்கள்!
தலாய் லாமா அதே ஜாதியை எதிர்த்து 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நாட்டில் பேசியாக வேண்டியதானது - நம் நாட்டிற்கு அதுவும் சுதந்திர நாட்டிற்குப் பெருமையா? சிறுமையா? எண்ணிப் பாருங்கள்!
இந்த மாற்றத்திற்காக அரசிடம் என்ன திட்டம் உள்ளது?
மாறாக வளர்க்க அல்லவா முயலுகிறது!
கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.
குறிப்பு: தலாய் லாமாவின் முழு உரை 3 ஆம் பக்கம் காண்க.
 சென்னை  
24.5.2017
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...