Saturday, May 27, 2017

கலைஞரிடம் உள்ள போர்க் கருவிகளை தளபதி ஸ்டாலின் கூர்மையாகப் பயன்படுத்துவார்

செய்தியாளர் கேள்விக்குத் தமிழர் தலைவர் பதில்
சென்னை, மே 26, கலைஞரிடம் உள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா தந்த போர்க் கருவிகளை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சரியாகப் பயன்படுத்துவாரா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பயன்படுத்துகிறார், அவசியம் வரும்போது இன்னும் கூர்மையாகப் பயன்படுத்துவார் என்று பதில் சொன்னார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். சென்னை பெரியார் திடலில் இன்று (26.5.2017) நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:
உறவுக்குக் கைகொடுப்பது என்பது வேறு;
உரிமைக்குக் குரல் கொடுப்பது என்பது வேறு.
செய்தியாளர்: மத்திய அரசுக்கு ஏன் இந்த   அள விற்குப் பணிந்து போகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பதில் சொல்லும்பொழுது, தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி தேவைப்படுகிறது - அதற்காக ஒரு இணக்கமான போக்கு வேண்டும் என்பதற்காகத்தான், முதலமைச்சர், பிரதமரை சந்திக்கிறார் என்று விளக்கம் சொல்லியிருப்பது ஏற்கத்தக்கதா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: பிரதமரை, ஒரு முதலமைச்சர் சந்திப்பது தவறு என்று சொல்லக்கூடிய அளவிற்கு அரசியல் சூனியங்கள் அல்ல நாங்கள்; ஏற்கெனவே நான் சொன்னேன், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்பொழுது ஒரு அற்புதமான வாக்கியத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள் - நடைமுறைப்படுத்தினார்கள்.
உறவுக்குக் கைகொடுப்பது என்பது வேறு;
உரிமைக்குக் குரல் கொடுப்பது என்பது வேறு.
உதவி கேட்பது என்பது வேறு. அதேநேரத்தில், அதற்காக அடிமையாக மாறுவது என்பது வேறு.
ஜி.எஸ்.டி. முறையை அமல்படுத்தினால், மாநில வருவாயே குறையவிருக்கிறது. ஆகவே, எங்கோ இருந்து வரும் பணம் அல்ல - மத்திய அரசு நிதி என்பது - அது மக்களுடைய பணம்தான்.
இன்னுங்கெட்டால், ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி.ராமாராவ் அவர்கள் மிக அழகாக சொன்னார்,
ஆளுவதற்கு உண்மையில் மக்கள் இருப்பது மாநில அரசுக்குத்தான். மத்திய அரசு என்பது  ஒரு கற்பனை என்று சொன்னார்.
நம்முடைய வருமானம்தான் அங்கே செல்கிறது. நாம் கொடுக்கும் வருமான வரிதான். நாம் அவர்களிடம் தருமம் கேட்கவில்லை, பிச்சை கேட்கவில்லை. நம் மக்களிடமிருந்து வசூலித்த வரியைத்தான் - நமக்கு நிதியாக தருகிறார்கள்.
உதவி கேட்பது என்பதோ, நிதி உதவி கேட்பது என்பதோ வேறு. அது எங்களுக்குப் புரியும். அப்படிப் பார்த்தால்கூட, அதில் வெற்றி பெற்று இருக்கிறார்களா? 40 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டார்கள்; கிடைத்தது என்ன? 1748 ஆயிரம் கோடி ரூபாய்தான். அதனு டைய அடிப்படை என்ன? இவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்களா? கெட்ட வாய்ப்பாக, அதிலும் கூட இவர்கள் வெற்றி பெறவில்லை என்பது வருத்தத் திற்குரியது - கண்டனத்திற்குரியது.
கனவு காணுகின்ற சிலர் உள்ள தமிழகம்
செய்தியாளர்: தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர், "கழ கங்கள் இல்லாத தமிழகம் - கவலையில்லா தமிழகம் - பா.ஜ.க. ஆளுவோம்" என்று சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார்களே, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர் ஆசிரியர்: கனவு காணுகின்ற சிலர் உள்ள தமிழகம் என்பதையும் அதனோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
முதலில் தமிழ்நாட்டை காப்பாற்றுவோம்
செய்தியாளர்: பா.ஜ.க.விற்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போகிறோம் மக்களைத் திரட்டி என்று சொல் கிறீர்களே, இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தப் போகிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: எங்களுக்குத் தமிழ்நாடுதான் முக்கியம். முதலில் தமிழ்நாட்டைக் காப்பாற்றுவோம். பிறகு, இந்தியா, தானாகவே தமிழ்நாட்டைப் பார்த்து, காப்பாற்றிக் கொள்ளும். அதே நேரத்தில் இதற்குப் பெரியார்
கொள்கை இந்தியா எங்கும் தேவைப் படும்.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
செய்தியாளர்: தமிழக சட்டப்பேரவையில் முன் னாள் முதலமைச்சர் படத்தினை திறப்பதற்காக பிரதமர் மோடியை முதலமைச்சர் அழைத் திருக்கிறாரே, குற்றம் சாட்டப்பட்டவரின் படத்தினை சட்டப் பேர வையில் திறக்கலாமா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: குடியரசுத் தலைவர் காஞ்சி புரம் வருவதற்காக சுற்றுப் பயணம் திட்டம் போட் டார்கள் சென்ற வாரம். ஏற்கெனவே, சங்கராச் சாரியார் கொலை வழக்கில் சிக்கி, 82 பிறழ் சாட்சியங்களை வைத்துதான் வெளியில் வந்தார். அதற்குப் பிறகு புதுவை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வில்லை. ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் கேட்டார்கள். இப்படி இருக்கும் பொழுது, ஒரு கொலைக் குற்றவாளி இருக்கின்ற மடத்திற்கு குடியரசுத் தலைவர் வரலாமா? அவர் வருவது மதச்சார்பின்மைக்கும் கேடு - நியாயத்திற்கும் கேடு என்று விடுதலை எழுதியது - திராவிடர் கழகம் சுட்டிக்காட்டியது. ஒத்தக் கருத்துள்ளவர்களும் சுட்டிக்காட்டினார்கள்.
குடியரசுத் தலைவர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்தார். மோடி என்ன செய்வார் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
முதலில் சொல்லியது திராவிடர் கழகம்தான்
செய்தியாளர்: சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்தபொழுது, நீங்கள் அதனை வரவேற்றீர்கள். தமிழர் தமிழ்நாட்டை ஆளலாம் என்றும் வரவேற்றீர்கள். இப்பொழுது அ.தி.மு.க. அணியினர் பா.ஜ.க.வோடு இணக்கமாக இருக்கிறது என்கிற ஒரு குற்றச்சாட்டை சொல்கிறீர்கள். இந்த நேரத்தில், சசிகலா இருந்திருந்தால், இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: முதலில் உங்கள் கேள்வியே தவறு. அந்த இரண்டு அணியும் பிரியக்கூடாது என்பதற்காகத்தான் நான் அதனை சொன்னேனே தவிர, அவர்கள் வரவேண்டும் என்கிற கருத்தில் சொல்லவில்லை.
அ.தி.மு.க. இரண்டாக உடைப்பதற்கு மத்திய பி.ஜே.பி. அரசு முயற்சி செய்கிறது என்று முதலில் சொல்லியது திராவிடர் கழகம்தான் - இன்றைக்கு அதுதான் நடந்திருக்கிறது. இதனைச் சுட்டிக்காட்டித்தான், இந்தப் பிளவு ஏற்படாமல் இருப்பதற்கு  அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதனைச் சொன்னோம்.
தமிழகத்தில் தற்போதுள்ள  ஆட்சியின் எல்லையற்ற பலகீனத்தைக் காட்டுகிறது
செய்தியாளர்: ஊடகத்துறையில் பேசுகின்ற பா.ஜ.க.வினர் தமிழகத்தை நாங்கள்தான் ஆட்சி செய்வோம் என்று சொல்கிறார்களே, இது எதைக் காட்டுகிறது?
தமிழர் தலைவர் ஆசிரியர்: இது எதைக் காட்டுகிறது என்றால், தமிழகத்தில் தற்போதுள்ள  ஆட்சியின் எல்லையற்ற பலகீனத்தைக் காட்டுகிறது.
பெரியார் கொடுத்த போர்க் கருவி அண்ணாவிடம், அண்ணா கொடுத்த போர்க்கருவி கலைஞரிடம்
செய்தியாளர்: தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மீண்டும் உடல்நலம் தேறி பணிகளைத் தொடர வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் நாட்டில் இப்பொழுது பா.ஜ.க.  கால் ஊன்ற ஆசைப்படும்  சூழல் இருக்கிறது. இப்பொழுது கலைஞர் அவர்கள் அவ ருடைய பணிகளை செய்ய முடியாத சூழல் உள்ளதே?
தமிழர் தலைவர் ஆசிரியர்: கலைஞர் அவர்கள் பேசவேண்டிய அவசியமில்லை. கலைஞர் அவர்கள் நடந்துகாட்டிய, வகுத்துக்காட்டிய வியூகங்கள் அப் படியே இருக்கின்றன. அந்த வியூகங்கள், கருவிகள், போர்க் கருவிகள் அப்படியே இருக்கின்றன. அந்தப் போர்க் கருவிகள், பெரியார் கொடுத்த போர்க் கருவி அண்ணா கொடுத்த போர்க்கருவி கலைஞரிடம்  இன்னமும் பளிச்சென்று இருக்கிறது. எனவேதான், ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர்தான் முக்கியமே தவிர, ஆயுதத்தை சில நேரம் பயன்படுத்தலாம், சில நேரம் பயன்படுத்தாமல் வைக்கலாம் - என்றாலும்,
ஆயுதங்கள், ஆயுதங்களே!
செய்தியாளர்: ஆயுதங்களை சரியாகப் பயன் படுத்தவில்லை - செயல்படவில்லையே?
தமிழர் தலைவர் ஆசிரியர்: செயல்படவேண்டிய நேரத்தில் ஆயுதங்கள் சரியாக செயல்படும். காரணம், நாம் எந்த ஆயுதங்களை எடுக்கவேண்டும் என்பதை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்.
அவசியம் வரும்பொழுது இன்னும் கூர்மையாகப் பயன்படுத்துவார்
செய்தியாளர்: தி.மு.க. செயல் தலைவர் அந்த ஆயுதங்களை சரியாகப் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: பயன்படுத்துகிறார். அவசியம் வரும்பொழுது இன்னும் கூர்மையாகப் பயன்படுத்துவார்.
செய்தியாளர்: பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது, அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர் ஆசிரியர்: இதனை வரவேற்று நாங்கள் அறிக்கை கொடுத்திருக்கின்றோம். முதன் முதலில் அண்ணா நூலகத்திற்கு உயிர் வந்திருக்கிறது. அதற்காக 8 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், பள்ளி கல்வித் துறையில் ஒரு நல்ல அதிகாரி வந்திருக்கிறார். அவருக்குரிய ஒத்துழைப்பை அந்தத் துறை அமைச்சர் கொடுக்கிறார்.
தமிழகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு துறை இருக்கிறது என்றால், அது பள்ளிக்கல்வித் துறைதான். அதுபோன்ற அதிகாரிகளும், சகாயம் போன்ற அதிகாரிகளும் வந்தால், ஆட்சி சிறப்பாக இருக்கும் என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.
செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது, பற்றி?
தமிழர் தலைவர் ஆசிரியர்:  அவரே இன்னும் முடிக்கவில்லை, அதனால் வேற விஷயத்தைப்பற்றி கேள்வி கேளுங்கள்.
ஆணவக் கொலை என்கிற பெயரையே நாங்கள்தான் கொண்டு வந்தோம்!
செய்தியாளர்: மத்திய பி.ஜே.பி. ஆட்சி மூன்றாண்டுகளைக் கடந்திருக்கிறது; தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அரசு நூறு நாள்களைக் கடந்திருக்கிறது. இந்நிலையில், மத்தியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.வும் சரி, தமிழகத்திலும் சரி, ஜாதி ஆணவப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;  ஆணவப் படுகொலையினால் இறக்கிறார்கள் - இதனைத் தடுக்க திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படியில்லை என்றால், தமிழகத்தை ஆள்பவரின் தவறா இது?
தமிழர் தலைவர் ஆசிரியர்: உங்களுடைய கேள்வியே தவறு. திராவிடர் கழகம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்பொழுது கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறது. போராட்டங்களை நடத்தியிருக்கிறது. நாங்கள் என்ன அதிகாரத்திலா இருக்கிறோம்? அதிகாரத்தில் இருப்பவர்களின் இயலாமையை சுட்டிக்காட்டி, செயல்பட வைப்பதுதான் எங்களுடைய வேலை. அதற்குத்தான் பிரச்சாரம் செய்கிறோம்; கண்டனக் கூட்டங்களை நடத்துகிறோம். அதற்காக தனிச் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறோம். தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
85-க்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடைபெற்று இருக்கிறது. அந்தக் கொலையை நியாயப்படுத்தவில்லை நாங்கள். 200 கலப்புத் திருமணங்கள் நடைபெற்று, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே, அது  கண்களுக்குத் தெரியவில்லையா? எங்கள் கொள்கை தோற்றுப் போய்விட்டது என்று காட்டுவேண்டும் என்று நினைப்பவர்கள் நிறைய பேர்  ஊடுருவியிருக்கிறார்கள். அதனால், அப்படி காட்டுகிறார்கள். ஒரு ஆணவப் படுகொலை நடந்தாலும் அதனைக் கண்டிக்கவேண்டும். அது வேறு விஷயம்.   5 ஆயிரம் கார்கள் பாதுகாப்பாக சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. 5 கார்கள் விபத்துக்கு ஆளாகின்றன. திருப்பதி கோவிலுக்குச் செல்கிறவர்களும் விபத்திற்கு ஆட்படுகிறார்கள் - அதற்காக யாரும் கோவிலுக்குப் போகாமல் இருப்பதில்லை. கவுரவக் கொலை என்று சொல்லாதீர்கள் என்று சொல்லி, ஆணவக் கொலை என்கிற பெயரையே நாங்கள்தான் கொடுத்தோம்.
அதுமட்டுமல்ல, இன்னமும் அதனைக் கண்டித்து, மத்திய அரசும், மாநில அரசும் அதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம், ஜாதி ஒழிப்பை மய்யப்படுத்திக் கொண்டிருக்கின்ற ஒரே இயக்கம் எங்களுடைய இயக்கம்.
கலைஞரின் வைர விழா அழைப்பிதழ்!
செய்தியாளர்: தி.மு.க. தலைவர் கலைஞரின் வைர விழாவிற்கான அழைப்பிதழை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள் பலருக்கு கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே...?
தமிழர் தலைவர் ஆசிரியர்: இந்தக் கேள்வியை கேட்கவேண்டியது, விழா நடத்துகிறவர்களிடம்தானே தவிர, என்னிடம் அல்ல. அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும். பல காரணங்களை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் காரணத்தில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர்களிடம்தான் திருப்பிக் கேட்கவேண்டுமே தவிர, அதற்கு நான் விளக்கம் சொல்வது நன்றாக இருக்காது.
மடியில் கனம்; வழியில் பயம்!
செய்தியாளர்: தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கின்ற முதலமைச்சராக இருந்தாலும் சரி, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, முன்னாள் முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் சரி அவர்கள்மீது உள்ள குற்றச்சாட்டினால்தான், மத்தியில் உள்ளவர்கள் இவர்களை ஆட்டுவிக்கிறார்கள் - நீங்கள் குறிப்பிடுவதுபோல அந்தக் குற்றச்சாட்டினால்தான் இவர்கள் அடிமைகள்போல் இருக்கிறார்கள். அந்தக் குற்றச்சாட்டு உள்ளவர்களை விலக்கி, புதியவர்களை நியமிக்கவேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துகிறீர்களா?
தமிழர் தலைவர் ஆசிரியர்: பதவி சுகம் கண்டவர்கள் யாரும் விலகமாட்டார்கள்.  மடியில் கனம், வழியில் பயம்.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...